சச்சின் டெண்டுல்கரை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை- அப்ரிதி பல்டி

டெல்லி: சச்சின் டெண்டுல்கரை அவமதிக்கும் வகையிலோ அல்லது அவரது திறமையை குறைத்தோ நான் எந்தக் கருத்தையும் கூறவில்லை. ஒரு குறிப்பிட்ட போட்டியில் நடந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை மட்டுமே நான் குறிப்பிட்டுக் கூறினேன் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிதி.

கிரிக்கெட் உலகில் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரு வீரர் சோயப் அக்தர். அவர் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். அதில் தனது பந்துகளைச் சந்திக்க சச்சின் பயந்தார். அவர் ஒரு முழுமையான வீரர் இல்லை. ஆட்டத்தை எப்படி ஆரம்பிக்க வேண்டும், எப்படி முடிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியாது என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் எரியும் கொள்ளியில் பெட்ரோலை ஊற்றுவது போல இன்னொரு அதிகம் வெறுக்கப்பட்ட வீரரான ஷாஹித் அப்ரிதி பேசியுள்ளார். அவர் கூறுகையில், அக்தர் கூறியது சரிதான். 1999 ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது, அக்தரின் பந்தை சந்திக்க பயந்தார் சச்சின். அவருக்கு கால்கள் நடுங்கின. அவர் மிகவும் அசவுகரியமாக உணர்ந்தார் என்று கூறியிருந்தார்.

இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல முன்னாள், இன்னாள் வீரர்கள் அப்ரிதியின் பேச்சைக் கடுமையாக கண்டித்துள்ளனர். பாகிஸ்தான் வீரரும், சானியா மிர்ஸாவின் கணவருமான சோயப் மாலிக்கும், அப்ரிதியின் பேச்சு மோசமானது என்று வர்ணித்துள்ளார். அக்தரின் கருத்தையும் அவர் கண்டித்துள்ளார்.

இதையடுத்து தற்போது அப்ரிதி பல்டி அடித்துள்ளார். தான் சச்சினின் திறமை மற்றும் சாதனைகளை குறைத்துப் பேசவில்லை, மதிப்பிடவில்லை, நடந்ததைத்தான் சொன்னேன் என்று கூறியுள்ளார் அப்ரிதி.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் திறமை மற்றும் அவரது சாதனைகளைக் குறைத்து மதிப்பிடும் வகையில் பேசவில்லை. நடந்த ஒன்றைத்தான் சொன்னேன்.

1999 டெஸ்ட் போட்டியில், அக்தருக்கு எதிராக மிகவும் அசவுகரியமாக இருந்தார் சச்சின். அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பே அளிக்காமல் அவரை விரைவாக அவுட் செய்தார் அக்தர். அப்போது அவரது கால் நடுங்குவதை நான் பார்த்தேன். இதைத்தான் நான் சொன்னேன். இதை நான் மறுக்கவில்லை.

ஆனால் இது அன்று நடந்த சம்பவம்தான். மற்றபடி சோயப் அக்தரை பின்னர் சச்சின் சிறப்பாக சந்தித்து ரன்கள் குவித்ததை உலகமே பார்த்துள்ளது. 2003 உலகக் கோப்பைப் போட்டியின்போது நடந்ததை உலகமேப் பார்த்து வியந்ததை நாம் மறுக்க முடியாது. அந்த ஒரு போட்டியில் மட்டுமே சச்சின் அசவுகரியமாக இருந்தார். இதைத்தான் நான் சொல்ல வந்தேன்.மற்றபடி நான் சச்சினை குறைத்து மதிப்பிடவில்லை.

சச்சின் டெண்டுல்கர் ஒரு சிறப்பான பேட்ஸ்மேன். அதை உலகமே அறியும். என்னுடைய அல்லது வேறு எவருடைய நற்சான்றிதழும் அவருக்குத் தேவையில்லை. அவரது சாதனைகளே அவரது திறமையை பறை சாற்றும் என்று கூறியுள்ளார் அப்ரிதி.

நன்றி தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2