சங்கரராமனும் சங்கராச்சாரியும்! கதம்பசோறு பகுதி 16

சங்கரராமனும் சங்கராச்சாரியும்!

     காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில் இருந்து சங்கராச்சாரியார்கள் இருவரும் மேலும் 21 பேரும்  ஆதாரம் இல்லை என விடுவிக்கப்பட்டுள்ளார்கள். 2004ல் வெட்டிக்கொல்லப்பட்டார் சங்கரராமன். கொலை நடந்தது ஒரு பட்டப்பகல் பொது இடத்தில்! அப்போது பரபரப்பாக பேசப்பட்டு சங்கராச்சாரியார்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறி வழக்கு புதுவைக்கு சென்று சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி இன்று அனைவருமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்திய தீர்ப்பாக அமைந்துள்ளது. அரசு நினைத்தால் ஒருவனை குற்றவாளியாகவும் ஆக்கலாம் நிரபராதியாகவும் ஆக்கலாம் போல! ஆருஷி வழக்கில் சந்தேகம் ஊர்ஜிதம் ஆகாத நிலையிலும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்தவழக்கில் வலுவான சாட்சிகள் இருந்தும் அவை பிறழ் சாட்சிகளாக மாறவும் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். அப்படியானால் சங்கரராமனை கொன்றது யார்? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

சாலைகள் அமைக்க உலக வங்கி ஆய்வு!
     தமிழகத்தில் 1678 கி.மீ நீளத்திற்கு சாலைகள் சீரமைக்கும் திட்டம் உலகவங்கியின் உதவியுடன் நடைபெற உள்ளது. அதற்காக உலக வங்கி ஆய்வினை மேற்கொண்டுவருகிறது. மத்திய அரசால் பராமரிக்கப்படாத நெடுஞ்சாலை, மாநிலநெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலை ஆகிய சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்று குறுகலாகவும் உள்ளன. அதனால் விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்த சாலைகளை மேம்படுத்த 8583 கோடி ரூபாய் செலவு ஆகும். இதை உலக வங்கி மற்றும் மத்திய அரசு ஒப்புதலுடன் தமிழக அரசு நிறைவேற்ற உள்ளது. இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்க கொள்கை அளவில் உலகவங்கி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் உலகவங்கியின்  இந்திய பிரிவு அதிகாரிகள் தமிழகம் வந்து சாலைகளை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவர்கள் ஆய்வறிக்கை அளித்தபின் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் பின்னர் சாலைகள் சீரமைக்கப்படும்.
 
குக்கூ குழந்தைகள் திருவிழா!

      திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி குக்கூ குழந்தைகள் நூலகத்தின் இரண்டாம் ஆண்டுவிழாவை பனைமர விழிப்புணர்வு விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர் குழந்தைகள். பனை ஓலையால் ஆன கலைப்பொருட்கள், குழந்தைகள் இலக்கியம்,3கோடியே 60 லட்சம் மரக்கன்றுகளை நட்டுவைத்து பூமிக்கு மருதாணி பூசிய ஆப்பிரிகாவின் வங்காரி மாத்தாய் என கிட்டத்தட்ட குழந்தைகளால் வடிவமைக்கப்பட்ட கலைப்பொருள்கள் களஞ்சியமாக இருந்தது. பள்ளிக்குழந்தைகள் பனைமரம் பற்றி விவாதம் செய்யும் ஆரம்ப நிகழ்ச்சி அசத்தலாக அமைந்தது. இந்த விழாவில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கலந்து கொண்டு குழந்தைகளின் பங்களிப்பை பார்த்து வியந்தார். குக்கூ நண்பர்கள், குழந்தைகள் சந்திப்பதற்கான ஒரு இடம்தான் நம் நூலகம், ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை படைப்பாக செய்கிறார்கள். அருகில் இருக்கும் விதை நாற்றுப்பண்ணையை பராமரிப்பதும் அவர்கள்தான். இங்குள்ள எளிய மனிதர்களின் வாழ்க்கையை அவர்களாகவே அறிகிறார்கள் சிலம்ப பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது என்றனர்.

பொது நூலக துறையில் முதல் முறையாக பார்வையற்ற மாற்றுத்திறனாளி நியமனம்;

  டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற வாலிபர் பொது நூலகத்துறையில் இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்த்த முத்து சுப்ரமண்யம் கோவை மாவட்ட  மைய நூலக அலுவலகத்தில் அக்டோபர் 17 ல்  பணியில் சேர்ந்தார். இதுகுறித்து முத்துவெங்கடசுப்ரமண்யம் கூறியது அரசுத்துறையில் பணியில் சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது பார்வையில்லை என்பதால் சிரமப்பட்டு இருக்கிறேன்! ஆனால் வருத்தப்பட்டது இல்லை! என்னை போன்றவர்கள் வீட்டில் முடங்காமல் கல்வி என்ற ஆயுதத்தை கட்டாயமாக்கிக்கொள்ளவேண்டும். இந்த வேலை தந்தையில்லாத என் குடும்பத்திற்கு காப்பாற்ற பெரிதும் உதவியாக இருக்கிறது என்றார்.
 மாவட்ட நூலக அதிகாரி கூறுகையில் முத்து சுப்ரமணியத்திற்கு தற்போது சிறு பணிகள் வழங்கப்பட்டுவருகிறது. விரைவில் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்தியேகமான நூலகம் அமைய உள்ளது. பின்னர் அங்கு பணியமர்த்தப்படுவார் என்றார்.

தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமான சத்தியமங்கலம்!

  தேசிய புலிகள் ஆணைய உத்தரவுப்படி தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்.  தமிழகத்தில் நீலகிரியில் முதுமலை, கோவையில் ஆனைமலை, நெல்லையில் முண்டந்துறை ஆகிய இடங்களில் ஏற்கனவே புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் உள்ள 1லட்சத்து 4000 ஹெக்டேர் வனப்பரப்பு புலிகள் காப்பகமாக அமல்படுத்தப்படுகிறது. இந்த வனக்கோட்டத்தில் 25க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளன. புலிகள் வனக்காப்பகம் வந்துள்ளதால் சத்தி வனக்கோட்டத்தில் 5 சரகங்களில் இருந்து ஏழு சரகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. புதியதாக வன சரக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது இயற்கை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இந்த வனப்பகுதியில் புலி,மான், கழுதைப்புலி ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் வாழக்கூடிய சிறப்பு பெற்றது. இருமாநில எல்லையில் கிழக்குத்தொடர்ச்சி மலையின் துவக்கமாக இருப்பதும் சிறப்பு.  வீரப்பன் காடாக இருந்த சத்தி தற்போது ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் முயற்சியினால் புலிகள் காப்பகமாக மாறியுள்ளது.

இந்திய விவசாயிகள் பீதி!

   உலக அளவில் வர்த்தகத்தை எளிமையாக்குவது மற்றும் அதிகரிப்பது என்ற நோக்கங்களுடன் உலக வர்த்தக அமைப்பு செயல்படுகிறது. இதில் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பு மூலம் வர்தகத்தை பெருக்கும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அதில் சில வளரும் நாடுகளுக்கு பாதகமாக அமைகின்றன.
    அப்படிஒன்றுதான் உலக வேளாண் ஒப்பந்தம். அதன்படி வர்த்தகத்தை பாதிக்கும் வகையில் மானியங்கள் கொடுக்கக்கூடாது.  உதாரணமாக நெல் சாகுபடிக்கு மானியங்கள் கொடுப்பதன் மூலம் இந்திய நெல் அரிசியின் விலை மற்றநாடுகளை விட குறைந்திருக்கும் என்றால் அது தடை செய்யப்படும்.
 குறிப்பிட்ட பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ஆதரவு தெரிவிக்கக்கூடாது. மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விளைபொருள்களுக்கான வரியை குறைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் உள்ளன.  இதனால் வெளிநாட்டுவிளைபொருட்கள் இந்திய சந்தையில் கொட்டப்பட்டு இந்திய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. டிச 3 முதல் 6வரை இந்தோனேசியாவில் பாலி தீவில்  நடக்க உள்ள வர்த்தக அமைப்பு கூட்டத்தில் இதுகுறித்து பேசப்பட உள்ளது. இந்தியா தன் உணவுக்கான உரிமையினை விட்டுக்கொடுக்காது. விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் என்று சொல்லியிருக்கிறார் மத்திய தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா! பார்க்கலாம்!

கார்பந்தய சக்ரவர்த்தி வெட்டல்!

     ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு ஜாம்பவான் உண்டு. கிரிக்கெட்டில் வெற்றிகளை குவித்த நமது சச்சின் போல கார்பந்தயத்தில் பார்முலா ஒன் போட்டிகளில் அசத்தலான வெற்றிகளை குவித்து ஜாம்பவானாக இருக்கிறார் ஜெர்மனியை சேர்ந்த இளம் வீரர் வெட்டல். இந்த ஆண்டு நடந்த 19 போட்டிகளில் 13ல் வென்று ஒரு ஆண்டில் அதிக வெற்றி பெற்ற சூமாக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். இளவயதில் பார்முலா-1 பட்டத்தை வென்றவர் என்ற சாதனையையும் இவருக்குண்டு. 23 வயது 133 நாட்களில் இந்த சாதனை செய்தார். இந்த சீசனில் மொத்தம் 397 புள்ளிகள் பெற்ற இவர் இவருக்கு அடுத்ததாக வந்த பெர்னாண்டோ அலோன்சாவை விட கூடுதலாக 155 புள்ளிகள் பெற்றுள்ளார். இதன் மூலம் இவரின் அசத்தலான ஆட்டம் தெரிய வரும்.

டிப்ஸ்! டிப்ஸ்!

பழம் நறுக்கிய தோலை மிக்சியில் அடித்து செடிக்கு ஊற்றி மண்ணால் மூடினால் சத்தான இயற்கை உரம் கிடைக்கும் செடிக்கு!

கற்பூரம்,பச்சைக்கற்பூரம், ரசகற்பூரம், மிளகு, மருதாணி, சாதாரண உப்பு ஆகியவற்றை நன்கு பொடி செய்து சிறிய மூட்டைகளாக கட்டி பொடி செய்து சிறிய மூட்டைகளாக கட்டி துணி வைக்கும் பீரோ, புத்தக அலமாரியில் வைத்தால் பூச்சித்தொல்லை இருக்காது.

  எடை குறைவான இருசக்கர வாகனம் பயன்படுத்துவோர் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். மிக வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக கழுத்து, முதுகு, இடுப்பு பகுதியை பாதிக்கும்.

தையல் சாமான்கள் போட்டுவைக்கும் பெட்டியில் ஒரு சிறிய காந்ததுண்டை போட்டுவைத்தால் ஊசி ஊக்கு போன்றவை தரையில் விழுந்தால் எடுக்க சுலபமாக இருக்கும்.

பிச்சை எடுத்த வித்யாபாலன்!

    டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படத்தில் மறைந்த நடிகை சில்க்ஸ்மிதாவாக நடித்து புகழ்பெற்றவர் வித்யாபாலன். பாலிவுட் பிரபலமான இவர் தான் நடிக்கும் பாத்திரங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்.அந்த பாத்திரமாகவே வாழ்ந்துகாட்ட நிறைய ஹோம் ஒர்க் செய்பவர். தான் நடிக்கும் புதிய படமொன்றில் பிச்சைக்கார வேடத்தில் நடிக்க இருக்கும் இவர் அதற்காக மும்பையில் பிச்சைக்காரர்களை உற்று கவனித்து வந்தார். ஒருநாள் திடீரென ஆண்வேடம் பூண்டு பிச்சைக்காரனாக பிச்சைகாரர்களுடன் ஒரு ரயில் நிலையத்தில் அமர்ந்துவிட்டாராம். அப்போதுபிச்சைக் கேட்ட இவரை ஆளு நல்லாத்தானே திடமா இருக்கே! உழைச்சு பிழைச்சா என்ன என்று கேட்ட ஒருபெரியவர் ஒரு ரூபாய் தர்மம் செய்தாராம்! தன்னுடைய பிச்சைக்கார வேடம் தத்ரூபமாய் பொருந்திவிட்டதை நினைத்து பெருமிதம் அடைந்த வித்யாபாலன் அந்த படத்தில் உற்சாகமாக நடித்துவருகிறாராம்.

கலைவாணரும் கல்லும்!

    கலைவாணர் என்.எஸ். கே.இல்லத்தில் ஒரு திருமணவிருந்து. கலைவாணரும் நகைச்சுவை நடிகர் தங்கவேலுவும் உணவருந்திக்கொண்டிருந்தனர். கலைவாணர் தன் வாயில் சாதத்தை அள்ளிவைத்து மெல்லும்போது  ஒரு கல்லைக் கடித்துவிட்டார். உடனே சமையல்காரரை கூப்பிடச்சொல்லி வாயிலிருந்த கல்லை எடுத்துக் காட்டினார்.
   பிறகு ஏம்பா, உன் முதலாளியான என்னை மட்டும் தனியா கவனிக்கிறே? தப்பில்லே? பந்தியிலே மத்தவங்களை அவமானப்படுத்தறமாதிரி இருக்கும். சாப்பாட்டு விஷயத்துல எல்லோரையும் சமமா கவனிக்கனும்பா! இதப் பாரு! எனக்கு மட்டும் கல்லு போட்டிருக்கே! இத மாதிரி எல்லோருக்கும் ஆளுக்கொரு கல்லுப் போடுப்பா! என்று சமையல்காரரின் தவறை நாசூக்காக சுட்டிக்காட்டினார்.
   எல்லோரும் அவரது நகைச்சுவையை ரசித்து மகிழ்ந்தனர்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. பகிர்விற்கு நன்றி சுரேஷ்

  ReplyDelete
 2. அருமையான டிப்ஸ்கள் உட்பட அனைத்தும் அருமை... பாராட்டுக்கள்...

  ReplyDelete
 3. முத்து சுப்ரமண்யம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. anaiththu seythiyum payanullavaikal.nantri sako..

  ReplyDelete
 5. அனைத்தும் சுவாரஸ்யம்.... சங்கரராமன் தானே வெட்டிக்கொண்டு செத்துப்போன விஷயம் உங்களுக்கு தெரியாதா... :-))

  ReplyDelete
 6. உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் . . நேரமிருந்தால் தொடருங்கள்

  இந்த வருடம் : திரும்பி பார்க்கிறேன் (தொடர்பதிவு )

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6