Wednesday, March 20, 2019

கார் கட்டு!

   கார் கட்டு!   
         
    
அந்த தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து நகரினுள் வேகமாக நுழைந்தது பெருவேகமாய் வந்த கார். காரை ஒரு இருபது வயது இளம்  யுவதி செலுத்திவர மேலே பேனெட்டில்  இளைஞன் ஒருவன் கட்டப்பட்டிருந்தான். அவன் வாய், ஏய்… நிறுத்து…! நிறுத்து..! ஸ்டாப்…! ஸ்டாப்..!  ஸ்டாப் தட் இடியட் கேர்ள்!  இதற்கெல்லாம் நீ அனுபவிப்பாய்! என்று கத்திக் கொண்டிருக்க, கடைத்தெருவில் காய்கறி வாங்குவதிலும் மளிகைப் பொருட்களை வாங்குவதுமாய் இருந்தவர்களும் உடன் பயணித்த வாகனத்தில் இருந்தவர்களும் வித்தியாசமாய் பார்த்தார்கள்.
   ஏய்.. அதோ பாருடா! காரு மேல ஒருத்தன் கட்டிப் போட்டிருக்கு..!
 சினிமா ஷூட்டிங்கா?
அந்த பொட்டைப் பொண்ணுக்கு என்னா துணிச்சல் இருந்தா ஒரு ஆம்பளையை இப்படி கார்மேல கட்டி வச்சிக்கிட்டு போவும்…!
ஆளாளுக்கு முணுமுணுத்தார்களே தவிர ஒருவரும் அந்த காரை மடக்கவோ வழிமறிக்கவோ இல்லை.
  கார் மிகவேகமாக அந்த நகரத்தைக் கடந்து ஒரு கிளைச்சாலையில் பிரவேசித்தது. ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சென்று ஒரு தன்னந்தனியான பங்களா முன் நின்றது.
  காரை நிறுத்தி இறங்கிய அந்தப் பெண். காரின் மேல் கத்திக் கொண்டிருந்தவன் கன்னத்தில் ஓர் அறைவிட்டாள். இடியட்! இன்னுமா கத்திக் கொண்டிருக்கிறாய்! உன் கத்தல் இனிமேல் யார் காதுக்கும் எட்டாது! என்றவள் கார் கதவைத் திறந்து உள்ளே இருந்த சூட்கேஸ்களை எடுத்தாள்.
    சூட்கேஸ்களை எடுப்பதை பார்த்தவன் மேலும் கத்தினான். அடியேய்! பாவி! அது எல்லாம் நான் உழைத்து சம்பாதித்த பணம்டி!
   ஹா..ஹா! இருக்கட்டுமே! என்றவள் சூட்கேஸில் இருந்த  ஒரு நெக்லஸை எடுத்து அணிந்து கொண்டு மிரரில் பார்த்தாள்.
      எவ்வளவு ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து இந்த நெக்லஸை வாங்கிக் கொடுத்தேன். இப்படி என்னை ஏமாற்றிவிட்டாயேடி!
   ஏன்? ஏமாற்றுவது எல்லாம் ஆண்களின் சொத்தா? பெண்கள் ஏமாற்றக் கூடாதா என்ன?
      உன் அழகிலும் பேச்சிலும் மயங்கி பெற்றோரை எதிர்த்து உன்னை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கொண்டேனே… எனக்கு சரியான தண்டணை கிடைத்து இருக்கிறது..!
      ஹாஹா! இந்த அழகு! இதுதான் என் மூலதனம்! இதை வைத்து நான் எத்தனையோ பேரை ஏமாற்றிவிட்டேன். நீ இருபத்தைந்தாவது நபர். சில்வர் ஜுப்ளி அதற்கேற்ற பணமும் நகையும் கிடைத்துவிட்டது. இன்னும் சில நிமிஷத்தில்  என் கூட்டாளி இங்கே வருவான். அவனோடு நான் கிளம்பிவிடுவேன். இன்னும் கொஞ்சநாள் தலைமறைவு வாழ்க்கை! அப்புறம் இன்னொருத்தன் ஏமாறாமலா போய்விடுவான்?
     ப்ளீஸ்! வேண்டாம்! உன் பழைய குற்றங்களையெல்லாம் மன்னித்துவிடுகிறேன். உன்னை என்னால் மறக்கமுடியவில்லை! திருந்திவிடு! நாம் சேர்ந்து வாழலாம்.
    நீ என்ன என்னை மன்னிப்பது? உன்னோடு வாழ நான் தயாரில்லை! புதுப்புது நபர்கள்! புதுப்புது நகர்கள்! புதுப்புது அனுபவங்கள்! என் மனம் புதியதையே நாடுகிறது! நீ பழையவன் ஆகிவிட்டாய்!
   என்னை அவிழ்த்துவிடு! அவன் கத்தினான்.
உன்னை பேசவிட்டதே தவறு! என்று ஒர் ப்ளாஸ்திரியை அவன் வாயில் பொறுத்தினாள். சூட்கேஸ் இரண்டில் ஒன்றில் கட்டு கட்டாய் பணம். இன்னொன்றில் நகை துணிமணிகள். அனைத்தையும் சரிபார்த்தாள். இன்னும் ஏன் நம் சகா வரவில்லை… பொறுமை இழந்தாள்.
  மேலும் சிலநிமிடங்கள் கடந்தபின்  ஒரு ஜீப்பில் அவன் வந்தான். ஏன் இவ்வளோ  லேட்? என்று கத்தினாள்.
   வழியில் ஜீப் மக்கர் செய்துவிட்டது. டயர் பஞ்சர்…
  ஏன் இவன் வாயை அடைத்திருக்கிறாய்?
போடா முட்டாள்! இவனுக்கு என்ன மயக்க மருந்து கொடுத்தாய்? பாதிவழியில் விழித்துக் கொண்டு ஒரே கலாட்டா? விடாமல் பிணாத்திக்கொண்டே இருக்கிறான்.! அதான் வாய்க்கட்டு போட வேண்டியதாகிவிட்டது.
   சரி..சரி இஞ்செக்‌ஷணை எடு! அவனுக்கு போட்டு அந்த ஜீப்பில் தூக்கி வீசு..!
   காரின் நம்பர் ப்ளேட் மாற்று! டிசைன் மாற்று ஆகட்டும் சீக்கிரம்!
வந்தவன் இஞ்ஜெக்‌ஷன் போட  நெருங்கும் சமயம்  சைரன் ஒலிக்க சூழ்ந்து கொண்டது போலீஸ் டீம்.
     காரில் கட்டுப்பட்டு இருந்தவன்,  ஹாஹாஹா! என்று சிரித்தான்…!
  மாட்டிகிட்டியாடி என் மரிக்கொழுந்தே!  எப்படி எப்படி? நான் இருபத்தைந்தாவது ஆளா? சில்வர் ஜுப்ளியா? இதோடு உன் ஆட்டத்துக்கு நிறைவு விழா,
     அந்தப் பெண் திகைத்து நிற்க, சூழ்ந்த போலீஸ் அவள் கைகளிலும் அவளது சகாவின் கைகளிலும் விலங்கை மாட்டியது.  நீ எப்படி ஒவ்வொரு ஊரிலேயும் மேட்ரிமோனியல் சைட்ல புகுந்து இளைஞர்களை வசப்படுத்தி ஏமாத்தி கல்யாணம் பண்ணி சுருட்டறேங்கிறது எங்க போலீஸ் டீமுக்கு தகவல் வந்திருச்சு. உன்னை பிடிக்க வலை விரிச்சோம். மேட்ரிமோனியல் சைட்ல மாப்பிள்ளையா அறிமுகம் ஆகி பெரிய கோடீஸ்வரனா நடிச்சேன். நீயும் ஏமாந்திட்டே. நானும் ஏமாந்த மாதிரி நடிச்சு  உன் ஆட்டத்துக்கு எல்லாம் ஒத்துழைச்சேன்.
       ரிசார்ட்ல எனக்கு  மயக்க மருந்து கொடுத்தபோது அந்த பாலை குடிக்காம கீழே கொட்டி மயக்கம் வந்த மாதிரி நடிச்சு நீ கட்டி போட ஒத்துழைச்சேன். அப்பவே என் போன்ல ஜி.பி,எஸ் ஆன் பண்ணி உள்ளே வைச்சிட்டேன்.
    ஜி.பி,எஸ் சிக்னல் வைச்சு இப்ப ஒண்ணை மடக்கியாச்சு! வாம்மா! மாமியார் வீட்டுக்கு போவோம்! என்றான் அந்த இளம் எஸ்.ஐ. கண்ணடித்து!

பதிவர் கணேஷ்பாலா  முகநூலில் வைத்த போட்டோ கதைப்போட்டியில் கலந்து கொண்டு நான் எழுதிய கதை!  தலைப்பை மட்டும் மாத்தி இங்கே பதிவிட்டுள்ளேன்!  நீண்ட நாளுக்கு பின் எழுதியதால்  நிறைய தப்பு இருக்குது போல பரிசுக்கு தேர்வாகவில்லை!  இந்த கதையில் ஒரு புதுமை புகுத்தி இருக்கேன்! இன்னான்னு சொல்லுங்க பார்க்கலாம்!Tuesday, March 19, 2019

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

வெள்ளை அடிக்கையில்
அழுக்காகிப் போனது!
பக்கத்துவீடு!

கொளுத்தும் வெயில்
குடையாய் வந்தன
மரங்கள்!

பிம்பங்கள் பெரிதாகையில்
தொலைந்து போகின்றது!
நிஜம்!

தொட்டியில் அடைபட்டது
வாஸ்து மீனின்
சுதந்திரம்!

கண்டித்தாலும் விடுவதில்லை
குழந்தைக்கு
மண்ணாசை!
மேடு பள்ளங்கள்!
தடுத்து நிறுத்துகிறது
வாழ்க்கையின் ஓட்டத்தை!

விரல் அசைவில்
பிறக்கின்றன
எழுத்துக்கள்!

நினைவுகள் பூக்கையில்
வாசம் வீசியது
நட்பு.

இருள் கவ்விய சாலைகள்!
மிளிர்ந்தன
வாகன வெளிச்சம்!

அமாவாசை இரவு
நெருங்கி வந்தன
நட்சத்திரங்கள்!

விழித்து எழுந்ததும்
கலைந்து போனது
கனவு!

இலையுதிர்த்த மரங்கள்!
காணாமல் போனது
நிழல்!

கொட்டிக்கிடந்தது
பிச்சைக்காரர்களிடம்
சில்லறை!

தூரப் போகிறார் கடவுள்!
நீண்டு கொண்டே போகிறது!
தர்ம தரிசனம்!

விலை நிர்ணயம் ஆனதும்
உரிமை பறி போகிறது!
தேர்தல்!


நிறுத்தம் வந்ததும்
பிரிந்து போகிறது சிநேகம்!
பேருந்துப் பயணம்!

பின் குறிப்பு} நீ,,,,ண்ட இடைவெளிக்குப் பிறகு ஹைக்கூ எழுதியுள்ளேன்! பழைய கூர்மை இருக்காது…  மீண்டும் தொடர ஆசை! பார்ப்போம்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Friday, March 8, 2019

சின்னப்பூக்கள்! சிறுவர் மின்னிதழ் மார்ச் 2019


தேன்சிட்டு பல்சுவை மின்னிதழ்! மார்ச் 2019


Thursday, February 7, 2019

தேன்சிட்டு பல்சுவை மின்னிதழ்! பிப்ரவரி 2019

பல்சுவை மின்னிதழை படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்! இதழில் உங்கள் படைப்புக்கள் இடம்பெற உங்கள் படைப்புக்களை இந்தமாதம் 20ம் தேதிக்குள் thalir.ssb@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்! வலைப்பதிவு தோழமைகளின் அதிக பங்களிப்பை தேன்சிட்டு விரும்புகிறது. நன்றி!

Tuesday, January 15, 2019

சின்னப்பூக்கள் சிறுவர் மின்னிதழ் ஜனவரி-2019


Thursday, January 10, 2019

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 99


1.அதோ போறாரே அவருக்கு பெரிய கோடீஸ்வரர் ஆகிற வாய்ப்பு வந்திருக்குது...!
     எப்படிச்சொல்றே?
”அப்பல்லோ”விற்கு இட்லி சப்ளை செய்யற காண்ட்ராக்ட் கிடைச்சிருக்காம்!


2.தலைவர் பேசிக்க்கிட்டிருக்கும் போதே கூட்டம் கலைஞ்சு ஓடுதே ஏன்?
  தலைவர் பேசி முடிச்சதும்  “பிரியாணி” வழங்கப்படும்னு அறிவிப்பு வந்துருச்சாம்!3.கட்சி தொடங்கறதா அறிவிச்சு இன்னியோட ஒரு வருஷம் முடியப்போவுது தலைவரே...!
   அப்போ  திரும்பவும் ஒரு மீள் அறிவிப்போட  புதுப்படத்தை ரிலீஸ் பண்ண வேண்டியிருக்கும்னு சொல்லு!


4. மன்னருக்கு  “நாக்கு ருசி” அதிகம்னு எப்படி சொல்றே?
    ராப்பிச்சை வேஷத்துலேயே தினமும் நகர்வலம் போறாரே...!5.புலவரே  என்னைப் போற்றி ஏதாவது பாடுங்களேன்...!
     இப்படித்தான் எதையாவது சொல்லி “என் வாயைக் கட்டிப்போட்டுவிடுகிறீர்கள்  மன்னா!


6.மன்னரின் வில்லோடு விளையாட நிறைய பேர் காத்திருக்கிறார்களாமே...!
   நீ வேற  அவர் பேரப்பிள்ளைகள் வில்லை வைத்து விளையாடுவதைத்தான் அப்படிச்சொல்லித் திரிகிறார்!


7.அந்த மேனேஜர் தீவிர விஜய் ரசிகராம்!
  அதுக்காக கம்பெனிக்கு “விஸ்வாசமா” நடக்க முடியாதுன்னு சொல்றது ரொம்ப ஓவர்!


8.கட்சியிலே ”குழுத்துரோகம்” பண்ணிட்டாங்கன்னு சிலரை தலைவர் நீக்கினாரே எதுக்கு?
  ”வாட்சப் குழு” ஒண்ணு போட்டியா ஆரம்பிச்சவங்களைத்தான் அப்படி சொல்லி நீக்கியிருக்காரு!

9.போர்க்களத்தில் மன்னர் எதற்கு டாஸ் போட்டு பார்க்கிறார்?
சரணாகதி அடையலாமா புறமுதுகிட்டு ஓடலாமா என்று பார்க்கத்தான்.

10. தலைவர், மேடையில்:              இடைக்கால நிவாரணமாய் வந்த இடைத்தேர்தலை புரட்டுக்கள் பேசி நிறுத்தி வைத்த எதிர் கட்சிகளை வன்மையாக கண்டிக்கிறேன்...!

11. யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னேங்கிறது தலைவர் வாழ்க்கையிலே சரியா போச்சு!
      எப்படி சொல்றே?
முதல்ல ரெய்டு வந்தது! அப்புறம் கூட்டணி வந்திருக்கே...!

12.    உங்க ஓட்டல்லே ரெய்டு வந்தது பத்தி என்ன நினைக்கிறீங்க...!
      அந்த விஷயத்தை இன்னும்  ஜீரணிக்கவே முடியலைங்க!

13. எதிரி அசந்து போய் நின்றுவிட்டானாமே...!
    ஆம் நம் மன்னர் இவ்வளவு வேகமாக ஓடுவார் என்று எதிர்பார்க்கவே இல்லையாம்!

14. தலைவர் வாழ்க்கையிலே புயல் ஓர் வசந்தத்தையே ஏற்படுத்திவிட்டுருச்சாமே...!

     சும்மாவே பின்னே...! பல கோடி நிவாரணப் பொருட்களை  ஏப்பம் விட்டிருக்காரே...!

15.  இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை! தானா சேர்த்த கூட்டம்...!
         பீச்சுலே காத்து வாங்க வந்த தலைவருக்கு அலம்பலைப் பாரு....!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
     
Related Posts Plugin for WordPress, Blogger...