உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 22
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 22
உருவகம் என்பது அந்த பொருளையே சிறப்பிப்பது ஆகும்.
உதாரணமாக பவளவாய் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இதனுடைய பொருள் பவளம் போன்ற வாய்
என்பதாகும். இதையே உருவகப் படுத்தும் போது வாய்ப்பவளம் என வரும். இதன் பொருள் வாய்
பவளம் போன்றது என்பதாகும். உவமைத்தொகையில் முதல் பகுதி உவமையாகவும் அடுத்த பகுதி உவமேயமாகவும்
அமையும். அதே சமயம் உருவகத்தில் உவமேயம் முதல் பகுதியாகவும் உவமை அடுத்த பகுதியாகவும்
இருக்கும். இன்னும் சுருங்கச் சொன்னால் உவமையை
திருப்பிப் போட்டால் அது உருவகமாகும். உவமானத்தையும் உவமேயத்தையும் வேறுபடுத்தாது இரண்டும்
ஒன்றாக இருப்பது உருவகமாகும்
உருவகத்திற்கு சில எடுத்துக் காட்டுகள்:
உவமை - உருவகம்
அமுதமொழி மொழியமுது
கயற்கண் கண்கயல்
தேன் தமிழ் தமிழ்த்தேன்
பூவிரல் விரல்பூ
மதிமுகம் முகமதி
இனி இலக்கியம்;
புறநானூற்று பாடல் ஒன்றை பார்ப்போம்!
இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடிணி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே!
முல்லை பூப்பது இயற்கை! இந்த முல்லையை பார்த்து
கவிஞர் இவ்வாறு கேட்கிறார் உன்னை இளைஞர்கள்
சூட மாட்டார்கள். வளைகரம் அணிந்த பெண்டிர் விருப்பமுடன் பறித்துக் கட்டி தலையில் சூட்டிக்
கொள்ள மாட்டார்கள். மிக நல்ல கீதங்களை இசைக்கும் யாழை மீட்டும் பாணனும் உன்னை சூட மாட்டான்.
அவனுடைய மனைவியாகிய பாடிணியும் அணிய மாட்டாள். ஏன்?
ஆண்மை என்பதற்கு இலக்கணமாய் ஆடவர்குல திலகமாய் ஒல்லையூர் நாட்டை ஆண்டுவந்த வால் வேல் கலைகளில்
தேர்ச்சி பெற்ற சாத்தன் என்னும் அரசன் மாய்ந்துவிட்டான்.
அவன் மாய்ந்த பின் உன்னை சூட்டிக் கொள்ள யார் முன் வருவர். இந்த ஒல்லையூர் நாட்டினிலும்
துக்கம் அனுஷ்டிக்கும் போது நீ சிரித்தபடி ஏன் மலர்ந்தாய்? என்று இரங்கல் கவி பாடியுள்ளார்
கவிஞர். இதை எழுதியவர் குடவாயிற் கீரத்தனார்.
இதைவிட அருமையாக ஒரு இரங்கற்பா எழுத முடியுமா?
தெரியவில்லை! நான் மேனிலைப்படிக்கையில் படித்த பாடல் இது என்னை மிகவும் கவர்ந்தது.
உங்களிடம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இன்னும் நிறைய பார்ப்போம்!
பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை
பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்! நன்றி!
நல்ல விளக்கம்... மனம் கவர்ந்த பாடலும் நன்று...
ReplyDeleteநன்றி...
யப்பா இம்புட்டு தமிழ் தெரிஞ்சா நான் எங்கேயோப் போயிருப்பேன் யாவும் தேன் பொங்கும் தமிழ் அமுதம்...!
ReplyDeleteஅருமை அய்யா
ReplyDeleteசுரேஷ் நல்ல பாடல் அறிமுகம். உவமை உருவகம் வேறுபாட்டை எடுத்துக் காட்டுகளுடன் கூறியது சிறப்பு.
ReplyDelete