உங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 35

உங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 35

இந்த தொடரில் ஒரு ஐந்து பகுதிகளுக்கு முன் வல்லினம் மிகும் மிகா இடங்களைப்பார்த்தோம்! அதை நினைவுகூற இங்கு செல்லவும்
 அதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். தமிழில் வல்லின ஒற்றெழுத்துக்கள் க்,ச்,ட்,த்,ப்,ற் புணர்ச்சியின் இடையே வருவதற்கும் வராமல் போவதற்கும் பொருள் வேறுபாடு ஏற்படும்.
 உதாரணமாக பட்டு சேலை கட்டினாள், பட்டுச்சேலை கட்டினாள் என்ற இரண்டு வாக்கியங்களை எடுத்துக்கொள்வோம். முதலாவது வாக்கியம் பட்டு என்னும் பெண்மணி சேலை கட்டியதை குறிக்கும், இரண்டாவது வாக்கியம் பெண்ணொருத்தி பட்டுச்சேலை கட்டியதை குறிக்கும். இடையில் வரும் ஒற்றினால் ஒரு வாக்கியத்தின் பொருளே மாறுவதை பார்த்தீர்களா? இதுதான் தமிழ்.
    அகத்தியர் கடலைச் சாப்பிட்டார் என்றால் அகத்தியர் கடலாகிய சமுத்திரத்தை குடித்துவிட்டார் என்றுபொருள். அதுவே அகத்தியர் கடலை சாப்பிட்டார் என்று எழுதும்போது அகத்தியர் வேர்க்கடலை சாப்பிட்டார் என்று பொருளாகும்.
  தமிழில் எழுதும் போது ஒற்று எங்கு மிகும் எங்கு மிகாது என்று அறிந்து பயன்படுத்தவேண்டும்.
அந்த அட்டவணையை ஏற்கனவே பார்த்திருப்போம்!  இன்னும் சிலவற்றை இங்கே பார்ப்போம்!

1.      எழுவாயில் வல்லின ஒற்று மிகாது.
எ.கா) சீதை பாடினாள், குதிரை தாவுகிறது, துணி கிழிந்தது.
     2. பண்புத்தொகையில் வல்லின ஒற்று மிகாது.
         பெரும்புலவர், சிறுதலை, இரும்பணை, செந்தாமரை,வெண்சங்கு
3.      வினைத்தொகையில் ஒற்று மிகாது.
 எ.கா) குடிதண்ணீர், சுடுகாடு
4. உம்மைத்தொகையில் வலி மிகாது.
  எ,கா) தீ காற்று பரவின, பசி பிணி நாட்டில் இல்லை
5. வினைமுற்று முதலிலும் எழுவாய் பின்னும் வரும்போது வலி மிகாது.
  எ,கா) ஓடா குதிரை, பாடா வானொலி, பேசா மடந்தை
6.என்று, வந்து, கண்டு, செய்து என்னும் வினையெச்சங்களின் பின் வலி மிகாது.
 எ.கா)  என்றுகூறினார், வந்துகேட்டார், கண்டுபேசினார், செய்து கொடுத்தார்.
7.அவை,,இவை,அன்று, இன்று,அத்தனை, எத்தனை,அவ்வாறு, எவ்வாறு,இவ்வாறு, ‘ஆறு’’படி’சேர்ந்துவரும் வினையெச்சம்,ஒரு, ஒன்பது இவற்றின் பின் வலிமிகாது.
எ.கா)அவை போயின, அன்றுசொன்னார், அத்தனைபூக்கள், இவ்வாறு கூறினார், வந்தபடி சென்றான், சொன்னவாறு செய், ஒருபொருள், ஒன்பது படி
8. ஆறாம் வேற்றுமை விரியில் வலி மிகாது
 எ.கா) கோழியது கொண்டை, தம்பியுடைய சட்டை
9. ஆறாம் வேற்றுமையில் உயர்திணையாக இருந்தால் வலி மிகாது.
  கண்ணகி கோயில், தம்பிசட்டை, அப்பாகடை ஆவுடையார்கோயில்
10.ஒடு,ஓடு,இருந்து நின்று, ஆகிய வேற்றுமை உருபுகளில் வலி மிகாது.
   பொன்னொடு பெயரும், தங்கையோடு பேசினான், கிளையிலிருந்து தாவியது, மலையினின்று வீழ்ந்தது
  1. முற்றியலுகரம் அடுத்து பெரும்பாலும் வலி மிகாது
அது படை, ஒருகால், வயிறுபசித்தது.
  1. கீழ் என்ற சொல்லின் பின் வலி சிலசமயம் மிகுந்தும் சிலசமயம் மிகாமலும் வரும்.
எ,கா) கீழ்க்கணக்கு, கீழ்த்திசை, கீழ்கணக்கு, கீழ்திசை

வல்லினம் மிகாதவற்றை தற்போது பார்த்தோம் மிகும் இடங்களை அடுத்தபதிவில் பார்க்கலாம். இன்னும் சிலருக்கு அடிப்படை இலக்கணத்தில் சந்தேகங்கள் இருக்கலாம், உதாரணமாக, எழுவாய், பயனிலை, செயப்படுபொருள், பண்புத்தொகை, வினைத்தொகை போன்றவையே தெரியாமல் இருக்கலாம். விரைவில் அதைப்பற்றி சுருக்கமாக எழுதுகிறேன்.
    இனி இலக்கிய சுவைக்கு செல்வோம்.


இலக்கியங்களில் கைக்கிளைக்கு என்றுமே தனி சுவைதான். சோழன் உலாவில் கைக்கிளை வசப்படும் பெண்ணொருத்தி தவித்து பாடும் பாடலை கீழே காண்போம்.
   நாண்ஒருபால் வாங்க, நலன்ஒருபால் உள்நெகிழ்ப்பக்
   காமருதோள் கிள்ளிக்குஎன் கண்கவற்ற- யாமத்து
   இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு போலத்
   திரிதரும் பேரும்என் நெஞ்சு.

சோழன் உலா வருகிறான். அப்போது அவனைக் கண்டு ஒருதலையாய் காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி இவ்வாறு பாடுகிறாள்.

    உலா வந்த சோழனைக் காண அவளது கண்கள் துடித்தன, ஆனால் பெண்மைக்கே உரிய வெட்கமோ அவளை வெளியே எட்டிப்பார்க்கவிடாமல் தடுத்தது. காதல் வயப்பட்ட மனமோ அவளை எட்டிப்பார் என உள்ளத்துள் தூண்டிவிட்டது. வெளியே உலாவரும் சோழனை பார்க்க வாசல்வரை செல்வதும் நாணம் தடுக்க திரும்புவதுமாக நடுயாமத்தில் இப்படியே போவதும் வருவதுமாக அலைந்தாளாம். அது எப்படி என்றால் ஒரு குச்சியின் இருமுனைகளிலும் நெருப்பு எரிய இடையில் உள்ளே மாட்டிக்கொண்ட எறும்பானது எப்படி இருமுனைக்கும் மாறிமாறி அலையுமோ அப்படி அவள் அலைந்தாளாம். அப்படி அவள் மனம் அவளை அலைகழித்ததாம்.
எந்த சோழனை அவள் ஒருதலையாய் காதலித்தாள்? நல்ல வலிமையான அகன்ற தோள்களை உடைய சோழன் கிள்ளியைக் கண்டுதான் இவ்வாறு அவள் காதல் கொண்டாள்.

மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்! உங்கள் பின்னூட்டங்கள் என்னை வழிநடத்தும்! தயங்காமல் தங்களின் கருத்துக்களை தெரிவித்து என்னை செறிவூட்டூங்கள்! நன்றி!


Comments

  1. அட்டவணை, இலக்கிய சுவை : அருமை... நன்றி... பாராட்டுக்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2