வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?

 வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?


சங்கப்பலகையில் நண்பர் சுந்தரராசன் வார மாத இதழ்களில் படைப்புகள் எழுத சக எழுத்தாளர்கள் வழிகாட்டலாமே என்று கேட்டிருந்தார். அவருக்காகவும் இங்கு எழுதும் புதிய படைப்பாளர்களுக்காகவும் இந்தப் பதிவு. முதலில் இப்படி ஒரு பதிவு எழுத எனக்குத் தகுதி இருக்கிறதா என்று ஒரு சுய பரிசோதனையும் செய்து கொண்டேன். முடிவில் ஓரளவுக்கு அனுபவமும் தகுதியும் இருக்கிறது என்று முடிவுக்கு வந்து இந்த பதிவை எழுதுகின்றேன்.

முதலில் என்னைப் பற்றி ஓர் அறிமுகம். நான் நத்தம் எஸ்.சுரேஷ்பாபு. 1988ல் சிறுவர்களுக்கான கையெழுத்து பத்திரிக்கை முதலில் நட்த்தினேன். அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அப்புறம் தேன்சிட்டு என்ற இளைஞர்களுக்கான கையெழுத்து பத்திரிகையை என் கல்லூரிக் காலத்தில் நடத்தினேன். 

தளிர் என்ற வலைப்பூவில் 2011 முதல் படைப்புகள் எழுதி வருகின்றேன். என் கதைகள் துணுக்குகள், பாக்யா, குமுதம், தங்கமங்கை ,கோகுலம், கல்கி, ஆன்ந்தவிகடன்,  தமிழ் இந்து, மாயாபஜார், பொம்மி, பொதிகைச்சாரல் வாரமலரில் வெளிவந்திருக்கிறது. கடந்த ஆண்டு வாரமலர் டி.வி.ஆர்.சிறுகதைப் போட்டி (திருச்சிப்பதிப்பு) ஆறுதல் பரிசும். குமுதம் கொன்றை இலக்கியச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசும் பெற்றிருக்கிறேன். இத்தனை வருட எழுத்தனுபவத்தில் இந்த இரண்டு பரிசுதான் சொல்லிக் கொள்ளும்படி அமைந்ததற்கு காரணம் என் சோம்பேறித்தனம் என்று சொல்ல்லாம். பல போட்டிகளில் நான் கலந்து கொள்ளவே இல்லை.  என் அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன்.


பத்திரிகைகளில் உங்கள் படைப்பு வர என்ன செய்ய வேண்டும்.


முதலில் நீங்கள் எந்த வகையில் படைப்புகள் எழுதப் போகிறீர்கள் என்று தீர்மானிக்க வேண்டும். கதையா, கவிதையா, கட்டுரையா அல்லது நகைச்சுவை துணுக்குகளா?


எல்லாவற்றையும் எழுதுகிறேன் என்று முயற்சித்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். உங்கள் திறமைக்கு தகுந்தவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். சிறுகதை என்று தேர்வு செய்தால் அதிலேயே முயற்சி செய்ய வேண்டும்.


ஒரு நாளைக்கு குறைந்தது பத்து பக்கங்கள் ஏ 4 தாளில் எழுதிப் பழக வேண்டும். எழுத எழுதத்தான் எழுத்து வசப்படும். அதோடு நிறைய வாசிக்க வேண்டும். பழைய புதிய எழுத்தாளர்களின் சிறுகதைகள், நாவல்கள் என்று ஒரு நாளைக்கு குறைந்தது நாலைந்து சிறுகதைகளாவது வாசிக்க வேண்டும். இந்த வாசிப்பு பழக்கம் ஒரு சிறுகதையை வடிவமைக்கும் வித்தையை நமக்கு கற்றுக் கொடுத்துவிடும். சிறுகதையின் வடிவத்தை புரிந்து கொண்டு விட்டால் அழகாய் சிறுகதை எழுத வந்துவிடும். இதில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிரபல எழுத்தாளர்களின் சிறுகதை வடிவத்தைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் அவர்களின் பாணியை அல்ல. உங்களுக்கென ஒரு பாணியை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  

.

வளவளவென்று எழுதாமல் சுருக்கமாக சுவையாக எழுத வேண்டும். பத்திப்பிரித்து எழுத வேண்டும். நிறுத்தற்குறிகள், முக்கால் புள்ளி, அரைப்புள்ளி, கால்புள்ளி, முற்றுப்புள்ளி போன்றவை தகுந்த இடத்தில் இடவேண்டும். தேவையற்ற வர்ணணை தவிர்க்க வேண்டும். தேவையான வர்ண்ணைகள் சேர்க்க வேண்டும்.  சுத்த தமிழில் எழுதாமல் பேச்சு நடையில் எழுத வேண்டும். இதில் ஓரளவு வெற்றிபெற்ற பின் முகநூலில் அந்த கதைகளை பதிந்து  கருத்து கேட்கலாம்


முகநூலில் உங்கள் நண்பர்கள்தான் பலர் உங்கள் நட்பு வட்டத்தில் இருப்பர். எனவே பலரும் ஆஹா! ஒஹோ என்று புகழ்வர். உடனே நாம் பெரிய எழுத்தாளர் ஆகிவிட்டோம் பத்திரிகைகள் நம் வாசல் படியில் வந்து நின்று கதை கேட்கும் என்று எண்ணிவிட்டால்  போச்சு! நாம் தொலைந்து போய்விடுவோம். நம்மை விட பெரிய அப்பா டக்கர்கள் எல்லாம் பீல்டில் இருக்கிறார்கள். நாம் இப்போதுதான் நீந்த கற்றுக்கொண்டிருக்கும் சிறுவன் என்ற மனநிலையில் இருக்க வேண்டும். குறைகளை தயங்காமல் கூறுங்கள் என்று  கேட்டு நம் குறைகளை திருத்திக் கொள்ள வேண்டும். ஒரு சிலர் தாமாகவே முன் வந்து குறைகளை பட்டியல் இடுவர். அவர்கள் மீது கோபம் கொள்ளாமல் நம் நல்லதுக்கே சொல்கிறார்கள் என்று நினைத்து அவர்கள் கூறும் அறிவுரைகளை ஆலோசனைகளை செயல்படுத்தி நம் எழுத்தை மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.


இப்படி மெருகேற்றிய பின்னரே பத்திரிகைகளுக்கு அனுப்ப வேண்டும். அனுப்பும் போதே இது பிரசுரம் ஆகிவிடும் பாராட்டுகள் குவியும் என்றெல்லாம் நினைக்காமல் அனுப்பிவிட்டு காத்திருக்க வேண்டும். அப்போதுதான் நம் கதை நிராகரிக்கப்பட்டால் ஏமாற்றம் நம்மை சூழாது. ஒரு பத்திரிகை நம் கதையை நிராகரித்துவிட்டால் அது தரம் தாழ்ந்தது என்று அர்த்தமில்லை. அந்த பத்திரிகைக்கு அல்லது அதை தேர்வு செய்தவருக்கு அந்த கதை பிடிக்க வில்லை அவ்வளவுதான் என்று நினைத்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் தொடர்ந்து நம்மால் எழுத முடியும்.


பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் ஆரம்பகாலத்தில் எழுதியபோது அவரது நூற்றுக் கணக்கான சிறுகதைகள் குமுதம் இதழால் நிராகரிக்கப்பட்டனவாம். அவர் சோர்ந்து போயிருந்தால் இன்று நமக்கு ஒரு க்ரைம் எழுத்தாளர் கிடைத்திருக்க மாட்டார்.


நிராகரிக்கப் படுகையில் நமக்கு சோர்வு வரவே கூடாது. நாம் எங்கு தவறு செய்கிறோம் என்று கவனித்து அதை சரி செய்ய வேண்டும். அதற்குத்தான் புத்தக வாசிப்புத் தேவை.


ஒரு பத்திரிகைக்கு கதை அனுப்பும் முன் அந்த பத்திரிக்கையில் பத்து இதழ்களையாவது வாசித்து இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த பத்திரிகையின் பாணி நமக்கு புரியும். குமுதம், பாக்யா போன்ற இதழ்கள் கொஞ்சம் ”கிளுகிளுப்பை” வாசகர்களுக்கு ஊட்டும். ஜாலியாக கதை சொல்லும். விகடன் கொஞ்சம் தீவிர இலக்கியம் பேசும். கல்கி பாரம்பரியமான பத்திரிகை. அதன் கதைகள் பாரம்பரியம் பேசும். குங்குமம் பகுத்தறிவு பேசும். வாரமலர் லைட் சப்ஜெக்ட் ஆயிரம் வார்த்தைகளுக்குள் எழுத வேண்டும். ராணியில் பெண்கள் சம்பந்தமான சப்ஜெக்ட், மங்கையர்மலரும் அதே பாணிதான் . இப்படி ஒவ்வொரு பத்திரிகைகளும் ஒரு பாணியை பின்பற்றும். அதற்கேற்ப நம் கதையை அனுப்ப வேண்டும். 


ஒரு சரித்திர கதையை எழுதி குமுதத்திற்கோ பாக்யாவிற்கோ அனுப்பினால் பிரசுரம் ஆகாது. அதே போல் ஹெவி சப்ஜெக்ட் தீவிர இலக்கியம் வாரமலருக்கு செட் ஆகாது. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


அப்புறம் ஒன்று. இன்றைக்கு பல வார இதழ்கள் மின்னிதழ்களாக மாறிவிட்டது. சில நின்றே போய்விட்டது.அதனால் சன்மானத்தை பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம். குமுதம்,விகடன்,வாரமலர் போன்ற ஒரு சில பத்திரிகைகளே சன்மானம் அனுப்பும். பல அனுப்பாது. அதே போல படைப்பு அனுப்பி விட்டு அந்த இதழ்களை நாம் தொடர்ந்து வாங்கி வாசித்து வந்தால்தான் நம் படைப்பு வந்த விபரம் தெரியும். இல்லாவிட்டால் நமக்கு படைப்பு வந்த விபரமே தெரியாது போய்விடும். ஏனெனில் பத்திரிகைகள் இப்போது படைப்பு தேர்வான விஷயத்தை தெரிவிப்பது இல்லை. மேலும் படைப்பு வந்ததற்கான இலவசப் பிரதியையும் அனுப்புவது இல்லை.


 எனவே ஒன்றை கவனம் கொள்ளுங்கள்! கதை எழுதுவதற்கு மட்டுமல்ல! கதை வெளிவந்த செய்தியை அறிந்து கொள்ளவும் நாம் பத்திரிகைகள் வாங்க வேண்டும்.


அதே போல் வார இதழ்களில் சிறுகதைகள் இப்போது நிறைய பிரசுரம் ஆவதில்லை. குமுதம் இதழில் ஒரே சிறுகதைதான் பிரசுரம் ஆகிறது. அது பிரபல எழுத்தாளர்களுக்கான இடமாக இருக்கிறது. விகடனில் ஒரே சிறுகதை. அதில் பெரும்பாலும் சினிமா உதவி இயக்குனர்கள் அல்லது பிரபல இலக்கியவாதிகள் எழுதுகின்றனர். குங்குமம் இதழிலும் ஒரே சிறுகதைதான்.அதில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப் படுகின்றது.


பாக்யா இதழில் இரண்டு மூன்று சிறுகதைகள் வந்து கொண்டிருந்த்து. அது இப்போது வெளிவருவது இல்லை. காமதேனு மின்னிதழ் ஆனபின் வாசகர்களுக்கு வாய்ப்பில்லை. மீதம் இருப்பது. மங்கையர் மலர், கல்கி, வாரமலர்  போன்றவைதான்.


வாரமலரில் சென்னை வாரமலரில் ஒரு குறிப்பிட்ட சிலரின் படைப்புகளே ரொட்டேஷன் ஆகி வருகிறது. திருச்சி பதிப்பில் கொஞ்சம் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.


எனவே சிறுகதைகள் பத்திரிக்கையில் வர வேண்டுமானால் நீங்கள் நிறைய பிரயத்தனப் படவேண்டும். இப்போது எழுதும் எழுத்தாளர்களின் எழுத்துகளை விட உங்கள் எழுத்து வித்தியாசமானதாக இருக்க வேண்டும். அப்போது உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.


இப்போது சரித்திரம், நகைச்சுவை, சிறுவர் கதைகள் எழுத நிறைய எழுத்தாளர்கள் இல்லை. இந்த சப்ஜெக்டில் கவனம் செலுத்தி முயன்றால் நீங்கள் வெற்றிபெற வாய்ப்பு உண்டு.


குமுதம் இதழில் வாரம் நான்கு அல்லது ஐந்து ஒரு பக்க கதைகள் வரும். 100 வார்த்தைகளில் அந்தக் கதைகள் முடிய வேண்டும். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தால் அதில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.


450 வார்த்தைகளுக்குள் இந்து மாயாபஜார் பகுதிக்கு சிறுவர்கதைகள் எழுதி அனுப்பினால் பிரசுரம் ஆக வாய்ப்பு உண்டு.


சென்னை வாரமலர் என்றால் 1000 முதல் 1250 வார்த்தைகளுக்கு கதைகள் அனுப்ப வேண்டும்.


தினத்தந்தி தேவதை இணைப்புக்கு ஒரு பக்க கதைகள் 200 வார்த்தைகளில் அனுப்பினால் தேர்வு பெற்றால் ஆயிரம் ரூபாய் பரிசு உண்டு.


இப்படி நீங்கள் எழுதி அனுப்பி காத்திருந்தால் உங்கள் கதைகள் பிரசுரம் ஆகும் வாய்ப்புகள் உண்டு.


சென்னை வாரமலர் என்றால் ஒருவருடம் கூட காத்திருக்க நேரிடும். குமுதம் என்றால் ஒரு மாதம். இந்து மாயாபஜார் இரண்டுமாதங்கள் வரை உஙகள் படைப்பு வர காத்திருக்கலாம். அதுவரை படைப்பு பிரசுரம் ஆகவில்லை எனில் வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பிப் பார்க்கலாம். ஆனால் பொதுவாக ஒரு மூன்று மாதங்கள் வரை நம் படைப்பு வெளிவர காத்திருப்பது உகந்த செயல்.


அதே போல் ஒரே கதையை இருவேறு பத்திரிகைகளுக்கு அனுப்புவது கூடாது. ஒருவேளை இரண்டிலும் துரதிருஷ்ட வசமாக உங்கள் படைப்பு பிரசுரம் ஆகிவிட்டால் அப்புறம் உங்கள் பெயர் ரிப்பேர் ஆகிவிடும். அதே போல் காப்பி அடித்து அனுப்புவது. பழைய கதைகளை பட்டி டிங்கரிங் பண்ணி அனுப்புவது கூடாது. டிரெண்டிங்கான விஷயங்களில் கவனம் செலுத்தி அதற்கேற்றார்போல எழுதி அனுப்பினால் பிரசுரம் ஆகும்.


அதே போல் சமூக வலைதளங்களில் நீங்கள் உலாவினால் உங்கள் படைப்புகளை அதில் பதிவேற்றலாம். அந்த பத்திரிகையை பாராட்டலாம் உச்சி முகரலாம். மறந்து போய் ஒரு குறை குற்றம் கண்டுபிடித்து சொல்லிவிட்டால் அவ்வளவுதான் நீங்கள் அவுட். அதற்கப்புறம் உங்களை கட்டம் கட்டிவிடுவார்கள். முன்னேற முடியாது. எனவே அக்கம் பக்கம் பார்த்துப் பேசவும்.


நீங்கள் வளர ஆரம்பிக்கையில்  கூடவே சில குற்றுச்செடிகள் அழிந்து போக வாய்ப்பு உண்டு. அந்த செடிகள் உங்களை புல்லுறுவிகளாகப் பற்றிக் கொண்டு உங்களையே அழிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே அவைகளிடம் இருந்தும் உங்களை காத்துக் கொள்ள வேண்டும்.


இந்த சாமர்த்தியம், பொறுமை,  அயராத முயற்சி, ஊக்கம் உங்களிடம் இருந்தால் நீங்கள் பிரபல எழுத்தாளர் ஆகி விடலாம். கீழே சில பத்திரிகைகளின் இமெயில் முகவரி தந்துள்ளேன். 


இமெயிலில் அனுப்பும் போது உங்கள் படைப்புகளை தனி வேர்ட் பைலில் யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து இணைத்து அனுப்புங்கள். இந்த படைப்பை தங்கள் இதழில் வெளியிட பரிசீலனை செய்ய வேண்டுகிறேன் என்ற அடிக்குறிப்புடனும் வேறு இதழ்களில் பிரசுரம் ஆகவில்லை! என்ற உறுதி மொழியும் இணைத்து அனுப்புவது நல்லது. முக்கிய விஷய்ம். உங்கள் படைப்புகளை ஒரு காப்பி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! பத்திரிகைகளுக்கு அனுப்பிய பின் திரும்பி வராது. அதே போல் உங்கள் வங்கி கணக்கு விபரங்களையும் இமெயிலில் இணைத்து உங்கள் முழு முகவரியுடன் அனுப்புங்கள். சன்மானத்தை இப்போது எல்லா இதழ்களும் பேங்க் அக்கவுண்ட்டிற்கு டிரான்ஸ்பர் செய்து விடுகின்றன.


பத்திரிகைகளில் கதைகள்  எழுதி  வெற்றிபெற வாழ்த்துகள்.


கவிதை, ஜோக்ஸ் எழுத்தாளர்களுக்கு சில டிப்ஸ்கள் அடுத்த பதிவில் தருகின்றேன்.  நன்றி.


இமெயில் முகவரிகள்.


varamalar@dinamalar.in  -  சென்னை வாரமலர்

devathai@dt.co.in  -   தினத்தந்தி தேவதை இணைப்பு

mayabazaar@thehindutamil.co.in     தமிழ் இந்து மாயாபஜார்

edtl@kumudam.com  -    குமுதம்

editor@vikatan.com  -   ஆனந்த விகடன்.

dinamalar.vmr@gmail.com   திருச்சி வாரமலர்

 kalki@kalkiweekly.com     கல்கி

  thangamangaithamizh@gmail.com     தங்க மங்கை

shp@seyadgroup.com   பொதிகைச்சாரல்

pommitvr@gmail.com   பொம்மி சிறுவர் இதழ்

malligaieditor@gmail.com  மல்லிகை மகள்

mangayarmalar@kalkiweekly.com  மங்கையர் மலர்

kungumamshortstories@gmail.com குங்குமம்


வாழ்த்துகள் எழுத்தாளர்களே! எழுதிக் குவியுங்கள்! வெற்றி பெறுங்கள்! நன்றி!

Comments

 1. சிறப்பான வழிகாட்டல். பாராட்டுகள்.

  ReplyDelete
 2. பரிசு பெற்ற நிறைய சிறுகதைகள், படிக்கும் போது ஆறுதல் பரிசு பெறக்கூட தகுதி யில்லாத நிலை.


  ReplyDelete
 3. கல்கி ஆன்லைனுக்கும் நீங்கள் குறிப்பிட்டுள்ள kalki@kalkiweekly என்கிற மெயில் ஐடியிலேயே கதைகள் அனுப்பலாமா?

  ReplyDelete
 4. அருமையான தகவல் நன்றி 🙏🙏🙏🙏

  ReplyDelete
 5. எப்படி மிஸ் ஆனது இது. நல்ல தகவல்கள் சுரேஷ். மிக்க நன்றி.

  கீதா

  ReplyDelete
 6. சிரிப்பதற்கு சிந்தனைகள் சேமித்து வைத்திருந்தேன் தேங்காய் பத்தைகளும் சிரிக்குமோ அய்யம் வேண்டாம் அன்பரே அந்த அழகான மரம்கொத்தி தானே மரத்தை மயக்கத்தில் நிறுத்தி துளைகளை செய்து போடுகிறது. பறக்கத் தான் வேண்டும் பருந்துடன் ஓர் ஊர் குருவி உள்ளத்தின் ஓரத்தில் ஏனோ ஒரு ஒலி நிசப்தம் நிகழ்கிறதோ நான் அருவியின் அருகையில் கரைகையில். ( இது போன்ற கவிதை சிந்தனைகள் எனக்கு நிறைய வருகிறது அதை முறைப்படுத்தி எழுத பயிற்சி இல்லை அய்யன்மீர் எனக்கு உங்கள் இதழில் எழுத வாய்ப்பை வழங்வீரா ?
  ”செங்குருவி” சித்திரராமன்

  ReplyDelete
 7. மிகவும் சிறப்பு

  ReplyDelete
 8. மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 9. நல்ல பதிவு

  ReplyDelete
 10. நான் நிறைய சிறுகதைகள் எழுதி வைத்திருக்கிறேன் . அதை அனுப்ப தகுந்த மெயில் ஐடி யை தயவு செய்து சொல்லுங்கள். வடுவூர் . வே . பவானி . April 12 , 2024 .at 10.18 am

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2