ராங் நம்பர்!

 #சிந்திக்காதசெயலும்கெடும்!

ராங் நம்பர்!

                          நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

இரவு மணி பத்தைக் கடந்துகொண்டிருந்தது. தாழ் போடாமல் இருந்த வாசல் கதவை மெல்ல பூனை போல திறந்து கொண்டு உள்ளே நுழைந்த பசுபதியை “பிலுபிலு”வென பிடித்துக் கொண்டாள் வளர்மதி.

“ஊரே கொரானான்னு ஒரே பீதியிலே கிடக்குது. எப்படி தொத்துது எப்படி பரவுதுன்னு சொல்லவே முடியலை! எல்லோரும் வீட்டுலே அடங்கிக் கிடக்கச் சொன்னா நி என்னடான்னு ராத்திரி பத்து மணி வரைக்கும் கட்சி, தேர்தலு, பொதுக்கூட்டம்னு சுத்திக் கிட்டு வரே..! ஊட்டுலே ரெண்டு புள்ளைங்க அதுவும் பொட்டை புள்ளைங்க இருக்குது! இன்னும் ரெண்டு வருசம் போனா குத்த வைச்சிடும். அப்புறம் சடங்கு சீர்னு ஏகப்பட்ட்து கிடக்கு! கொஞ்சம் கூட பொறுப்பில்லாம கட்சிக்காரன் பின்னாடி சுத்திக்கிட்டு திரியறியே நீயெல்லாம் ஒரு மனுசனாய்யா?”

  “சும்மா நிறுத்தும்மே! நான் சும்மா ஒண்ணும் கட்சிக்காரன் கூட சுத்தலை! ஒரு நாளைக்கு ஐநூறு ரூவாவும் குவாட்டரும் பிரியாணியும் தராங்க! உடம்பு நோவாத வேலை! அவங்க போடற கூட்டம் எல்லாத்துக்கும் கொடி பிடிச்சுட்டு போகனும் ஊர் ஊரா ஊட்டுங்களுக்கு போய் ஓட்டு கேக்கணும். பெட்ரோலுக்கும் தனியா பணம் கொடுத்திடறாங்க! இதோ பத்து நாள் போயிருக்கேன். நாளைக்கு சுளையா ஐயாயிரம் ரூபாவோட வரப்போறேன்!”

” உழைக்காத காசு ஒடம்புலே ஒட்டாது! ஒரு ரூபா சம்பாரிச்சாலும் உழைச்சு சம்பாரிக்கணும்! அதை புரிஞ்சுக்கோ!”

 ”நான் ஏன் உழைக்கலை! கட்சிக்காரன் கூடவே கொடியை பிடிச்சுட்டு கோஷம் போட்டுட்டு போறேன். ஓட்டு கேட்கறேன். வெயில்லேயும் மழையிலேயும் ஊர் ஊரா சுத்திப் பிரச்சாரம் பண்ணி உழைக்கிறேண்டி! அதுக்குத்தான் ஐநூறு ரூபா ஒரு நாளைக்கு கொடுக்கிறாங்க! சும்மா ஒண்ணும் தூக்கி கொடுத்திட மாட்டாங்க!”

எதுக்குங்கறேன்! எந்த கட்சி ஆட்சியை பிடிச்சாலும் நாம உழைச்சிதான் கஞ்சி குடிக்கணும்! அந்த கட்சிக்காரன் அவன் சம்பாதிக்கறதைத்தான் பார்க்கப் போறான்! ஏன் அவனுக்கு ஜால்ரா அடிச்சு பொழைக்கணும்! கவுரமா ஒரு கூலி வேலைக்கு போனா என்னா?

காத்தாலே இருந்து சாயந்திரம் வரைக்கும் ஒரு நிமிஷம் உக்கார முடியாம ஒரு வேலை வாங்குவானுங்க!  நம்ம காசுலே டீ குடிக்கணும்! நாமதான் பெட்ரோல் போட்டுகணும்! இது அப்படியா? உனக்கு புரியாதுடி இந்த வேலையோட அருமை!

”என்னத்தை பெரிய அருமையான வேலை! கூட்டம் சேரக்கூடாது! கும்பலா இருக்க கூடாதுன்னு அரசாங்கம் சொல்லிட்டே இப்படி தேர்தலையும்  மீட்டிங்க் அது இதுன்னு நட்த்த பர்மிஷனையும் கொடுத்துருது. உன்னை மாதிரி ஆளுங்க துட்டுக்கு ஆசைப்பட்டு இப்படி கொடி தூக்கி கோஷம் போட்டு கூட்டம் கூடி என்ன விபரீதம் எல்லாம் கொண்டு வரப் போறீங்களொ கடவுளே..!”

   ”ஒரு விபரீதமும் வராது! நாளைக்கு சுளையா ஐயாயிரம் வரும்! கம்முனு போய் தூங்கு!”

    உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுய்யா! என்று வளர்மதி முகத்தை நொடித்துக் கொண்டுப் போய் படுக்க  நாளைக்கு பணத்தோட வந்து உன் வாயை அடைக்கிறேன் பாரு! என்று பசுபதியும் கட்டிலில் விழுந்தான்.

அடுத்த நாள் வழக்கமாக வருவதற்கு ஒரு மணி நேரம் முன்னரே வந்து விட்டான் பசுபதி.  கையில் கத்தையாக ஐநூறு ரூபா நோட்டுகள்! அவன் நுழையும் முன்னரே சாராய நெடியும் பலமா வீசியது!

   “ ஏய் வளரு! இதோப் பாரு! நாலாயிரம் ரூபா!” சொகுசா சம்பாரிச்சுட்டு வந்துருக்கேன்! இன்னமோ ஏதோன்னு பீதி கிளப்பிட்டு இருந்தே,,!

“ஐயாயிரம் வரும்னு சொன்னியே! இப்போ நாலாயிரம்தானா?”

  “தோடா! முழுசா அஞ்சாயிரத்தையும் உங்கிட்ட கொடுத்துட்டு நான் என்ன பண்றது? ஒரு ஆயிரத்து சரக்கை ஊத்திக்கிட்டேன்! மிச்சம்  நாலாயிரம் கொண்டு வந்திருக்கேன்.”

”அதானே! கவர்மெண்டுக்கு  கப்பம் கட்டலேன்னா உனக்கு தூக்கமே பிடிக்காதே..!”

சொம்மா  கொறையே சொல்லிட்டு கிடக்காதேம்மே! போ! போயி இந்த காசை எடுத்து பத்துரமா வையி! நாளைக்கு ஊட்டுக்கு சாமான் வாங்கிக்க! மிச்சம் இருந்தா புள்ளைங்களுக்கு ரெண்டு சட்டை எடுத்து கொடு..!”

“ ஆஹா! புள்ளைங்க மேலே ரொம்ப பாசம் வழியுதே!” கேலியாக சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தாள் வளர்மதி.

மறுநாள் விடிந்தும் நெடுநேரமாக எழுந்திருக்காமல் இருக்கும் பசுபதியை உசுப்பினாள் வளர்மதி.  

   “யோவ்! எழுந்துருய்யா! மணி ஏழு ஆகிப்போச்சு! இன்னும் என்ன உறக்கம்?

“ உடம்பெல்லாம் வலிக்குதும்மா! கை கால் எல்லாம் இழுக்குது! லேசா தலை வலிக்குது!” “அச்” என்று தும்மினான்.

அவனது கன்னத்தில் கை வைத்த வளர்மதி அதிர்ந்தாள். நெருப்பாய் சுட்டது. “யோவ் ஜுரம் காயுது! தும்மிக்கிட்டு வேற இருக்கு! முதல்ல ஆஸ்பத்திரிக்கு கிளம்பு.”

அரசாங்க மருத்துவமனை.

    ஜுரம், இருமல் என்றதும் ”கொரானா டெஸ்ட் எடுத்துட்டு வாங்க! என்று அனுப்பி விட்டார்கள். இங்கேயே எடுக்க மாட்டீங்களா? ”என்றாள் வளர்மதி.

   ”எடுக்கலாம்! ஆனா இப்போ அதுக்கான கிட்ஸ் இல்லே! இங்கே எடுக்கணும்னா நாளைக்கு வாங்க! ஆனா அதுக்குள்ளே இன்னும் ஏதாவது ஆச்சுன்னா…!”

தனியார் மருத்துவமனையில் சில ஆயிரங்கள் கொடுத்து டெஸ்ட் எடுக்க  பாஸிட்டிவ் என்று வர அதிர்ந்து போனாள் வளர்மதி.

மூன்றே நாட்களில் நாலாயிரமும் கரைந்து போயிருந்தது. அரசாங்க மருத்துவமனையில் படுத்திருந்த பசுபதிக்கு  மூச்சுத்திணறல் அதிகமானது. 

“ஏம்மா! ஆக்ஸிஜன் கொடுக்கணும்! சிலிண்டர் இல்லே! வெளியே ஏற்பாடு பண்ணாத்தான் பேஷண்ட்டை ரீக்கவர் பண்ண முடியும்.

அலைந்து திரிந்து வேறு மருத்துவமனையில் சேர்த்து சேர்த்து வைத்த சிறு தொகையையும் இழந்து கணவனை காப்பாற்றியிருந்தாள் வளர்மதி.

பசுபதியின் போன் ஒலித்தது.

   என்னா பசுபதி! பத்து நாளா கட்சி ஆபிஸ் பக்கம் வரலை! எலக்ஷன் ரிசல்ட் வரப்போவுது! அமர்க்களம் பண்ணனும் தோரணம் கட்டணும் பேனர் வைக்கணும் சீக்கிரமா வந்து சேரு..!

    ராங் நம்பர்! என்று போனை வைத்தான் பசுபதி.

இப்பவாது புத்தி வந்ததே! என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் வளர்மதி.



Comments

  1. நல்ல கதை. தீநுண்மியின் தீவிரம் புரிந்து கொள்ளாத மனிதர்கள் தான் இங்கே அதிகம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2