உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 36

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 36


வணக்கம் வாசக அன்பர்களே! இடையில் இருவாரங்களாக இந்த தொடரை தொடர இயலாமல் போயிற்று. மாமியாரின் மறைவு மற்றும் என்னுடைய உடல்நலக் குறைவினால் இணையம் பக்கம் பத்து நாட்கள் வர இயலாது போயிற்று. கடைசியாக இந்த பகுதியில் வல்லினும் மிகும் மிகா இடங்கள் குறித்து சற்று விரிவாக பார்த்தோம். வல்லினம் மிகாத இடங்களை சென்ற பகுதியில் படித்தோம். இந்த முறை மிகும் இடங்கள் சிலவற்றை படிக்க உள்ளோம்.

வலிமிகும் இடங்கள்.

1 இருபெயராட்டு பண்புத்தொகையில் வலி மிகும்.
  மல்லிகைப்பூ, ஆடித் திங்கள், வரிப்பணம், பசிப்பிணி

2.உவமைத் தொகையில் வல்லொற்று மிகும்.
  மலைத்தோள், குவளைக் கண், அம்புப்பார்வை

3.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலி மிகும்.
  ஓடாக்குதிரைகள், பாடாக்கவிஞன்
4.      ‘இகர’ ஈற்று வினையெச்சம் முன் வலி மிகும்.
    அதுபற்றிப் பேச, பேசிக்கெடுத்தான், நோக்கிப்பாய்ந்தான்.

5.என, ஆக, போய், ஆய், தவிர, ஏற்ப வினையெச்சங்களின் பின் வல்லொற்று மிகும்.
    எனக்கூறினார், அதிகமாகக் கிடைக்கும், அதற்கேற்பப் பேசினார்.

6.      அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, பாங்கு, ஆண்டு, ஈண்டு, அப்படி, இப்படி, அத்துணை, அன்றி, இன்றி, தனி, மற்ற, மற்றை, அவ்வகை, இவ்வகை, அரை, பாதி, இந்த சொற்களின் பின் வலி மிகும்.
அந்தக் குளம், அங்குச்சென்றான், இங்குக் காண்பான், அரைப்படி. அப்படிச்செய்தான்

7.      இரண்டாம் வேற்றுமை விரியில் வலி மிகும்.
பண்பைக் கடைபிடி, புலியைக் கொன்றான்

8.      2,3,4,7, ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகையில் வல்லொற்று மிகும்.
தண்ணீர்த்தொட்டி, தங்கக் காப்பு, குழந்தைப்பால், மலைப்பாம்பு

9.      4 ஆம் வேற்றுமை விரியில் உருபிற்குப்பின் வலி மிகும்.
      வீட்டுக்குப்போ, மதுரைக்குத் திரும்பினார்.

10.      6 ஆம் வேற்றுமைத் தொகையில் அஃறிணையாக இருந்தால் வல்லொற்று மிகும்
    கிளிச்சிறகு, குதிரைக்கால்

11.வன் தொடர் குற்றியலுகரம் அடுத்து வலி மிகும்.
  பாக்குக் கூடை, மருந்துக்கடை, கன்றுக்குட்டி, அவலச்செய்தி, வாழ்த்துப்பாட்டு

12. கீழ் என் கிளவி உறழத் தோன்றா. கீழ் என்ற சொல்லின் பின் வலி மிகுவதும் மிகாததும் உண்டு.
     கீழ்க்கணக்கு, கீழ்த்திசை, கீழ்கணக்கு, கீழ்திசை


 இனி இலக்கிய சுவைக்கு செல்வோம்! சென்ற பகுதியில் முத்தொள்ளாயிரத்தில் இருந்து ஒரு கைக்கிளை செய்யுள் பார்த்தோம்.
   இன்றும் அதே போல ஒன்று.

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும்செல்லும் பேரும் என் நெஞ்சு.

நாணிப்பெருஞ்செல்வர் இல்லத்து நல் கூர்ந்தார் போல: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பது பழமொழி அதை உணர்த்தும் வரிகள் இவை. பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் விதி வசத்தால் பொருளிழந்து ஏழையாக போனாலும் யாரிடமும் பொருளுதவி கேட்க தயங்குவார்கள் கேட்கமாட்டார்கள்.  அதே போல இருந்ததாம் சேரநாட்டு பெண்ணின் இதயம். ஏன்?
   சேரன் வீதியில் உலா வந்தான். மாணிக்க கற்கள் பூண்ட அணிகலன்கள் அலங்காரங்களோடு அவன் வருகிறான் என்றதும் அவனது அழகைக் காண வாசல் வரை செல்கிறாள் அந்த சேரநாட்டு மங்கை. பின்னர் பெண்மைக்கே உரிய நாணம் அவளை தடுத்துவிட்டது. வாசல் வரை சென்றவள் அவளே கதவை அடைத்து விட்டாளாம். எப்படி என்றால் செல்வந்தர்கள் ஏழையானால் பொருளுதவி பெற கூசுவார்களே அதே போல அவளது இதயமும் அப்படி நின்றதாம். அது திரும்பவும் மன்னனை பார்க்க சொல்லியும் தடுத்தும் அப்படியும் இப்படியும் விளையாடியதாம் என்று தன் மனதின் இயல்பை இந்த பாடலில் சொல்கிறாள் அந்த மங்கை.


முத்தொள்ளாயிரம் பாடல்கள் இப்படி அழகியலையும் மனவியலையும் அழகாக நமக்கு விருந்தளிக்கின்றன.

மீண்டும் அடுத்த வாரத்தில் சந்திப்போம்! உங்களின் கருத்துக்களை பதிந்து  ஊக்கப்படுத்துங்கள் நன்றி!


 


Comments

 1. நல்ல பகிர்வு. தொடரட்டும்.....

  ReplyDelete
 2. ஆஹா, இந்த தொடரில் 36 பதிவுகள் வந்து விட்டதா?. இனி நான் மற்ற பகுதிகளையும் சீக்கிரம் படிக்கிறேன். மிகவும் உபயோகமான பதிவு. தொடரட்டும் தங்களது தமிழ் வளர்க்கும் பணி.
  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அருமையான பகிர்வு
  நன்றி நண்பரே

  ReplyDelete
 4. இலக்கிய சுவை விளக்கம் மிகவும் அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. அருமையான பயனுள்ள பதிவு... முத்தொள்ளாயிரம் பாடலும் விளக்கமும் அருமை....

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2