பனிக்காலம் நன்று!

பனிக்காலம் நன்று!

மார்கழி மாதத்தில் அதாவது டிசம்பர் மாதத்தில் தான் தமிழகத்தில் குளிர் வாட்டி எடுக்கும். மூடு பனி போர்த்திக் கொண்டு சாலைகள் தெரியாது. வாகனங்கள் முகப்புவிளக்கு ஒளிரவிட்டுச் செல்லும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மாசி மாத நிறைவில் சிவராத்திரியுடன் பனிக்காலம் நிறைவு பெறும்.
  பெரியவர்கள் சிவராத்திரியோடு குளிர் “சிவசிவா”ன்னு போயிடும் என்று சொல்லக் கேட்டுள்ளேன். அதே மாதிரி நிலை சிலவருடங்கள் முன் வரை இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் வானிலை மாறி வருகிறது.  மார்கழி மாதத்தில் பனி அவ்வளவாக தெரியவில்லை! மார்கழி மாத இறுதியில் கொஞ்சம் கடுமையான பனி இருந்தது. பின்னர் பனி விலகி வெயில் கொளுத்த ஆரம்பித்தது.
    மாசி மாதம் தொடங்கியவுடன் வெயில் கோடை வெயில் போல கொளுத்த ஆரம்பித்தது. ஆனால் திடீரென இரண்டு மூன்று நாட்களாக அதிகாலையில் கடும் பனி பொழிந்து வருகிறது. எதிரே வருவது தெரியாத அளவிற்கு பனிப்புகை மண்டியுள்ளது. மனிதன் மாற மாற காலநிலையும் மாறி வருவது வேதனைக்குரியது. இயற்கை வளங்களை சுரண்ட சுரண்ட இயற்கை நம்மை கடுமையாக தண்டித்து வருகிறது. மழை சரிவர பெய்யவில்லை! வெயிலின் அதிக தாக்கம், கடும்பனி  போன்றவை மனிதர்களிடையே புதிய நோய்களையும் பரப்பும்.
   ஆனால் இயற்கையை மதிக்காமல் முடிந்த வரை சுரண்டிக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் எங்கள் ஊர் பக்கம் சாலைகளில் இரண்டு புறமும் மரங்கள் அணிவகுத்து நிற்கும். புளியமரங்கள் நான்கு நபர்கள் கை கோர்த்து நின்றால் கூட கட்டிப்பிடிக்க முடியாத பருமன் உடையவை. அவையெல்லாம் நான்கு வழிச் சாலை ஆறு வழிச் சாலை என வெட்டி சாய்க்கப்பட்டு தூங்கு மூஞ்சி மரக் கன்றுகள் நடப்பட்டன. இப்போது அவையும் வெட்டப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஏகப்பட்ட வாகனங்கள் புகை கக்கி செல்கின்றன.  சித்திரை மாதங்களில் இந்த புளிய மர மகசூல் ஏலம் விடப்படும். சுற்று வட்டார மக்கள் மூட்டை மூட்டையாக புளியம்பழங்கள் வாங்கி செல்வார்கள். குறைந்தவிலையில் கிடைக்கும். இன்றோ மரங்களையும் இழந்து அதன் பயன்களையும் இழந்து வெறும் சாலைகளை மட்டுமே பெற்று இருக்கிறோம். வளர்ச்சி தேவைதான்! ஆனால் இது போன்ற வளர்ச்சி தேவையா? கிராம விளைநிலங்கள் வீட்டுமனைகளாகிவிட்டன. மூன்று போகம் விளைந்த நிலங்கள் இன்று கான்கிரிட் காடுகள் ஆகிவிட்டன. ஏரிகுளங்களை தூர் வாராமல் ஆற்று மணலை கண்டபடி அள்ளியதன் விளைவு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து நன்னீர் உவர் நீராகி கிராமங்களில் கூட குடிதண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை! இப்படிப்பட்ட நிலையை ஏற்படுத்திக் கொண்டது யார்? நாம்தான்! இதுவரை சுரண்டியதற்கே இந்த நிலை! இன்னும் சுரண்டிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? உலக அழிவுதான்! அழிக்க போவது மனித இனம்தான். ராட்சதர்கள் என்று ஒரு இனம் புராணங்களில் உண்டு. அவர்கள் கூட தன்னை தானே அழித்துக் கொள்ள மாட்டார்கள். எதிரியைத்தான் அழிப்பார்கள்! ஆனால் மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான்!  அப்படி என்றால் மனிதனுக்கு மனிதனே முதல் எதிரி ஆகிறான்!  இனியாவது விழித்து திருந்தட்டும்.
  இப்போது ஒரு இலக்கியச்சுவையை பார்ப்போம்!  பனிக்காலம் பற்றி பேசினோம் அல்லவா? அதைப் பற்றிய சுவை மிகுந்த  நிகழ்ச்சி இது.
     மார்கழிமாத குளிர் காலம், விடியல்காலை நேரம். கம்பளிப் போர்வையை சுற்றிக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்தார் ஒரு புலவர். அந்த சமயம் இன்னுமொரு புலவர் அந்தப் பக்கம் சால்வையைப் போர்த்திக் கொண்டு வந்தார்.
வந்த புலவரை பார்த்து முதல் புலவர், “பனிக்காலம் கொடிது” என்றார்.
 இரண்டாமவரோ அதை மறுப்பது போல தலையசைத்து, “ பனிக்காலம் நன்று”  என்றார்.

முதல் புலவர் சற்று யோசித்தார், பின்னர் சிரித்தபடி, ஆமாம்! ஆமாம்! “பனிக்காலம் நன்று” என்று  இரண்டாமவரை ஆமோதித்தார்.
  இருவர் பேச்சையும் கவனித்துக் கொண்டிருந்த வழிப்போக்கர் ஒருவர் குறுக்கிட்டு “ என்ன ஓய் புலவரே! முதலில் பனிக்காலம் கொடிது என்றீர்கள் இவர் சொன்னார் என்பதற்காக இப்போது பனிக்காலம் நன்று என்று கட்சி மாறி விட்டீர்களே? என்று முதல் புலவரை பிடித்து உலுக்கினார்.
    “நானும் கட்சி மாறவில்லை! இவரும் நான் சொன்னதை மறுக்கவில்லை! என்று சிரித்தார் முதல் புலவர்.
  “ என்ன குழப்புகிறீர்கள்?” என்றார் வழிப்போக்கர்.
முதல் புலவர் சொன்னார், நான் பனிக்காலம் கொடிது என்று மட்டும் தான் சொன்னேன். இவர் அதை மறுக்கவில்லை. அது எத்தனை கொடிது என்றுதான் சொன்னார். பனிக்காலம் நன்று. பதம் பிரித்து பாருங்கள். பனிக்கு ஆலம் நன்று. ஆலம் என்றால் விஷம். அதாவது பனியைவிட விஷம் நன்று. அப்படியென்றால் விஷத்தை காட்டிலும் கொடியது பனி. இப்போது புரிகிறதா? என்றார்.
    புலவர்களின் சொல்விளையாட்டை புரிந்து கொண்டு வியந்தார் வழிப்போக்கர்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. சரியா சொன்னீங்க தம்பி.இயற்கையை நாம் தான் ஏமாற்றிகொண்டிருக்கிறோம்

  ReplyDelete
 2. எல்லாமே காலம் தவறித் தான் நடக்கிறது .
  சிலேடை அருமை.

  ReplyDelete
 3. ஹா ஹா ஹா !!! இந்த புலவர்கள் பேசி பேசியே அந்த காலத்து அரசர்களை கைக்குள் எப்படி அடக்கி வைத்திருந்தார்கள் என்று இப்போது புரிகிறது.

  அருமையான பதிவு நண்பரே! வருடம் மும்மாறியும் மழை பொழியும் என்று சொல்லி கேட்டிருக்கேன், இப்போதெல்லாம் எப்ப மழை பொழிகிறது என்றே தெரியவில்லை, இந்த வருடம் தண்ணீர் போகும் அளவுக்கு மழையே பொழியவில்லை. என்ன கொடுமை! பாருங்க, "இயற்கையை அழிக்காதீர்கள் அது நுனி மரத்தில் நின்றுக்கொண்டு அடி மரத்தை வெட்டுவதற்கு சமம்."

  ReplyDelete
 4. ரொம்ப நல்ல பதிவுங்க இது... நான் கூட இது குறித்து பதிவு பண்ணனும்னு இருக்கேன்... காலத்திற்கேற்ற கட்டுரை...புலவர்களின் பேச்சு அருமை...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2