தனக்கு வந்தால் தெரியும்! பாப்பா மலர்!


தனக்கு வந்தால் தெரியும்!

கிருஷ்ணாவரம் என்ற சிற்றூரில் கோபு என்ற சிறுவன் வசித்து வந்தான். அந்த ஊரில் உள்ள பள்ளியில் படித்து வந்த அவனிடம் கெட்டபழக்கம் ஒன்று இருந்தது. நல்ல பழக்கங்கள் ஒருவனை உயர்த்திவைக்கும் மாறாக தீயபழக்கங்கள் ஒருவனிடம் குடி கொண்டால் அவனை வீழ்த்திவிடும் அல்லவா? ஆனால் நல்லவனான கோபுவிடம் எப்படியோ இந்த தீயபழக்கம் குடி கொண்டு விட்டது.
    அந்த பழக்கம் எது என்று கேட்கிறீர்களா? மற்றவர்களின் உடைமைகளை ஒளித்து வைத்து அவர்கள் தேடும்போது மகிழ்ச்சி அடையும் குணம் தான் அந்த தீய குணம். மற்றவர்கள் பொருட்கள் காணாமல் தவிக்கும் போது துள்ளி குதிக்கும் அவனது உள்ளம். அவர்கள் படும் அவஸ்தைகளை ரசித்துவிட்டு சாவதானமாக பொருட்களை கண்டெடுப்பது போல நடித்து அவர்களிடம் ஒப்படைப்பான் கோபு.
இது அவர்களுக்குத் தெரியாது பொருட்களை தேடித் தந்தமைக்கு பாராட்டிச் செல்வார்கள் பொருள் கிடைத்தவர்கள் உள்ளூர மகிழ்ந்துகொள்வான் அவன். இந்த விளையாட்டு விபரீதமானது என்று அவன் உணரவில்லை. அவனது நண்பன் மணி இந்த விளையாட்டை கண்டித்தான்.
   அடப் போடா வாழ்க்கையில ஒரு த்ரில் வேணும்டா! நான் தான் பொருளை எடுத்துக்கிறது இல்லையே திருப்பிக் கொடுத்துவிடுகிறேனே! திருடினாத் தான் தப்பு! ஒளிச்சு விளையாடினா ஒண்ணும் தப்பில்லை! போடா நீயும் உன் அட்வைசும்! என்று அவனை கிண்டலடித்து கேலி செய்தான் கோபு.
  டேய் கோபு ஒருநாள் நீ கட்டாயம் அவஸ்த்தை படுவே நீ அப்ப நான் சொல்றது உனக்கு புரியும் என்று கழன்று கொண்டான் மணி. ஆனால் அவனையும் விடவில்லை கோபுவின் விளையாட்டு!
  முக்கியமான கணக்கு பாடவேளையில் மணியின் பென்சிலைஎடுத்து ஒளித்து வைத்து விட்டான். கணக்காசிரியர் பென்சிலையும் நோட்டையும் எடுக்கச் சொன்னபோது பென்சிலை காணாது தவித்தான் மணி. அவனை அடித்து துவைப்பதை மகிழ்ச்சியுடன் ரசித்துக் கொண்டிருந்த கோபு பின்னர் மணியிடம் பென்சிலை தந்தான்.
  கோபு நான் அடிவாங்குவது உனக்கு என்ன அவ்வளவு சந்தோஷமா? நீ திருந்தவே மாட்டாயா? என்றான் மணி! அடப் போடா! நீ அடி வாங்கறப்ப எவ்வளவு ஜாலியா இருத்தது தெரியுமா? என்று சிரித்தான் கோபு.
  தம்மை அழவைத்த கோபுவை எப்படியாவது திருத்த முடிவு செய்தான் மணி. அதற்கான நேரம் வந்தது. பள்ளியின் அரையாண்டுத் தேர்வு துவங்கியது. தேர்வுக்கு முன் தினம் கோபுவின் தமிழ் புத்தகத்தை எடுத்துஒளித்துவைத்துவிட்டான் மணி. தேர்வுக்கு முந்தின தினமே படிக்கும் வழக்கமுள்ள கோபு புத்தகத்தை காணாது தவித்தான். நாளை தேர்வுக்கு என்ன செய்வது? ஒன்றுமே படிக்கவில்லையே? தமிழில் பெயிலானால் அதைவிட அவமானம் வேறு ஒன்றூம் இல்லையே? ஆசிரியர் அடிப்பது இருக்கட்டும் வீட்டில் அப்பாவிற்கு என்ன பதில் சொல்வது என்று பல்வேறு கேள்விகள் அவனைத் துளைத்து எடுத்தது.
    எங்கு தேடியும் புத்தகம் கிடைக்க வில்லை. இரவலும் யாரும் கொடுக்க முன் வரவில்லை! அழுதே விட்டான் கோபு. அப்போது அங்கு வந்த மணி ஒன்றும் தெரியாதவன் போல கோபு ஏன் அழுகிறாய்? பிறரை அழவைக்கும் நீ இன்று அழுதுகொண்டு இருக்கிறாயே? என்று கேட்டான்.
   மணி நீ வேறு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறாயா? நான் என் புத்தகம் காணாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் ஒன்றுமே படிக்கவில்லை! நாளைக்கு தமிழ் தேர்வு என் நிலையை நானே நொந்து கொண்டிருக்கிறேன் என்றான் கோபு.
   இப்படித்தானே கோபு பொருள்களை தொலைத்தவர்கள் மனம் வேதனைப் பட்டிருக்கும்! அப்போது நீ எப்படி கைகொட்டி சிரித்து மகிழ்ந்தாய்! இப்போது உன் பொருள் காணாததும் துடிக்கிறாயே! என்று ஊசியாய் குத்தினான் மணி.
    கோபு தலை குனிந்தான். ஆம் மணி இப்போதுதான் என் தவறு எனக்கு உரைக்கிறது. அவர்கள் இட்ட சாபம்தான் இன்று என்னை பிடித்துவிட்டதோ? நாளை நான் எப்படி தேர்வு எழுதுவேன்! என்று விசும்பினான் கோபு.
   இந்தா கோபு உன் தமிழ் புத்தகம்! நீ திருந்தவே நான் இவ்வாறு செய்யும் படி ஆயிற்று! இனி பிறர் பொருளை ஒளித்து வைக்க மாட்டாயே? என்று அவனிடம் புத்தகத்தை தந்தான் மணி.
  எல்லாம் உன் வேலைதானா? இன்று எனக்கு புத்தி வந்தது! இனி இந்த தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன்! என்னை திருத்திய நீதான் என் நல்ல நண்பன் என்று அவனை அணைத்துக் கொண்டான் கோபு.

அறவுரை!

ஆசாரக் கோவை!

எய்யாத வேண்டார் இரங்கார் இகந்ததற்குக்
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
மெய்யாய காட்சி யவர்.

விளக்கம்} உண்மையான அறிவுடையவர் தமக்கு கிடைப்பதற்கு அருமையானவற்றை விரும்பார். கழிந்து போன பொருளைப் பற்றி எண்ணி வருந்த மாட்டார்.நீக்குவதற்கு இயலாதபடி வந்த துன்பத்திற்கும் உள்ளம் வருந்தார்.

உங்களுக்குத் தெரியுமா?

யோகா முறையைக் கண்டுபிடித்தவர் பதஞ்சலி முனிவர்
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2