முடிவுக்கு வந்த நூறாண்டு கடந்த தந்தி சேவை!

ஏறத்தாழ, 160 ஆண்டு மகத்தான பணிக்குப் பின், இந்திய தந்தித்துறை நேற்றுடன் ஓய்வு பெற்றது. தந்தி சேவகனைக் கண்டால், என்ன கெட்ட செய்தியோ என்று, குடும்பமே பதைபதைக்கும் காலமும் இருந்தது. அப்போது, பெரும்பாலான தந்திகள் மரணச் செய்திகளே. தந்தியின் ஜனனமே, ஒரு மரணத்திற்குப் பின்தான், தெரியுமா?வாழத்துத் தந்திகள், தந்தி மணியார்டர் என்பவை, பிறகே வந்தன. தந்தியை மனுவாக பாவித்து, வழக்கை எடுத்து நடத்திய நீதிபதிகளும் உண்டு. உரிய காலத்தில், தூக்கு தண்டனையை நிறுத்திய தந்திகள் உண்டு. உரிய நேரத்தில் தந்தி போகாது; எனவே, தூக்கு தண்டனையை நிறைவேற்றி விடலாம் என்று அர” செயல்பட்டது, சமீபகால வரலாறு.பல வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், ஒற்றை வார்த்தையில் உள்ளூர் தந்தி நிலையத்தில் முகவரியைப் பதிவு செய்ய முடிந்தது.


வாழ்த்து செய்தி :

திருமண மண்டபங்களுக்கும் சுருக்கமான முகவரி உண்டு. இந்த எண்ணுக்கு, இந்த வாழ்த்துச் செய்தி என்று புதுமுறை வந்தது. எண் மாறினால் "மகிழ்ச்சியான திருமண வாழ்வுக்கு வாழ்த்துக்கள்' என்பது, "தங்கள் துக்கத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபம்' என்று, மாறிவிடலாம். எனவே, எண்ணில் கவனம் வேண்டும். எழுத்தைப் பிரதிபலிக்கும் ஒலியில், அதைவிட அதிக கவனம் வேண்டும். துல்லியம், நுணுக்கம், கூர்மையான காது இருந்தால் தான், தந்தி சரியாகப் போய் சேரும்.ஒரு எழுத்துக்கு இரண்டு மூன்று முறை, விதம்விதமாகக் குமிழைத் தட்ட வேண்டிய தகவல் சாதனம், தந்தி. அந்த சிரமத்தைக் குறைத்தது டெலி பிரின்டர். ஒரு எழுத்துக்கு ஒரு முறை தட்டினால் போதும். இந்தத் தலைமுறைக்கு, அதை புரிய வைக்க இப்படிச் சொல்லலாம். பழைய மொபைல் போன்களில், எஸ்.எம்.எஸ்., தகவல் கொடுப்பதற்குச் சில எழுத்துக்களுக்கு ஒரு முறை, சிலவற்றிற்கு இருமுறை அல்லது மூன்று முறை தட்டுவது போல, தந்திக் கருவியின் குமிழை, இரண்டு, மூன்று முறை தட்டவேண்டும். அதிலும், ஒரு வித்தியாசம் உண்டு. மொபைல் போனில் பட்டனைத் தட்டுவது ஒரே விதத்தில், தந்தியில் தட்டும் விதம் மாறினால், எழுத்து மாறிவிடும்; தகவல் தவறாகப் போய்சேரும். அனுப்பும் ஊரில், தந்தி அடிப்பவர் கவனமாக இருப்பதை போலவே, பெறும் ஊரில் உள்ள நபரும் கட், கட, கட், கட என்ற ஒலிகளைச் சரியாகக் காதில் வாங்கிக் கொண்டு, எழுத வேண்டும். தவறான தகவல்களால் குடும்பங்களில், நிறுவனங் களில் குழப்பங்கள் நேர்ந்திருக்கின்றன.ஒரு சிறிய அழுத்தம், "கட்' கொஞ்சம் கூடுதல் அழுத்தம், "கட' இந்தக் குறைந்த அழுத்தம், கூடுதல் அழுத்தம் இரண்டுக்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி தேவை. இல்லாவிட்டால் எழுத்து மாறிவிடும். சேர்ந்த இடத்தில் செய்தி சங்கடத்தை ஏற்படுத்தும்.


"கட், கட, கட், கட' :

மிகவும் துல்லியமாகத் தந்திக் கருவியை இயக்குவதற்கு, தபால் தந்தித் துறையில் பயிற்சி தந்தனர். பெரிய ரயில்வே ஸ்டேஷன்களில், தனியாக தந்தி அலுவலர் உண்டு. ஆனால், எல்லா ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும், தந்தி அனுப்பும் முறை, பெறும் முறை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்."கட், கட, கட், கட' என்றபடி தந்தி மொழி ஒரு ஒலி வடிவம் மட்டுமே. அதற்கு வரி வடிவம் கிடையாது. தந்தி சாதனக் குமிழில், ஒரு குறுந்தட்டு தட்டுவதை "டாட்' என்கின்றனர். நெடுந்தட்டு "டேஷ்'. குறுந்தட்டுகளும், நெடுந்தட்டுகளும் மாறி மாறி வரும் ஒலிக் கூட்டணியே, தந்தி மொழி. ஆங்கிலத்தின், 26 எழுத்துக்களுக்கும், ஒன்று முதல் பூஜ்யம் வரையிலான எண்களுக்கும் இந்த குறுந்தட்டு, நெடுந்தட்டு ஒலிக்குறிப்புகள் உண்டு. ஆங்கிலச் சொற்களில் அதிகம் பயன்படும் "இ' என்ற எழுத்துக்கு ஒரு தட்டு. அடுத்து அதிகமாகப் பயன்படும் "டி' என்ற எழுத்துக்கு ஒரு நெடுந்தட்டு. 26 எழுத்துக்களுக்கு மேல் எழுத்துக்கள் உள்ள மொழிகளுக்கு வசதியாக, இந்தத் தந்தி மொழி சற்றே விரிவுபடுத்தப்பட்டது.


பாதிரியாரின் மகன்:

தந்தி தொழில் நுட்பத்தையும், ஒலி மொழியையும் கஷ்டப்பட்டு உருவாக்கியவர் சாமுவெல் பின்லே ப்ரீஸ் மோர்ஸ் என்ற அமெரிக்க ஓவியர். இவர் ஒரு பாதிரியாரின் மகன். ஓவியக் கல்விக் கூடத்தில், முறையாக ஓவியம் பயன்றவர். இவருக்கு, 1825ல், ஆயிரம் டாலர் சன்மானம் கொடுத்து, ஒரு பிரமுகரின் படம் வரையச் சொன்னார்கள். அந்தக் காலத்தில், அது பெரிய தொகை. இவர் வரைந்து கொண்டிருந்தபோது, இவரது மனைவிக்கு உடல் நலம் மோசமாகியிருப்பதாக, வெளியூரிலிருந்து தகவல் வந்தது. அந்த தகவல் கிடைத்து, இவர் ஊர் போய்ச் சேர்வதற்குள், மனைவி அடக்கம் செய்யப்பட்டார். உடனடியாக, தகவல் கிடைத்திருந்தால், மனைவியை உயிரோடு பார்த்திருக்கலாமே என்று துக்கப்பட்ட அவர், அவசர கால செய்திகளை விரைவாக தெரிவிக்க, ஏதாவது சாதனம் இருந்தால், வசதியாக இருக்குமே என்று யோசித்தார். ஓவியப் பணியை நிறுத்திவிட்டு, தகவல் தொடர்பு ஆராய்ச்சியில் இறங்கினார். மின்காந்த சக்தி பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பேராசிரியர்களை அணுகி, ஒலியை கம்பிகள் மூலம் எடுத்து செல்லும் உத்தியில், தந்தி சாதனத்தை வடிவமைத்தார். ஒரு நண்பருடன் சேர்ந்து, ஒலி மொழியையும் உருவாக்கினார்.தொழில் நுட்பத்தை செயல்படுத்துவதில், சிரமங்கள் இருந்தன. நூறு மீட்டருக்கு ஒரு கம்பம் என்று கம்பங்கள் நட்டு, அதன் தடத்தில் கம்பிகளை செலுத்தி, ஊர்களை இணைப்பது எளிதாக இல்லை. அதிக செலவு பிடித்தது. மார்ஸ் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியினால், உலகின் முதல் தந்தி வழித் தகவல் தொடர்பு அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசிக்கும், 38 மைல் தொலைவில் இருந்த பால்டிமோர் நகருக்குமிடையே ஏற்பட்டது.


நூறு அடிக்கு ஒரு கம்பம்:

அந்த நாள் மே, 24., 1844. தந்திப் போக்குவரத்துக்கு, தனி வர்த்தக நிறுவனம் மறு ஆண்டு மே மாதம் அமெரிக்காவில் துவங்கப்பட்டது. மிகவும் கஷ்டப்பட்டு அரசுடன் போராடி, வழக்காடி, 1847ல் மார்ஸ் தன் கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை பெற்றார். ஆனால், அவர் தன் சொந்த நாட்டில் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை.பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் தந்திப் போக்குவரத்து துவங்கியது. முதல் தந்தி, 1855ல் கல்கத்தாவுக்கும், மும்பைக்கும் இடையில் தரப்பட்டது. இதற்காக, இந்த இரண்டு நகரங்களுக்கிடையே, நூறு அடிக்கு ஒரு கம்பம் என்று நடப்பட்டு, தந்திக் கம்பிகள் இழுக்கப்பட்டன. 1860 - 61ல் நாட்டில், 145 தந்தி நிலையங்கள் உருவாயின. பின், படிப்படியாக எணணிக்கை உயர்ந்தது. 1914ல் தபால் துறையுடன் தந்திப் பிரிவு இணைக்கப்பட்டதும், தந்தி அலுவலகங்கள் அதிகமாயின. துவக்கத்தில் முகவரி உட்பட, 16 வார்த்தைகளுக்கு தந்திக் கட்டணம் ஒரு ரூபாய். ஒரு கட்டத்தில், தொலைவுக்கு தகுந்தபடி கட்டண விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. பின், ஒரே சீரான கட்டணம் நடைமுறைக்கு வந்தது.தந்தி, தினந்தோறும் மிக அதிகமாக பயன்பட்டது, பத்திரிகை துறைக்கே. ஒரு மாவட்டம் முழுவதும், சுற்றிச்சுற்றி செய்தி சேகரிக்கும் பத்திரிகை நிருபருக்கு, அந்தந்தப் பத்திரிகை, தந்தி அட்டை, தொலைபேசி அட்டை இரண்டையும் கொடுத்து விடும். அதன் மூலம், தந்தி அலுவலகங்களில் கட்டணம் கட்டாமல், தந்திகளை அனுப்பிவிடுவார். தந்தித் துறை, பத்திரிகை அலுவலகங்களிலிருந்து கட்டணத்தை பெற்றுக் கொள்ளும்.சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பத்திரிகையில் தந்திக் கலை பற்றி சுவாரஸ்யமான சிறுகதை வெளிவந்திருக்கிறது. இளம் காதலர்கள், ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்கின்றனர். எதிரெதிரான மேல் பெர்த்துகள், கீழ் பெர்த்தில் ஒரு முதியவர், மேல் பெர்த்தில் பயணிகள் இருவரும்,தந்தித் துறை ஊழியர்கள்.கீழே படுத்திருந்த கிழவருக்கு தெரியக் கூடாது என்று, தங்கள் பெர்த் நுனியில் பென்சிலால் கட் கட கட் கட என்று தட்டி, தந்தி மொழியில் காதல் வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர். ஒரு கட்டத்தில், போதும் நிறுத்துகிறீர்களா என்று, தந்தி மொழியிலேயே, ஒரு குறுக்கீடு வந்தது. குறுக்கிட்டவர் கிழவர். பாதி வெட்கத்துடன் பாதிக் கோபத்துடன் காதலர்கள் கிழவரைப் பார்க்க, அவர் சொன்னாராம், "நான் ஒரு "ரிட்டர்யர்டு டெலக்ராபிஸ்ட்'.


புதியன புகுதல்:

கம்ப்யூட்டரில் இ-மெயில் வசதி. அதற்கு முன் "பேக்ஸ்'. அதற்கும் முன் "டெலி பிரிண்டர்'. இப்போது பேக்ஸ், டெலிபிரிண்டருமே காலாவதியாகி வரும் போது, தந்தி மரிப்பது "புதியன புகுதலும் பழையன கழிதலும்' என்ற வகையில் ஒரு நியதியே. ஆனாலும், தந்தி சாதனம், தந்தி மொழி இவற்றை அந்தக் காலத்தில் பாடுபட்டு உருவாக்கிய தந்தியின் தந்தையை, இன்று நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.இந்தியாவில் தந்தி இன்று மரிக்கிறது என்றால், அது முழு உண்மை அல்ல. ரயில்வேத் துறையிலும், தந்தி சாதனங்களுக்கு இன்னமும் இடம் இருக்கிறது. ஒரு கட்டத்தில் தந்தி, இந்த இரண்டு துறைகளிலிருந்தும் கூட விடைபெறலாம். இப்போது நினைத்துப் பார்ப்பது போலவே, அப்போதும் சாமுவெல் மார்ஸ் என்ற அந்த ஓவியரை, விஞ்ஞானியை நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.
- ஆர்.நடராஜன்                                                                                                                                                                                                     நன்றி: தினமலர்

Comments

 1. உலக முன்னேற்றத்தில் புதியன புகுதலும் பழையன கழிதலும் புதிதல்ல இருந்தாலும் தந்தியின் 160 வருஷ சேவை பாராட்டுக்கு உரியது இல்லையா.

  ReplyDelete
 2. தந்தியின் சேவை பாராட்டிற்குரியது.
  தந்தியின் தந்தையைப் போற்றுவோம்

  ReplyDelete
 3. சிறப்பான ஆக்கத்தினை எந்நாளும் எழுதி வரும் அன்புச் சகோதரரே
  உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .நேரப் பற்றாக் குறை
  ஆதலால் முழுமையாகப் படிக்க முடியாமல் போவதுண்டு மன்னிக்கவும் .
  தொடர்ந்தும் உங்கள் ஆக்கதினைப் படிக்க முயற்சிக்கின்றேன் .மிக்க
  நன்றி பகிர்விற்கு .

  ReplyDelete
 4. மோர்ஸோட புகைப்படத்தையும் இணைத்திருக்கலாம். நன்றி

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2