தீப்பிடித்த கடல்! பாப்பாமலர்!
ஒரு பையன்
ஓட்டல்ல வேலை செஞ்சுகிட்டிருந்தான். அந்த ஓட்டலோட சமையலறையில அவிச்ச முட்டைங்க எப்பவும்
குவியலா இருக்கும். அப்பப்ப அந்த முட்டைக் குவியல்ல இருந்து ஒரு முட்டையை எடுத்து தின்பான்
அந்த பையன்.
ஒரு நாள் பையன் முட்டைய எடுத்து தின்றதை அந்த
ஓட்டல் முதலாளி பார்த்துட்டாரு.
டேய்! எத்தனை நாளா இந்த திருட்டு வேலை நடக்குது?
ன்னு அதட்டலா அவனை பிடிச்சு மிரட்டினாரு முதலாளி. பையனும் மறைக்காம “;ரொம்ப நாளாவே
நடக்குது முதலாளி” பசியெடுத்தா ஒரு முட்டை சாப்பிடுவேன்! என்று தவறை ஒத்துகிட்டான்.
முதலாளிக்கு கோவம் ஜாஸ்தியாயிருச்சு! அட எவ்வளவு
தைரியம் இருந்தா திருடனுதும் இல்லாம தினமும் திருடனேன்னு ஒத்துக்கவும் செய்யறியா? இத்தனைநாளா
நீ எவ்வளவு முட்டைகளை தின்னு தீர்த்தாயோ தெரியலையே! அத்தனை முட்டைகளும் இருந்து குஞ்சு
பொறிச்சிருந்தா எனக்கு எவ்வளவு லாபம் கிடைச்சிருக்கும்? நீ சாப்பிட்ட முட்டை எல்லாத்தையும்
கக்கு! இல்லாட்டி இன்னும் ஒரு மாசத்துக்கு சம்பளம் வாங்காம வேலை செய்! ன்னு மிரட்டினாரு
முதலாளி.
அந்த பையன் அவரோட மிரட்டலுக்கு பயப்படலை! பசிக்கு
ஒரு முட்டை எடுத்து சாப்பிட்டது தப்பா? நீங்க சொல்றதை ஒத்துக்க முடியாது. பஞ்சாயத்து
கூட்டுங்க! அவங்க சொல்றதை ஒத்துக்கறேன்ன்னு சொல்லிபுட்டான்.
அந்த ஊரில எந்த பஞ்சாயத்தா இருந்தாலும் நரிதான்
தலைமை தாங்கி தீர்ப்பு சொல்லும். இந்த பிரச்சனைக்கும் நரிக்கிட்டேயே போனாங்க! நரியும்
வழக்கை விசாரிச்சது. சரி தீர்ப்பை நாளைக்கு சொல்றேன்னு சொல்லிட்டு போயிருச்சு!
மறுநாள் பஞ்சாயத்து கூடிருச்சு! நரி என்ன
தீர்ப்பு சொல்ல போவுதுன்னு ஊர்ஜனம் முழுக்க கூடியிருந்துதுங்க! அந்த பையனும் ஓட்டல்
முதலாளியும் வந்து எதிரும் புதிருமா நிக்க நேரம் போய்க்கிட்டே இருந்துச்சு! தலைவர்
நரி ஆளையே காணோம். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம்னு ஓடிப்போய் அரை நாள் கடந்தப்ப நரி
மூச்சிறைக்க ஓடி வந்தது.
எல்லோரும் என்னை மன்னிக்கனும் ஓர் அவசர வேலைக்கு
போயிருந்ததாலே தாமதம் ஆயிருச்சுன்னு நரி சொல்லுச்சு!
அப்படியென்ன வேலை தலைவரே! ன்னு ஒருத்தர் கேட்டாரு!
என்னன்னு சொல்லுவேன்! காலையிலேயே பஞ்சாயத்துக்கு
கிளம்பிகிட்டு இருந்தேனா? அப்ப கடல் தீப்பிடிச்சு எரியறதா ஓடி வந்து சொன்னாங்க! நீங்கதான்
அதை வந்து அணைக்கணும்னு சொன்னாங்க! அதனால வைக்கோல்
விறகு இதெல்லாம் கொண்டுபோய் கடல்ல வீசி அதை அணைச்சிப்பிட்டு தீய தணிச்சி முடிச்சுட்டு இதோ இப்ப வந்து சேர்ந்தேன்!
சலிப்பா சொன்னது நரி!
இதைக்கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்! என்ன தலைவரே!
விளையாடாதீங்க! நாங்க என்ன முட்டாளா? கடல் எப்படி தீப்பிடிக்கும்னு கேட்டார்கள் சபையினர்.
சரி! அப்படியே தீப்பிடிச்சு இருந்தாலும் வைக்கோலும்
விறகும் கொண்டுபோய் போட்டா தீ அதிகமாத்தானே பத்திக்கும்! அதை கொண்டு இவரு அணைசாராமே!
எப்படி இது? என்று எல்லோரும் கசமுசாவென பேசிக் கொண்டனர். கூட்டத்தில் சலசலப்பு கூட
நரி கனைத்துக் கொண்டு பேசியது.
அப்ப! கடல் தீப்பிடிக்காது இல்ல!
பிடிக்காது!
பிடிச்சாலும் வைக்கோலும்
விறகும் கொண்டு அணைக்க முடியாதுன்னு சொல்றீங்க!
ஆமாம் தலைவரே! நீங்க விளையாட்டுக்குத்தானே! சொல்றீங்க!
அவிச்ச முட்டை குஞ்சு
பொறிக்குமுனு இவரு சொல்றதை நம்பி பஞ்சாயத்தை கூட்டறீங்க! நான் கடல் தீப்பிடிச்சதுன்னு
சொன்னா மட்டும் நம்ப மாட்டேங்கிறீங்களே!
அப்போதுதான் மக்களுக்கு தவறு புரிந்தது! அனைவரும்
தலை குனிந்தனர்.
நரி சொல்லியது.ஓட்டல்கள்லே
சின்ன பசங்களை வேலையிலே சேர்க்கறதே தப்பு! அப்படி சேர்த்ததுக்கப்புறம் ஒழுங்கா சம்பளமும்
சோறும் போட்டிருந்தா இவன் ஏன் ஒரு முட்டை எடுத்து தின்னப் போறான். பசிக்கு ஒரு முட்டையை
தின்னத பஞ்சாயத்துக்கு கொண்டு வந்துட்டாரு! இந்த முதலாளி.
ஏம்பா!
ஓட்டல் காரரே! இதுதான் தீர்ப்பு! சின்னபையனை வேலைக்கு சேர்த்ததும் இல்லாம அவன் மேல
பஞ்சாயத்தும் வைச்சதுக்கு உனக்கு தண்டனை உடனடியா இரண்டுமாச சம்பளத்தை கொடுத்து இந்த
பையனை வீட்டுக்கு அனுப்பனும் இனிமே சின்ன பசங்களை வேலையில சேர்த்தா உன் கடையை இழுத்து
மூடிருவோம் இதுதான் தீர்ப்பு கிளம்புங்க! என்றது.
தன் தலையில் தானே மண்ணைவாரி போட்டுக் கொண்டோமே
என்று முதலாளி பையனுக்கு இரண்டு மாத சம்பளத்தை கொடுத்து வேலைக்கு ஆளையும் இழந்து நின்றார்.
நரியின் நல்ல தீர்ப்பை
கண்டு மகிழ்ந்தான் சிறுவன்.
(செவி வழிக் கதை தழுவல்)
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
தன் தலையில் தானே மண்ணைவாரி போட்டுக் கொண்டோமே//ஆம் சிறுவர்களை வேலைக்கு வைக்ககூடாது என்பது தெரியறது.
ReplyDelete