அரச மரத்தின் அவசர புத்தி.

 

 அரச மரத்தின் அவசர புத்தி.

   நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு



திருப்பாதிரி புலியூர் என்ற கிராமத்தின் ஏரிக்கரையையின் மீது ஓர் அரசமரம் ஓங்கி வளர்ந்து இருந்தது. அதன் கிளைகள் நன்கு அடர்ந்து விரிந்து கரையோரம் நிழலாக விழுந்து சாலையில் செல்பவர்களுக்கு இளைப்பாறும் இடமாகவும் இருந்தது.

 அந்த அரச மரத்தின் அடியில் விநாயகர் சிலை ஒன்று இருந்தது. ஏரிக்கரைபிள்ளையார் என்று அப்பிள்ளையாரை மக்கள் அழைத்தனர். ஊர்மக்கள் அந்த வழியாக செல்லும் போது அந்த பிள்ளையாரை வணங்கி வழிபட்டு செல்வது வழக்கம்.

 குறிப்பாக முக்கியமாக ஏதாவது காரியத்தில் வெற்றிபெற வேண்டுமெனில் அந்த பிள்ளையாருக்கு தோப்புகரணம் போட்டு வணங்கிவிட்டுச்செல்வர். அப்படி வணங்கிவிட்டு சென்றால்அவர்கள் செல்லும் காரியம் ஜெயமாகும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

 இப்படி அந்த மக்கள் பிள்ளையாரை வணங்கிச்செல்வதை  அங்கு வளர்ந்திருந்த அரசமரம் தன்னைத்தான்  வணங்கிவிட்டுச் செல்கிறார்கள் என்று தவறாக நினைத்துப் பெருமைப்பட்டுக்கொண்டது. நான் தான் இவ்வூரிலேயே பெரியவன். எனவே  இவ்வூர் மக்கள் எல்லோரும் என்னை தினமும் வணங்கிவிட்டுச் செல்கிறார்கள். அவர்களை காக்கும் கடவுள் நான் தான் என்று கர்வப்பட்டுக் கொண்டது.

  அரசமரத்தின் அடியில் இருந்த பிள்ளையாருக்கு அரசமரத்தின் எண்ணம் தெரிந்துவிட்டது. அதற்கு புத்திமதி சொல்ல நினைத்து அரசமரத்திடம் பேச ஆரம்பித்தார்.

  ”அரசமரமே! என்ன ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறாய்?” என்று ஒன்றும் தெரியாத்து போல் கேட்டார்.

  பிள்ளையாரே! என் மகிழ்ச்சிக்கு காரணம் உனக்குத் தெரியாதா? இருந்தாலும் சொல்கிறேன் கேட்டுக்கொள். இந்த பகுதியிலேயே உயர்ந்தவன் நான். எவ்வளவு உயரம் ஒங்கி வளர்ந்திருக்கிறேன் பார்த்தாயா? இவ்வூர் மக்களுக்கு நிழல் தருகிறேன். அவர்கள் அதனால் என்னை மதித்து வணங்கி வழிபட்டுச்செல்கிறார்கள் என்று கர்வமாகச் சொல்லியது.

  ”ஓஹோ இதானா விஷயம்? அரசமரமே நீ தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய்?  உன் அடியில் நான் அமர்ந்திருக்கிறேன். என்னைத்தான் மக்கள் வணங்கி செல்கிறார்கள். அவர்கள் பிள்ளையாரப்பா!  என்று சொல்லி கன்னத்தில் போட்டுக்கொள்ளுவது உன் காதில் விழவில்லையா?” என்று கேட்டார் பிள்ளையார்.

  இதைக்கேட்டதும் அரச மரத்திற்கு பொசுக்கென்று கோபம் வந்துவிட்டது.  நூறு பேர் இந்த வழியாக போனால் யாரோ ஓரிருவர்தான் நின்று பிள்ளையாரப்பா! என்று சொல்லி கன்னத்தில் போட்டு  தலையில் குட்டிக்கொண்டு செல்வார்கள். மற்றவர்கள் அனைவரும் வேகமாக கன்னத்தில் போட்டுக்கொண்டு கையெடுத்து கும்பிட்டுச் செல்கிறார்களே அது உன் கண்ணுக்குப் படவில்லையா? என்று கேட்டது.

  இது அவசர யுகம்! இதில் பேர் சொல்லி வழிபட எல்லாம் அவர்களுக்கு நேரமில்லை. முழு முதற் கடவுளான என்னை பார்த்தாலே போதும் என்று வணங்கிச்செல்கிறார்கள். இதை நீ தவறாக புரிந்து கொண்டு உன்னை வணங்குவதாக நினைத்துக் கொள்கிறாய்? அந்த எண்ணத்தை விட்டொழி. இந்த மனிதர்கள் பொல்லாதவர்கள். அதை நீ அறிந்து கொள்ள வேண்டும் என்றார் பிள்ளையார்.

   என் மீது உனக்குப் பொறாமை! சொல்லப்போனால் உனக்கே நான் தான் நிழல் தருகிறேன். அப்படி  இருக்கையில் உன்னை வணங்கி செல்கிறார்கள் என்று புளுகுகிறாயே! நான் இடம் தராவிட்டால் உனக்கு இங்கே நிழலில்லை என்று ஆணவத்துடன் பேசியது அரசமரம்.

  சிலருக்குப் பட்டால்தான் புத்திவரும். உனக்கும் அப்படித்தால் போல! இனி நான் உன் விஷயத்தில் தலையிடவில்லை. என்று மவுனித்தார் பிள்ளையார்.

 இது நடந்த சில மாதங்களில் அங்கே சிலர் கூடினர். ஏதோ கருவிகளை வைத்துக்கொண்டு சாலையை அளந்தனர். அரசமரத்தின் அடியில் கூடிப் பேசினர்.

  சாலை விரிவாக்கத்திற்கு இந்த மரமும் பிள்ளையாரும் இடைஞ்சலாக இருக்கிறது எனவே பிள்ளையார் சிலையை அகற்றி அரச மரத்தை அகற்றிவிடவேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

 அப்போது அங்கே வந்த ஊர்ப் பெரியவர், அவர்களிடம், ஐயா சாலை விரிவாக்கம் அவசியம் தான். ஆனால் இந்த பிள்ளையார் தலைமுறை தலைமுறையாக இந்த ஏரிக்கரையில்  இம்மரத்தின் அடியில் இருந்து எங்களுக்கு அருள் பாலிக்கின்றார். எங்கள் ஊர் மட்டுமல்ல! இவ்வூர் வழியாக செல்லும் எல்லோருமே இந்த பிள்ளையாரை வணங்கி சென்றால் காரிய சித்தியாகும் என்று நம்பிக்கையோடு வழிபாடு செய்து வருகின்றனர். எனவே சாலையை  கொஞ்சம் தள்ளி அமைக்க வேண்டும். இந்த பிள்ளையாரை இங்கிருந்து அகற்ற அனுமதிக்க முடியாது என்று சொன்னார்.

  அப்புறம் அங்கே பெரும் விவாதங்கள் நடந்தது இதையெல்லாம் அரசமரம் பார்த்துக் கொண்டிருந்தது. எங்கே தம்மை வெட்டி விடுவார்களோ என்று அஞ்சியது. பிள்ளையார்  அப்போதும் மவுனமாக இருந்தார்.

     ஏன் பிள்ளையாரே மவுனமாக இருக்கிறாய்? ஏதாவது செய்யேன்? என்றது அரச மரம்.

   நான் என்ன பண்ண முடியும்? நீதான் உயர்ந்தவன் வளர்ந்தவன் ஆயிற்றே? நீயே இப்படி பயந்தால் எப்படி என்றார் பிள்ளையார்.

  பிள்ளையாரப்பா! அவசரப்பட்டு  ஆணவத்தில் ஏதேதோ பேசிவிட்டேன். என்னைக் காப்பாற்று என்றது மரம்.

   ஒன்றும் பயப்படாதே! நீ வளர்ந்திருக்கும் அளவுக்கு உன் அறிவு வளர வில்லையே!  நீ நிழல் தருவதோடு மட்டுமல்ல! மரங்களின் ராஜாவாகவும் இருக்கிறாய்? உன் வேர்களும் பட்டைகளும் மருந்தாக பயன் படுகிறது. அதில்லாமல் அதிக அளவு ஆக்ஸிஜனை வெளியிட்டு சுற்றுச்சுழலை பாதுகாக்கிறாய்? கபம் பித்த நோய்களை போக்குகிறாய்? இத்தனை பயன்கள் உன்னுள் இருக்கையில் உன்னை வெட்ட விடுவேனா?  கொஞ்சம் பொறுத்திரு! நடப்பதைப் பார் என்றார். பிள்ளையார்.

   அப்போது அங்கே பசுமைக் காப்பாளர்கள் சூழலியல் ஆர்வலர்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் கையில் ஏதோ ஒரு காகிதம் இருந்தது. அதை அங்கேயிருந்த  அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

 அதை வாங்கிப் படித்த அதிகாரிகள் , இந்த மரத்தையும் பிள்ளையாரையும் இங்கிருந்து அகற்ற கூடாது என்று நீதிமன்ற ஆணை அனுப்பி இருக்கிறார்கள். மாற்றுவழியில் பாதை அமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். எனவே இந்த மரத்தையும் பிள்ளையாரையும் இனி அகற்றப் போவது இல்லை. உங்களுக்கு மகிழ்ச்சிதானே என்று ஊர்ப் பெரியவரிடம்  கேட்டனர் அதிகாரிகள்.

  ஆஹா! மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி என்றார் பெரியவர். அதைத்தொடர்ந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

  பிள்ளையாரப்பா! நல்ல வேளை நாம் பிழைத்தோம்!  இந்த நீதிமன்ற ஆணையை வாங்கி வந்த புண்ணியவான் யாரோ? அவன் பல்லாண்டு வாழட்டும் என்றது அரச மரம்.

 அவன் என் பக்தன் தான்! பேர் கணபதி  என்றார் பிள்ளையார் நமுட்டுச்சிரிப்புடன்.

 

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து செல்லுங்கள்! நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!