ஓடிப்போன டீச்சர்! கதம்ப சோறு!

  கதம்ப சோறு!
 இளவரசன் உடல் தகனம்!
  ஒருவழியாக இறந்து போன இளவரசன் உடல் தகனம் செய்யப்பட்டது. பாவம்! இளவயது எத்தனையோ கனவுகளுடன் ஆரம்பித்த வாழ்க்கை பாதியில் கலைந்துபோய்விட்டது. இது இரு தரப்பாரிடையே பெரும் கலவரத்தினையும் ஏற்படுத்திவிட்டது. தனிப்பட்ட இருவரின் வாழ்க்கைப் பிரச்சனையில் தமிழகத்தின் இருபெரும் கட்சிகள்?! தங்கள் சமூகச் சண்டையாக பெரிதுபடுத்தி விட்டன. இது நடந்து சில தினங்களுக்குள் இன்றைய செய்தித்தாளில் இன்னொரு கலப்பு மணம் செய்து கொண்ட ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளன. இது எத்தனை நாள் நிலைக்கும். இதை அரசியல் சமூகம் ஏற்றுக் கொண்டால் கூட கட்சிகள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்குமா? என்று தெரியவில்லை! இறந்துபோன இளவரசனையோ அல்லது திவ்யாவின் தந்தையையோ இந்த கட்சிகள் திருப்பிக் கொண்டுவரப்போவது இல்லை! திவ்யாவிற்கு ஒரு புது வாழ்க்கையை அமைத்துக் கொடுக்குமா என்றாலும் கேள்விக்குறியே! அப்படியிருக்க இன்னும் சாதி தீ மூட்டி குளிர்காயும் இந்த கட்சிகளை மக்கள் அடையாளம் காண வேண்டும்.

தோனியின் தொடர் வெற்றிகள்!
      
தோல்வியின் பாதையில் சென்றுகொண்டிருந்த இந்திய அணி மீண்டும் சிலிர்த்தெழுந்து இந்தியாவில் ஆஸ்திரேலிய அணியை வாஷ் அவுட் செய்து சாம்பியன் டிராபி வென்று இப்போது முத்தரப்பு தொடரையும் வென்றுவிட்டது. சேவாக்குடன் சண்டை காம்பிருடன் மோதல் என்று செய்திகள் கசிந்து ஒரு சமயம் தோனியின் தலைமைக்கே கத்தி வைக்கப்பட்டது. சீனிவாசன் புண்ணியத்தால் தப்பிப் பிழைத்த தோனி தன்னுடைய அமைதியான கேப்டன் கூல் அணுகு முறையால் மீண்டும் வெற்றி வீரராக வலம் வருகிறார்.கோஹ்லியை கேப்டனாக்க வேண்டும் என்று கூவியவர்கள் எல்லோரும் இன்று அடக்கி வாசிக்கிறார்கள். தோனியின் விசயத்தில் அவருக்கு அமைந்த ஒட்டுமொத்த இந்திய அணியையும் சொல்ல வேண்டும்.இது மாதிரி ஒரு அணி எனக்கு தெரிந்து எந்த கேப்டனுக்கும் அமையவில்லை!  சேவாக்கிற்கு பதில் தவான்! டெண்டுல்கருக்கு பதில் ரோஹித்சர்மா! யுவராஜிற்கு மாற்று ரவீந்திரஜடேஜா, ஹர்பஜனுக்கு மாற்று அஷ்வின், வேகப்பந்தில் புவனேஷ், உமேஷ்யாதவ் என்று ஒரு நல்ல அணி கிடைத்துவிட்டது. மிடில் ஆர்டரில் கோஹ்லியும் ரெய்னாவும் கலக்க பினிஷராக தோனி  விளாசுகிறார். முத்தரப்பு தொடரின் கடைசி ஓவர் விறுவிறுப்பு  செமையாக இருந்தது. தொடர்ந்து கலக்க வாழ்த்துவோம்!

கொஞ்சம் உடல் நலம் பேணுவோமா?
    கறிவேப்பிலை கொழுந்தினை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு வயிற்றுப் பொருமல் ஆகியவை குணமாகும்.
  நெஞ்சுகரிப்பு குமட்டல் வாந்தி போன்ற தொந்தரவுகளுக்கு கறிவேப்பிலையுடன் நான்கு மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
புதினா இலையை காயவைத்து பொடி செய்து அத்துடன் சிறிதளவு உப்பும் சேர்த்து பல்துலக்கினால் பற்கள் உஜாலாவுக்கு மாறிவிடும்.
 கை கால்களில் மூட்டுவலி உள்ளவர்கள் வெங்காயத்தையும் கடுகையும் அரைத்து மூட்டுக்களில் பற்றுப் போட்டால் மூட்டுவீக்கம் மூட்டுவலி குறையும்.
  மாதுளம் பழம் மாதுளம்பழத்தோல்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடலில் வசிக்கும் நாடாப் பூச்சிகள் அழியும் வயிற்றுப் போக்கு குணமாகும்.
பேரிச்சம் பழம் நரம்பு மண்டலத்தை சரிவர இயங்க செய்யவும் ரத்த உற்பத்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது. நாள்தோறும் பேரிச்சம்பழம் ஒன்றிரண்டு உண்டு வந்தால் நல்லது.

 இப்படியும் நடக்குமா இன்று!
    
அது ஒரு வெயில் காலம்! இப்போது போல அப்போதும் மின்பற்றாக்குறை! மின்சாரம் இல்லை! அதனால் மின்விசிறி போடாமல் சட்டையும் அணியாமல் அந்த குள்ளமான எளிய மனிதர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒரு இளைஞர் பனியன் அணிந்திருந்த அந்த குள்ள மனிதரை அலுவலகத்தின் கடைநிலை ஊழியர் என்று நினைத்துவிட்டார்.
       அவரிடம், ஏனப்பா! ப்யூன்! ரயில்வே அமைச்சர் மிஸ்டர் சாஸ்திரி வரச்சொல்லியிருந்த சுருக்கெழுத்தாளர் வந்திருப்பதாக உள்ளே போய் சொல்லு! என்றார் வந்தவர்.
     அப்படியே ஆகட்டும் ஐயா!, என்று பணிவாக கூறிய அந்த குள்ள மனிதர் உள்ளே சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் சுருக்கெழுத்தாளரை அழைப்பதாக தகவல் வந்தது. உள்ளே நுழைந்த சுருக்கெழுத்தாளர் திகைத்துப் போனார். அங்கே அவர் யாரை ப்யுன் என்று அழைத்தாரோ அவர் மினிஸ்டர் நாற்காலியில் முகம் கழுவி சட்டை அணிந்து அமர்ந்து இருந்தார்.
    வந்தவர் மிரண்டுபோனார்!  சார்! மன்னித்துக் கொள்ளுங்கள்! ப்யுன் என்று நினைத்து உங்களிடம் தரக்குறைவாக நடந்துவிட்டேன்! ப்ளீஸ்! மன்னித்துவிடுங்கள்!  என்று அழாத குறையாக வேண்டினார்.
   அந்த எளிய மனிதர் லால்பகதூர் சாஸ்திரி! வந்தவரை ஆசுவாசப்படுத்தினார்! இதில் உங்கள் தவறேதும் இல்லை! நான் அப்போது வெறும் லால் பகதூர் சாஸ்திரிதான்! இப்போது நீங்கள் பார்ப்பதுதான் ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி! சற்று முன் நீங்கள் பார்த்தது சாதாரணக் குடிமகன் லால்பகதூர் சாஸ்திரியை! அதனால் நீங்கள் செய்தது சரிதான்! நான் நடந்து கொண்டதும் சரிதான்! பயப்படாதீர்கள்! என்று தட்டிக் கொடுத்தார் அமைச்சர் சாஸ்திரி!

    இது அந்த காலம்! இப்போ இப்படி நடக்குமா?          ஜோக் கார்னர்!
   
எதையும் நாம நிறுத்தி நிதானமா சொல்லனும்! படபடன்னு மூச்சிறைக்க பேசுனோம்னா பல பேருக்கு நாம என்ன சொன்னோம்னே தெரியாம போயிரும்! அதனாலதான் எகனை மொகனையா பேசறவங்க பேச்சு ரொம்ப காலத்துக்கு நிக்குது! சரி விசயத்துக்கு வருவோம்! ஒரு பிரின்ஸிபால் தன்னோட அவசரமான பேச்சால எப்படி மொக்கை வாங்கினாருன்னு பார்ப்போம்! அந்த பகுதியிலேயே சிறப்பான ஒரு பள்ளிக்கூடம் அது! அன்னிக்கு ப்ரேயர்ஸ் நடந்துகிட்டு இருக்கு! அப்ப ப்ரின்ஸ்பால் அறிவிப்பு ஒன்னு சொல்றார். மாணவர்களே! இன்னிக்கு டீச்சர்ஸ் எல்லோரும் ஓடிப் போயிட்டாங்க! நிறைய பேரு வரலை! அதனால வகுப்புல அமைதியா  இருக்கணும்!
    அவர் சொல்லி முடிக்கறப்பவே பசங்க “ஓ” ன்னு சிரிச்சாங்க!   பிரின்சிக்கு கோபம் தாங்கலை! ஏண்டா சிரிக்கறீங்க? சொல்லுங்க? என்றார்.
     டீச்சர்ஸ்லாம் யாரோட ஓடிப்போயிட்டாங்க? அத சொல்லலையே மேம்! என்றான் ஒரு குறும்புக்கார மாணவன்!
    அப்போதான் தன் தவறு உரைச்சது அந்த மேடத்துக்கு! ஓடிப்போகலைடா! ஓ.டி  போயிருக்காங்க! அதான் ஆபிஸ் டியுட்டிக்கு போயிருக்காங்க!  என்றார்.
    இது எப்படி இருக்கு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! 

Comments

  1. எல்லாவற்றையும் விட அந்தக் காலம் அருமை... பொற்காலம்...

    பல தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
  2. லால்பகதூர் அவர்களின் பெருந்தன்மை குறித்த
    தகவல் எனக்குப் புதியது.
    இன்றைய சூழலில் நினைத்துப் பார்க்க
    நிச்சயம் அதிசயமே
    சுவாரஸ்யமான பயனுள்ள தகவல்களுடன் கூடிய
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. லால் பகதூர் சாஸ்திரி குறித்த தகவல் எனக்குப் புதிது...

    ReplyDelete
  4. புதிய தகவல் பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  5. சாஸ்திரி மாதிரி மனிதர்கள் தெய்வம் மாதிரின்னு சொன்னால் தப்பே இல்லை...!

    என்னாது டீச்சரெல்லாம் ஓடிப்போயிட்டாயிங்களா ? [[வடிவேல் சொல்றாப்ல படியுங்க மொட்டு வளையைப் பார்த்து]]

    ReplyDelete
  6. ஹிஹிஹி...நல்ல துணுக்குகள்..

    ReplyDelete
  7. லால் சாஸ்திரி போல் யாரும் இப்போது இல்லை .. இப்பொது சொன்னால் அடிப்பர்- Online Learning Solutions

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2