வேலூர் விஜயம் 3
வேலூர் விஜயம் 3
யூத் சர்வீஸிற்கு அப்ளை
செய்து விட்டு இண்டர்வியுவிற்கு அழைப்பும் வந்துவிட்டது. கோபிச்செட்டிப்பாளையத்தில்
பயிற்சி வகுப்புகள்! வீட்டில் போகக்கூடாது என்று ஒரே பிடிவாதம் பிடித்துள்ளார்கள்.
இதெல்லாம் சரிபட்டு வராது. பேசாமல் டீச்சர் டிரெய்னிங் சேர்ந்து படி உள்ளூரிலேயே வேலை
வாங்கி விடலாம் என்றெல்லாம் கூறியுள்ளார்கள். ஆனால் மாமாவுக்கு அதில் எல்லாம் உடன்பாடு
ஏற்படவில்லை!
எப்படியோ கொஞ்சம் பணம் தேத்திக் கொண்டு கோபிக்கு
புறப்பட்டு விட்டார். அங்கு இவர் ஐயர் என்றதுமே இண்டர்வியு செய்தவர், ஏம்பா! இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு
வருமா? இது பசங்களுக்கு ஸ்போர்ட்ஸ் சொல்லிக் கொடுக்கணும். கிராமம் கிராமமா சுத்தி விவசாய
வேலை செய்யனும்.உனக்கு ஒத்து வராதே! என்று இழுத்துள்ளார்.
நான் ஸ்போர்ட்ஸ் சர்டிபிகேட் எதுவும் வெச்சில்லேன்னாலும்
நல்லா ஸ்போர்ட்ஸ் விளையாடுவேன். ஊருல விவசாயமும் பாத்துகிட்டுதான் இருந்தேன். எப்படியும்
கவர்மெண்ட் வேலை வாங்கிடனும்னு ஆசையோட வந்திருக்கேன் என்று இவர் சொல்லவும், நீ விளையாடினா
போதாதுப்பா! பசங்களுக்கும் கத்துக் கொடுக்கணும். என்னமோ போ! இன்னிக்கு நான் செலக்ட்
பண்றதா இருந்ததாலே நீ தப்பிச்சே! ரெகமண்டேசனும் இல்லை! இந்த வேலைக்கு தகுதியை விட ரெகமண்டேசந்தான்
முக்கியம்! நீயோ ஐயிரு! கட்சிக்காரணும் இல்லை! இருந்தாலும் நான் செலக்ட் பண்ணிவிடறேன்!
அப்புறம் உன் அதிர்ஷ்டம் என்று அந்த அதிகாரி இவரை செலக்ட் செய்து விட்டுள்ளார்.
அங்கே இவருடன் ஒரே அறையை இன்னும் இருவர் பகிர்ந்து
கொண்டுள்ளனர். அதில் ஒருவர் கன்னியாகுமரியை சேர்ந்தவராம். இன்னொருவர் திருத்தணி பக்கமாம்.
இவருண்டு இவர் வேலை உண்டு என்று இருந்தாலும் கன்னியா குமரியை சேர்ந்தவர் இவரை அடிக்கடி
வம்புக்கு இழுப்பாராம். இவர் அணிந்திருக்கும் பூணுலை பிடித்து இழுப்பாராம். ஒருநாள் கோபம் வந்து இவர் அவரை மிகவும் வேகமாக கடிந்து
கொண்டு அடிக்கும் வரை சென்று விட உடனிருந்தவர்கள் விலக்கிவிட்டார்களாம்.
நீ எப்படி இங்கு வேலைக்கு வந்திருக்கிறாயோ அதே
போல நானும் வந்திருக்கிறேன். பூணூல் அணிந்தால் பூஜைதான் செய்ய வேணுமா? என்று இவர் விளாசி
இருக்கிறார். மற்றவர்களும் இவருக்கு சப்போர்ட் செய்ய அந்த மாணவர் அடங்கிப் போனாராம்.
அப்புறம் இவருடன் நட்பு பாராட்டவும் செய்தாராம்.
காலையில் பயிற்சி வகுப்புக்கள் அப்புறம் உணவு
இடைவேளை மீண்டும் உடற்கல்வி என்று கழிந்து இருக்கிறது. விடுதியில் பொழுது போக்காக சீட்டு
ஆடுவார்களாம். இது அதிகாரிகளுக்கு தெரியக் கூடாது. இவருடன் முரண்டு பிடித்த மாணவர்தான்
இவருக்கு சீட்டு ஆடக் கற்றுக் கொடுத்தாராம். முதலில் பந்தயம் வைக்காமல் ஆடினார்களாம்.
அப்புறம் பந்தயம் வைப்பது ஆனால் யார் ஜெயித்தாலும் அவரவர் காசு அவரவர்களுக்கு சும்மா
சுவாரஸ்யத்திற்கு மட்டுமே பந்தயத்தொகை என்று வைத்து ஆடினார்களாம்.
ஒருநாள் அப்படி ஆடும்போது இவர் ஐந்து ரூபாய் வரை
தோற்று விட்டாராம். அந்த பணத்தை திருப்பிக் கேட்டபோது கன்னியாகுமரி அன்பர் தரவில்லையாம்.
நீ அடுத்த முறை நீ ஜெயித்து எடுத்துக் கொள் என்று கூறிவிட்டாராம். இவர்கள் சீட்டு ஆடுவது எப்படியோ அதிகாரிகளுக்கும்
தெரிந்து விட்டிருக்கிறது. அவர்களும் வந்து நீங்கள் எல்லாம் நாளைக்கு பெரிய அதிகாரிகளாக
மாற போகிறீர்கள் இப்படி சீட்டு ஆடி வாய்ப்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று எச்சரித்தார்களாம்.
அன்றைய காலத்தில் யூத் சர்வீஸில் வேலை முடித்தபின் பி.டி.ஒ வாக பணியாற்ற வாய்ப்பு இருப்பதாக
பரவலாக பேச்சு இருந்ததாம்.
ஒரு மாத பயிற்சி வகுப்புக்கு பின் திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் இவரை பணியாற்ற
நியமித்தார்களாம். அங்கு சென்று தாசில்தாரிடம் நியமன ஆணையை கொடுத்தாராம்.
தாசில்தார் ஏற இறங்க பார்த்து நீ எந்த ஊரு? என்றாராம்.
திருவள்ளூர் பக்கத்துல
திருவள்ளூர் பக்கத்துலன்னா
எந்த ஊருய்யா?
சின்ன கிராமங்க இவர் சொல்ல
சின்னகிராமமாவது பெரிய கிராமம் ஆவது? பேரை சொல்லியான்னா?
புதுமாவிலங்கை!
அப்படி சொல்லு! அங்க யாரு
வீட்டு பையன் நீ!
அய்யர் வீட்டு பையன்
யாரு? ஒரு போஸ்ட் மாஸ்டர்
இருப்பாரே அவர் பையனா? இல்லீங்க அவர் அண்ணன் பையன்?
அப்படியா? நான் அந்த பிளாக்ல
பி. டி. ஓ வா இருந்து இப்ப புரமோசன்ல இங்க
வந்து இருக்கேன். ஆமாம்! நீ ஏன் இந்த வேலைக்கு சேர்ந்தே? நல்ல வேலை எதுவும் கிடைக்கலியா
உனக்கு?
இல்ல சார்! அப்ளிகேசன் போட்டேன்! கிடைச்சிருச்சு!
இது ரொம்ப கஷ்டமான வேலை! உனக்கு நூற்றைம்பது ரூபாதான்
சம்பளம் அதுல நீ தங்கி சாப்பிட்டு அப்புறம் வீட்டுக்கு என்னத்த அனுப்புவே?
நான் சொல்றதை கேட்டுக்க? இந்த டிஸ்டிரிக்ட்ல எம்.
எல். ஏ மினிஸ்டர் மீட்டிங்னா யூத் சர்வீஸ்
கண்டிப்பா இருக்கணும் மத்தபடி நீ தினமும் கிராமத்துல
தங்க வேண்டியது இல்லை!
உன் போஸ்டிங் போட்ட கிராமத்துக் போய் யாரையாவது
ப்ரெண்ட் பிடிச்சிக்க மாசத்துல ஒரு நாளைந்து நாள் அங்க தங்கிக்க மத்தபடி மினிஸ்டர்
மீட்டிங்னா மட்டும் வந்துடு அப்பத்தான் கட்டுபடி ஆகும் சரி போய் ஜாய்ன் பண்ணிக்க என்று சொல்லியுள்ளார்.
சரிங்க சார் என்றவர்! அவர் சொன்னபடியே அந்த கிராமத்திற்கு
சென்று ஒரு போஸ்ட் மாஸ்டரை சினேகம் பிடித்துள்ளார் இவருடன் இன்னொருவரும் அந்த கிராமத்திற்கு
அப்பாயிண்ட் மெண்ட் மூவரும் ஒரே அறையில் தங்கிக்
கொள்வது என்று முடிவாகி தங்கி கொண்டனர். போஸ்ட் மாஸ்டர் இவருக்கு மினிஸ்டர் மீட்டிங்
இருக்கும் தகவலை தபால் மூலம் சொல்லி விடுவார். அந்த சமயத்தில் இவர்கள் ஆஜாராகி விடுவார்கள். தாசில்தாரிடம் நல்ல பெயர் எடுத்தார்கள். ஆனால் விதி
வலியது அல்லவா?
கலைஞர் ஆட்சி
முடிவுக்கு வந்தது. எம்.ஜி. ஆர் அரியணை ஏறினார். யூத் சர்வீஸ் கலைக்கப்பட்டது.
இவரும் மீண்டும் வயல் வேலைக்கு வந்து சேர்ந்தார். அப்புறம்?
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
வித்தியாசமான பதிவு.. கொஞ்சம் எழுத்தின் அளவை ( font size) சிறியாதாக்கினால் படிக்க இலகுவாயிருக்கும்.
ReplyDelete