தளிர் கல்வி நிலையத்தின் கதை! பகுதி 2
தளிர் கல்வி நிலையத்தின் கதை! பகுதி 2
சென்ற பகுதியில் டியுசன்
எப்படி தொடங்கினேன் என்று கூறியிருந்தேன். இந்த டியுசன் ஓரளவு வளர்ச்சி பெறும் சமயத்தில்
எஸ்.டி.டீ பூத் இணைந்த பெட்டிக்கடை ஒன்று பஞ்செட்டியில் பள்ளியருகே வைத்து இருந்தேன்.
ஒரு சமயத்தில் டியுசனா? பூத்தா? என்ற பிரச்சனை ஒன்று எழுந்தது. டியுசனுக்கு சாக்பீஸும்
உழைப்பும் தவிர வேறு முதலீடு இல்லை! எஸ்.டீடீ பூத்திற்கு அப்போது ஐம்பதிலிருந்து எழுபத்தையாயிரம்
வரை முதலீடு செய்திருந்தோம். வேலை இல்லாது இருக்கிறேன் என்று வீட்டினர் வைத்துக் கொடுத்த
தொழில் அது. முதலில் எனக்கு அதில் கொஞ்சம் ஆர்வம் இருந்தது உண்மை! ஆனால் பி.எஸ்.என்.எல்
நிர்வாகம் கொடுத்த சில டார்ச்சர்கள். தொழில் போட்டியாளர்களின் தொல்லைகள் அங்கு வேலைக்கு
வைத்த நபர்களின் திருவிளையாடல்கள் எனக்கு அந்த தொழிலின் மீது இருந்த ஆர்வத்தை அழிக்கச்
செய்தன.
ஒரு நிலையில் எஸ்.டீடீ பூத்தை விற்க முடிவு
செய்தேன். வீட்டினரிடம் சொன்னபோது பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் நான் உறுதியாக
நின்றேன். முக்கியமாக எனது தந்தையின் பலத்த எதிர்ப்பையும் மீறி அந்த கடையை விற்று வந்த
பணத்தை வங்கியில் போட்டேன். எனக்கு பிடித்த நான் விரும்பிய ஆசிரியர் தொழிலை டியுசன்
எடுப்பதன் மூலம் தொடர்ந்தேன். அந்த வருடம் என்னிடம் படித்த ஐந்து பேர் பாஸ் ஆனதால்
ஊரில் பத்தாம் வகுப்பு படித்த அனைவரும் ஏறக்குறைய பன்னிரண்டு பேர் என் டியுசன் வகுப்பில்
சேர்ந்தார்கள். எனக்கு பெரு மகிழ்ச்சி! ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நிலைக்கவில்லை!
பத்தாம் வகுப்பிற்கு சேர்ந்தவர்களுக்கு 2001ல் நாங்கள் வாங்கிய கட்டணம் 30 ரூபாய்.
அதையே சிலர் பல மாதங்கள் பாக்கி வைத்து தராமல் நின்றுவிடுவர். சிலர் இரண்டு மூன்று
மாதங்கள் சேர்த்து தருவர். அந்தவருடம் எங்கள் மாத வருமானம் 2000த்தை கடந்தது. உடன்
கற்றுக்கொடுத்த நண்பர்கள் மகேஷ், மதன் போன்றோர் தங்களுக்கு ஊதியம் ஏதும் வேண்டாம்.
ஏதோ சில மணி நேரம் எங்களுக்கும் பயனுள்ளதாக பொழுது போகிறது. உங்கள் குடும்ப செலவுகள்
அதிகம். நீங்கள் சம்பளம் தரவேண்டாம் என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தனர்.
ஆனால் இது அந்த வருடம் காலாண்டு வரையே நீடித்தது.
காலாண்டு தேர்வு முடிந்ததும் பத்தாம் வகுப்பில்
சேர்ந்த மாணவர்கள் அனைவரும் ஒருவர்
பின் ஒருவராக நின்றுவிட்டனர். என்ன விசயம் என்று விசாரித்ததில் பள்ளியில் இராமகிருஷ்ண
மடம் சார்பில் இலவச வகுப்புக்கள் எடுப்பதால் டியுசன் நின்றுவிட்டதாக கூறிவிட்டனர்.
பத்தாம்வகுப்பு மாணவர்கள்தான் நின்றுவிட்டனர். மற்ற மாணவர்கள் தொடர்ந்தனர். ஆகையால்
என் நம்பிக்கை குலையவில்லை! நின்று போன மாணவர்களில் ஒருவன் மட்டும் மீண்டும் வந்து
சேர்ந்தான். அவனுக்கு சில மாதங்கள் சொல்லிக் கொடுத்து இறுதியில் பாஸ் ஆகிவிட்டான்.
அடுத்த கல்வியாண்டு துவங்கியது. இந்த வருடம் எனது கனவு ஆண்டாக அமைந்தது.
பத்தாம் வகுப்பில் என்னிடம் ஒன்பதாம் வகுப்பு
படித்த ஆறு மாணவர்களுடன் புதிதாக நான்கு பேர் சேர்ந்து பத்து பேர் சேர்ந்தார்கள். அவர்களிடம்
முதலிலேயே கூறிவிட்டேன். படித்தால் இங்கு மட்டும் படியுங்கள்! இல்லையெனில் இராமகிருஷ்ணமட
வகுப்புகளுக்கு செல்வதாக இருந்தால் இன்றே சென்றுவிடுங்கள்! இடையில் யாரும் நிற்க கூடாது.
அதற்கு சம்மதம் எனில் வகுப்பு நடக்கும் என்று அவர்களின் பெற்றோர்களிடம் உறுதி வாங்கிக்
கொண்டேன். இந்த வருடம் எனக்கு உதவ நண்பர்களும் குறைந்து விட்டனர். மகேஷ் மட்டும் அவ்வப்போது
வந்து உதவுவார். அதனால் பத்தாம் வகுப்பிற்கு அனைத்து பாடங்களையும் போதிக்க நான் ஒருவனே.
ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புக்கள் வைத்தேன்.
எல்லா பாடங்களிலும் ஒரிருவரி விடைகள் நானே குறிப்பெடுத்துக் கொடுத்து படிக்க வைத்தேன்.
அதே சமயம் மாணவர்களுக்கு வெறுப்பையும் ஏற்படுத்த வில்லை! விளையாடவும் விட்டேன். இத்துடன்
சனிக்கிழமைகளில் பொதுஅறிவு க்விஸ் போட்டிகள் நடக்கும். இருபிரிவாக பிரிக்கப்பட்டு கேள்விகள்
கேட்டு பரிசுகள் வழங்குவேன். இப்படி அந்தவருடம் சிறப்பாகவே நடந்தது டியுசன். இறுதித்தேர்வில்
இரண்டு மாணவர்கள் மட்டும் ஒரு சப்ஜெக்டில் பெயில் மற்றவர்கள் பாஸ் அதிலும் ஒரு மாணவன்
450 மதிப்பெண்கள் எடுத்து சோழவரம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் முதல் மாணவனாக வந்தான்.
அடுத்து இன்னொருவன் 427 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடம் பிடித்தான். அதேவேளையில் பெண்கள்
உயர்நிலைப்பள்ளியில் படித்த எங்கள் மாணவி 425 மதிப்பெண்களுடன் அந்த பள்ளியில் மூன்றாம்
இட பிடிக்க ஊரே எங்களை திரும்பிப் பார்த்தது.
எதையோ சாதித்த மாதிரி ஒரு திருப்தி கிடைத்தது.
இராமகிருஷ்ண மடத்தின் கல்வி வகுப்புகளுக்கு
பிள்ளைகளை அனுப்பாவிட்டால் பரிட்சை எழுத விடமாட்டேன் என்று சொன்ன தலைமை ஆசிரியர் அவரிடம்
பலமுறை வாக்குவாதம் செய்து இந்த பிள்ளைகளைஎன் கல்வி நிலையத்தில் தொடர்ந்து படிக்க வைத்தேன்.
அவரும் எங்களின் திறமையை வெகுவாக பாராட்டினார். இராமகிருஷ்ண மடத்தில் பணியாற்றியவர்களும்
இவன் என்ன கற்றுக் கொடுத்துவிடுவான் என்று அப்போது ஏளனமாக சொன்னவர்கள் இந்த வெற்றிக்குப் பின் என்னுடைய கல்வி நிலையத்தை
ஒரு மரியாதையுடன் பார்த்தார்கள். இந்த வெற்றிக்கு காரணம் எனது உழைப்பு மட்டும் அல்ல!
என் மீது நம்பிக்கை வைத்து தன்னுடைய பிள்ளைகளை என்னிடம் பயில அனுப்பி வைத்த பெற்றோர்களும்
இலவசக் கல்வி, நிறைய இலவசங்கள் என்று பலர் அழைத்தும் செல்லாமல் என்னிடம் பயின்ற மாணவர்களும்தான்.
முதலிடம் பிடித்த லட்சுமி நாராயணன், இரண்டாம் இடம்
பிடித்த இளையராஜா, மூன்றாம் இடம் பிடித்த தனலட்சுமி ஆகியோர் இன்று நல்ல நிலைமையில்
இருக்கிறார்கள். ஐந்தாம் வகுப்புமுதல் இவர்கள் என்னிடம் பயின்றவர்கள். இது தவிர பாஸ்
ஆன அனைவருமே 350லிருந்து 400ஐ கடந்தே மதிப்பெண் பெற்றார்கள். இருவர் பெயில் ஆனது மட்டுமே
ஒரு கரும்புள்ளி. அதையும் அடுத்த ஆண்டு துடைத்தெறிந்து 100 சதவீத தேர்ச்சியைக் கொடுத்தோம்.
இப்படி பீடு நடை போட ஆரம்பித்தது தளிர் கல்வி
நிலையம்!
மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில்
இன்னும் பார்க்கலாம்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட்
செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
யார் வந்தாலும் வராவிட்டாலும் தொடர்ந்தீர்களே - அந்த நம்பிக்கை... மனஉறுதி... அதுவும் தானாக... என்றும் உங்களை தாங்கும்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
உங்க விடாமுயற்சி, தன்னம்பிக்கை, எல்லாவற்றையும் விட உங்க மனசுக்கு பிடிச்ச விஷயத்த செய்த அணுகுமுறை தான் உங்க வெற்றிக்கு காரணம்.. தளிர் மேலும் தழைத்தோங்க என் வாழ்த்துகள்..
ReplyDelete