சனி மஹா பிரதோஷம்! நத்தம் வாலீஸ்வரர் தரிசனம்!



சனி மஹா பிரதோஷம்! நத்தம் வாலீஸ்வரர் தரிசனம்!



நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!


ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்


சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. சிவன் ஆலகால விஷத்தை உண்டு தூங்காமல் இருந்த இரவே சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது. விஷமுண்ட சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிந்தார். விஷம் உண்ட வேளை பிரதோஷ வேளை! உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன்.
 இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை  மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் நித்ய பிரதோஷம் , மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.
  தினம் தோறும் மாலை 4.30 மணி முதல் 6. 00 மணி வரையிலான காலம் நித்ய பிரதோஷ காலம் எனப்படும். இந்த சமயத்தில் இறைவனை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் மாதப் பிரதோஷம் எனப்படும்.
மஹா பிரதோஷம் : மாதங்களில் தேய்பிறை அல்லது வளர்பிறை திரயோதசியுடன் சனிக்கிழமை கலந்து வந்தால் அது மஹா பிரதோஷம் என்று வழங்கப்படுகிறது. இவை சித்திரை வைகாசி, ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வந்தால் மிகவும் உத்தமம் என்று புராணங்களும் ஆகமங்களும் கூறுகின்றன.
 மஹா விஷ்ணு முதலான தேவர்கள் அமிர்தம் அடைவதற்காக மகேந்திர மலையை மத்தாக  கொண்டு வாசுகியை கயிறாக கொண்டு  பாற்கடலை கடைந்தனர். அப்போது பல பொருட்கள் ஐராவதம், கற்பக விருட்சம், மஹா லஷ்மி போன்றவர்கள் பாற்கடலில் தோன்றினர். பின்னர் வாசுகி  வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. அது மிகவும் கடுமையான ஆலகால விஷமாக அனைவரையும் துன்புறுத்தியது. தேவர்கள் அஞ்சி நாலாபுறமும் சிதறினர்.
   தேவர்கள் பால் இறக்கம் கொண்ட சிவபெருமான் விஷத்தை திரட்டி விழுங்கி விட்டார். அதே சமயம் அது உள்ளே இறங்காதபடி பார்வதி தேவியார் கழுத்தை பிடித்து விட்டார். விஷம் கண்டத்தில் தங்கியது சிவன் திரூநீல கண்டன் ஆனார்.  அந்த விஷத்தின் பாதிப்பு நீங்க சிவன் பார்வதியுடன் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் நர்த்தனம் புரிந்தார். இதுவே பிரதோஷ வரலாறு.
  ஆகவேதான் பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு முதல் வழிபாடு செய்யப்படுகிறது.
சென்னை செங்குன்றம் அடுத்த பஞ்சேஷ்டியில் இருந்து மேற்கே 3 கி. மீ தொலைவில் வாலி பூஜித்த வாலீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பல ஆயிரம் ஆண்டு பழமை மிக்க இவ்வாலயம் எழுபது ஆண்டுகளுக்கு பிறகு ஆன்மீக அன்பர்களால் திருக்குடமுழுக்கு கண்டது. சுந்தர சித்தர் என்ற மகான் சமாதி கொண்ட தலமாகும் வாலீஸ்வர க்ஷேத்திரம்.
   இங்குள்ள இறைவன் அன்னையின் விஷத்தை ஏற்றுக் கொண்டதால் கருமையாக அகோர லிங்கமாக காட்சி தருகிறார். ராகு  - கேது பரிகாரத்தலமான இந்த தலத்தில் பிரதோஷ தரிசனம் செய்தால் காள கூட  க்ஷேத்திரமான சுருட்டப்பள்ளியில் தரிசனம் கண்டதன் மும்மடங்கு பலன் என்று ஆலய ஸ்தல புராணத்தில் உள்ளது.

      நந்தியம்பெருமான் இரண்டு கால்களையும் மடித்தபடி மற்ற ஆலயங்களில் இருப்பதை விட வித்தியாசமாக எழுந்தருளி உள்ள இந்த ஆலயத்தில் பிரதோஷ பூஜை செய்வது விசேஷமானது. வானர அரசன் வாலியின் பிரம்மஹஸ்தி தோஷம் இங்கு வந்து வழிபட்டதால் நிவர்த்தி அடைந்தது. அம்பிகையை ராகு சர்ப்ப வடிவில் தீண்டியதால் அம்பிகை மூர்ச்சை அடைந்து விட்டார். பின்னர் இங்குள்ள இறைவனை வழிபட்டு சிவன் தேவியின் விஷத்தை ஏற்றுக் கொண்டார். அதனால் வாலீஸ்வரர் கருமை நிறமாக காட்சி அளிக்கிறார்.
 இவ்வாலயத்தில் உள்ள காரிய சித்தி கணபதி பிரம்மன் வழிபட்ட கணபதி ஆவார். அவரை வழிபட காரியத்தடைகள் நீங்கி  சகலமும் சித்திக்கும். திருமணத்தடை, புத்திர பாக்கியம் போன்றவை பரிகாரம் செய்ய நிவர்த்தியாகும்.
  சண்டிகேஸ்வரர் அர்த்த நாரி சொருபமாக அமைந்துள்ளார். துர்கை ஏழு ஜ்வாலைகளுடன் சாந்த சொருபியாக உள்ளார்.
பழம் பெரும் ஆலயமான இவ்வாலயம் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
 ஓம் தத்புருஷாய வித்மஹே சக்ர துண்டாய தீமஹி!
தன்னோ நந்தி ப்ரச்சோதயாத்
ஓம் தீஷ்ண சிருங்காய வித்மஹே
வேதஹஸ்தாய தீமஹி!
தன்னோ வ்ருஷப ப்ரச்சோதயாது!

பிரதோஷ தரிசனத்தால்  கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.
வாலீஸ்வரர் தரிசனத்தால் கிரக தோஷங்கள் விலகும்.
காரிய சித்தி கணபதி தரிசனத்தால் காரியத்தடை நீங்கும்.

பிரதோஷ நன்னாளில் பழமையான இவ்வாலயத்தில் வழிபட்டு இறைவனருள் அடைவோமாக!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! 


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2