நாலு காலு பட்ட மன்னா! பாப்பா மலர்!

 நாலு காலு பட்ட மன்னா! பாப்பா மலர்!


      வேளகாபுரம் என்ற அழகிய கிராமத்துல ஒருத்தர் தனது வளர்ப்புக் கிடாயை குளிப்பாட்ட கம்மாயிக்கு ஓட்டிக்கிட்டு போனாரு. அந்த கிடா நல்லா தீனி திண்ணு கொழுத்து கிடந்தது. தண்ணீய கண்டதும் அதுக்கு சந்தோசம் பிடிபடலை! கம்மாயில குதிச்சு கும்மாளம் போட ஆரம்பிச்சிடுச்சு!
      ஆடு இந்த குதியாட்டம் போடறதை கரையோரமா வளைக்குள்ளயிருந்த நண்டு மெல்ல வெளியே வந்து எட்டிப்பார்த்துச்சு!  ஆடு சந்தோசமா  நாலுகாலும் எம்பி எம்பி குதிச்சு விளையாடிச்சு! அப்படி விளையாடறப்ப நண்டு வளையை மிதிச்சு நாசம் பண்ணிடுச்சு! நல்ல வேளை நண்டு அதன் காலிலே மிதிபடாம தப்பிருச்சு!
     தன் வளையை நாசம் பண்ண ஆட்டின் மீது நண்டுக்கு கோபம்னா கோபம் அப்படி ஒரு கோபம் வந்துருச்சு! “ நாலு காலு பட்ட மன்னா! உனக்கு நாளைக்கு இந்நேரம் சாவு!” ன்னு கிடாயை பார்த்து எரிச்சலா கோபத்தோட சாபம் கொடுத்தது.
  அடடா! இதென்ன வம்பா போயிருச்சே! சந்தோசமா கொஞ்ச நேரம் ஆட்டம் போட்டதுக்கு நண்டு இப்படி சாபம் கொடுக்குதேன்னு கிடாய்க்கு ரொம்ப பயமா போயிருச்சு! இருந்தாலும் அதை வெளியே காட்டிக்காம கெத்தா நண்டை பார்த்து கேட்டுச்சு! “ மண்ணுக்குள்ளிருக்கும் மகராசா! உனக்கு யார் சொன்னாங்க?” அப்படின்னு கேட்டுச்சு.
     நண்டுக்கு பெருமை பிடிபடலை! நம்ம சாபம் பலிக்க போவுதுன்னு ஆடு பயந்துருச்சுன்னு சந்தோசமா சிரிச்சுகிட்டே பதில் சொல்லுச்சு.
    “குடல் இல்லாத அண்ணன் கூப்புட்டு சொன்னான்” அப்படின்னு பதில் சொல்லுச்சு!
   அந்த நேரம் “டும் டும் டும்” னு கொட்டு முழக்கம் கேட்டுச்சு! அன்னிக்கு அந்த ஊர் சாமிக்கு பொங்கல் திருவிழா.
    கிடாய்க்கு உதறல் எடுத்திருச்சு! நண்டு சொன்னதை ஞாபகப்படுத்தி பார்த்துச்சு! குடல் இல்லாத அண்ணண் னா யாரு?
   அதுக்கு புரிஞ்சு போச்சு பளீர்னு!
   கொட்டு சத்தம் அடிக்கும் டும் டும் தான் குடல் இல்லாத அண்ணன். மறுநாளு ஊர் கோயில்ல பொங்கல் இடற நாளு, அன்னிக்கு கொழுத்த கிடாவை வெட்டி பொங்க வைப்பாங்க! தன்னோட சாவைத்தான் இப்படி கொட்டடிச்சு சொல்றாங்க! ன்னு அதுக்கு புரிஞ்சதும் ஒவ்வொரு கொட்டு சத்தமும் அதன் காதில் பயங்கரமாய் எமன் வரான் எமன் வரான்!ன்னு ஒலிச்சுது!
   அதனோட சந்தோஷம் பூரா அடங்கி போயிருச்சு!
   என்னை மன்னிச்சுருங்க நண்டாரே! ன்னு சொல்லிட்டு மவுனமாக நடையை கட்டிருச்சு அந்த ஆடு!
  அதுக்கப்புறம் அந்த ஆடு திரும்பவே இல்லை!
நீதி:
நம்முடைய மகிழ்ச்சி அடுத்தவர்களை சங்கடப்படுத்தாமல் இருக்க வேண்டும்!
(செவிவழிக் கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அருமை அருமை
    'கருத்துடன் கூடிய கதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நம்முடைய மகிழ்ச்சி அடுத்தவர்களை சங்கடப்படுத்தாமல் இருக்க வேண்டும்!//உண்மைதான் எல்லோருக்குமே பொதுவான உண்மை

    ReplyDelete
  3. சிறுவர்களுக்கான நீதிக்கதை அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2