ஏதுடா பட்டாசு?! பாப்பா மலர்!


ஏதுடா பட்டாசு?!

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் இரண்டே நாள்தான்! ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கும் பட்டாசு சத்தங்கள்! பள்ளியில் மாணவர்கள் தங்களுக்கு புது டிரஸ் வாங்கியது பற்றியும் நிறைய பட்டாசுகள் வாங்கியது பற்றியும் பெருமைப் பேசிக்கொண்டார்கள்.ஆனால் சங்கர் அதில் எல்லாம் நாட்டம் இல்லாதவனாய் ஒரு மூலையில் சோகமாக அமர்ந்து இருந்தான்.
   அப்போது அவனது பள்ளித்தோழன் மகேஷ் வந்தான். என்னடா சங்கர் டல்லா இருக்கே? தீபாவளிக்குத் துணியெல்லாம் எடுத்தாச்சா? என்றான்.மகேஷின் திடீர் கேள்வியில் சகஜநிலைக்குத் திரும்பிய சங்கர் சமாளித்துக் கொண்டு ஓ எடுத்தாச்சே! புதுசா சபாரி சூட் எடுத்திருக்கேன் என்று அவசரமாக பதில் சொல்லிவிட்டு மகேஷ் அடுத்த கேள்வி கேட்கும் முன் அவ்விடத்தை விட்டு அகன்றான்.
  சங்கரின் குடும்பம் ஏழ்மையான குடும்பம். தந்தையை இழந்த சங்கருக்கு தாய் வள்ளிதான் எல்லாம்.ஏதோ நாலு வீடுகளில் வேலை செய்து சங்கரை படிக்க வைக்கிறாள் வள்ளி.வேலை செய்யும் வீடுகளில் கொடுக்கும் பலகாரமும் பழைய துணியும் தான் அவர்களுக்கு தீபாவளி புது துணியும் பலகாரமும்!இத்தனை வருடங்கள் சங்கருக்கு இதில் எந்த சங்கடமும் ஏற்பட்டதில்லை! இந்த முறை வயது சற்று கூடியதால் மற்றவர்களைப் போல் நாமும் தீபாவளி கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கம்!ஊரெல்லாம் தீபாவளி கொண்டாடும் போது நாம் மட்டும் பழைய துணியை போட்டுக் கொண்டு மீந்த பலகாரங்களை திண்ண வேண்டுமே என்று தன் ஏழ்மையை நினைத்து வருத்தப்பட்டான் சங்கர். அப்போதுதான் மகேஷ் வந்தான். தன்னுடைய தாழ்ந்த நிலையை மகேஷிடம் சொல்ல மனமின்றி புதுத் துணி எடுத்தாகிவிட்டதாக பொய் கூறினான். அந்த பொய்யை மேலும் வளர்க்க மனமின்றிதான் அங்கிருந்து அவசரமாக நகர்ந்தான்.
   தீபாவளிக்கு முன் தினம் மாலை! பட்டாசு வெடிக்கத் தான் முடியலை! வேடிக்கையாவது பார்ப்போமே! என்று தெருவில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சென்றான் சங்கர். அப்போது மகேஷ் தன் வீட்டு வாசலில் பட்டாசுகளை குவித்து வைத்துக் கொண்டு வெடித்துக் கொண்டிருந்தான். என்ன சங்கர் இந்த பக்கம் என்று மகேஷ் கேட்டான். அம்மா கடைக்கு அனுப்பிச்சாங்க! வழியிலே நீ பட்டாசு வெடிக்கிறதை பார்த்து நின்னுட்டேன் என்றான் சங்கர்.
   வா சங்கர் சேர்ந்து வெடிக்கலாம்! என்று ஒன்றிரண்டு பட்டாசுகளை மகேஷ் சங்கரிடம் வெடிக்கும் படி தந்தான். சங்கருக்கு பொறாமையாக இருந்தது. இவ்வளவு பட்டாசுகளா? அடேயப்பா! என்று மலைத்து நிற்க மகேஷ் கொஞ்சம் உள்ளே வாயேன் என்று மகேஷின் தாய் அழைத்தாள். சங்கர் நீ வெடிச்சிண்டிரு! நான் இதோ வந்திடறேன்! என்று மகேஷ் உள்ளே சென்றான்.
  சங்கரின் மனதில் ஒரு திடீர் சபலம்! இவ்வளவு பட்டாசு இருக்கே? ஒவ்வொரு தினுசுல ஒண்ணொன்னு எடுத்துகிட்டாத் தெரியவாப் போகுது! நாம நம்ம வீட்டுல வெடிக்கலாம் என்று நினைத்தது மனது. அவசர அவசரமாக சில பட்டாசுகளை எடுத்து கால்சட்டைப் பையில் திணித்துக் கொண்டான். மகேஷ் திரும்பவும் அம்மா தேடுவாங்க! நேரமாயிடுச்சு! நான் கிளம்பறேன் என்று விடைபெற்றுக் கொண்டான்.
    சங்கர் தன் வீட்டினுள் நுழைந்து பாக்கெட்டிலிருந்து பட்டாசுகளை எடுக்கவும் அவன் தாய் வள்ளி வீட்டினுள் நுழையவும் சரியாக இருந்தது. பட்டாசுகளை பார்த்துவிட்டு வள்ளி திகைத்தாள். ஏதுடா உனக்கு இவ்வளவு பட்டாசு? எங்க வாங்கின? இல்லெ திருடினியா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க சங்கர் வெலவெலத்தான்.திருதிருவென முழித்தான். என்னடா முழிக்கிறே? உனக்கு பட்டாசு வாங்க காசு ஏது? பதில் சொல்லு என்றாள் வள்ளி.  அ.. அது வந்து ம..மகேஷ் வீட்டுல .. என்று தயங்கினான் சங்கர்.
   அப்போது நான் தான் கொடுத்தேன் ஆண்ட்டி! என்று சொல்லியபடி உள்ளே வந்தான் மகேஷ். சங்கரின் விழிகள் அகலமாயின. நான் தான் சங்கர் கிட்டே பட்டாசு கொடுத்தேன் ஆண்ட்டி! அவனா கேட்கலை! நானாத்தான் கொடுத்தேன்! அம்மா திட்டுவாங்கன்னு வேண்டாம்னு சொன்னான் ஆனா நான் வற்புறுத்தி கொடுத்து அனுப்பிச்சேன்! ஸ்வீட் தரனும்னு நினைச்சேன் மறந்துட்டேன் அதான் எடுத்துகிட்டு வந்திருக்கேன். இந்தா சங்கர் இதுல ஸ்வீட்டும் கொஞ்சம் பட்டாசும் இருக்கு! ஹேப்பி தீபாவளி! நான் வரேன் ஆண்ட்டி! வரேன் சங்கர் என்று வெளியேற பின்னாலேயே ஓடினான் சங்கர்.
   மகேஷ் மகேஷ்! நில்லுடா! என்னை மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லுடா! உனக்குத் தெரியாம பட்டாசு எடுத்து வந்த என்னை எங்கம்மாகிட்டே காட்டி கொடுக்காம நான் தான் கொடுத்தேன்னு பொய் சொல்லி காப்பாத்திட்டியேடா! உன் பெருந்தன்மைக்கு முன்னாடி என்னோட செயலை நினைச்சா? அதுஎவ்வளவு சின்ன தனமானது! என்னை மன்னிப்பாயா மகேஷ் என்று விக்கித்தான் சங்கர்.
   சங்கர் அழாதே! அன்னிக்கு நீ சோகமா இருக்கறப்பவே என்ன காரணம்னு யோசிச்சேன்!தீபாவளி கொண்டாட முடியாததும் அதை நீ என்கிட்ட மறைச்சதும் எனக்கு நல்லாவே புரிஞ்சிடிச்சு! அப்பவே உனக்கு பட்டாசும் ஸ்வீட்டும் வாங்கிதரணும்னு நினைச்சேன். நீ வீட்டுக்கு வந்தப்ப கூட கொடுத்து விடலாம்னு நினைச்சேன். அம்மாதான் நீயே அவங்க வீட்டுக்கு கொண்டுபோயி கொடுக்கிறதுதான் முறைன்னு சொல்லிட்டாங்க! நீயே பட்டாசு எடுத்துகிட்டா என்ன? நானே கொடுக்க நினைச்சதுதானே! அதுல ஒரு தப்பும் இல்லே! எனக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்லே! நீ சந்தோஷமா தீபாவளிக் கொண்டாடனும் அதுதான் என் விருப்பம் என்றான் மகேஷ்.
   மகேஷ் என்ன இருந்தாலும் உன்னை கேட்காம உன் பொருளை எடுத்தது என் தப்புதான்! ஆசை கண்ணை மறைச்சிடுச்சு! என்னை மன்னிச்சுடு மகேஷ் என்றான் சங்கர்.
  சங்கர்! செய்த தவறை ஒருத்தன் உணர்ந்தாலே அவன் திருந்திட்டதா அர்த்தம் அப்புறம் ஏது குற்றம்? நீ உன் செய்கையை நினைத்து வருத்தப்பட்ட உடனேயே உன் குற்றம் விலகிடுச்சு! குழப்பிக்காம போய் தீபாவளிக் கொண்டாடு! ஹேப்பி தீபாவளி என்று விடைபெற்றான் மகேஷ்.
  சங்கர் தெளிந்த மனதோடு ஆனந்தமாய் தீபாவளி கொண்டாடினான் என்று சொல்லவும் வேண்டுமோ?

அறவுரை!

சிறுபஞ்ச மூலம்

 பிழைத்தல் பொறுத்தல் பெருமை சிறுமை
 இழைதீங்கு எண்ணி இருத்தல்- இழைத்த
 பகைகெட வாழ்வதும் பல்பொருளார் நல்லார்
 நகைகெட வாழ்வதும் நன்று.
                    - காரியாசான்.
விளக்கம்}  பிறன் ஒருவன் செய்த பிழைபொறுத்துக் கொள்ளுதல் பெருமையாகும்.மற்றவன் செய்த பிழையை நினைத்து கொண்டே இருப்பது சிறுமையாகும். தான் செய்த பிழைகள் கெடுமாறு வாழ்தலும் சான்றோர் நகைப்புக்கு ஆளாகாமல் வாழ்தலும் நன்றாம்.

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி பாத்திமா பீவி

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

  1. இக்காலத்தில் இப்படியான குழந்தைகளை காண்பது அரிது .படிப்பினையான சிறு கதை பாராட்டுக்கள் ....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2