பால்குடித்த பிள்ளையார்!

 மன்றில் சிறுகதைப்போட்டி

தேவரீர் வருக!

பால் குடித்த பிள்ளையார்!



சுற்றிலும் வயல் வெளிகள் நிறைந்த ஒற்றையடிப்பாதை! அதன் முடிவில் ஒரு சிறு கோயில் அமைந்திருந்தது. அதன் கோபுரத்தில் செடிகள் முளைத்திருக்க ஆலயச்சுற்று சுவர்கள் சுண்ணாம்பு பெயர்ந்து போய் மங்கியிருந்தது.

மூலவர் சன்னதி இஷ்ட சித்திவிநாயகர். பரிவாரத்தில் முருகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை நாகர் என சில தெய்வங்கள். நகரை விட்டு ஒதுங்கியிருந்த கிராமம் அது. பழமையான கோயில் என்றாலும் கவனிப்பாரில்லை. இரண்டு கால பூஜை. பரமேஸ்வர குருக்கள் கிரமமாய் பூஜை செய்து வருகின்றார். பெரிய விழாக்கள் கிடையாது. உற்சவங்கள் கிடையாது. நித்யபடி பூஜையோடு சரி. . அன்றும் அப்படித்தான் ஒற்றை நபராய் விநாயகருக்கு பூஜை செய்துவிட்டு நடையை அடைத்துவிட்டுக் கிளம்பினார் பரமேஸ்வர குருக்கள். பொழுது இருட்டிவிட்டது

உடல்நிலை சரியில்லாத மனைவியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்சென்று வைத்தியம்பார்த்துவிட்டுவர லேட்டாகிவிட்டது.நைவைத்தியமாக ஓர் அரைலிட்டர் பாலைக் காய்ச்சி எடுத்து வந்திருந்தார். ஏதோ நியாபகம். பால் தூக்கை கோயில் உள்ளே வைத்து நடையை அடைத்துவிட்டார். வெளியே வந்ததும் தான் நினைவுக்கு வந்தது.

”அடடா! நைவேத்தியத்திற்கு எடுத்து வந்த பால் தூக்கை உள்ளேயே வச்சு நடையை அடைச்சிட்டேனே! திரும்பவும் போய் எடுக்க நடையை திறக்கணுமே அது கூடாதே சாத்தின நடையை திரும்பவும் நாளைக்குத்தானே திறக்கணும்.!” யோசித்துக் கொண்டிருக்கையில் அப்போது அங்கே வாட்ச்மேன் மருதமுத்து வந்தான்.

”என்ன ஐயரே! ஏன் தயங்கி நிற்கறீங்க? கிளம்ப வேண்டியதுதானே?”
”முத்து நைவேத்தியமா பால் கொண்டு வந்தேன். மறந்துபோய் உள்ளே வச்சு பூட்டிட்டேன்!”
”தொறந்து எடுத்துக்க வேண்டியதானே சாமி!”
”ஐயோ! சாத்தின கதவை திறக்க கூடாது!”

”அட போ சாமி! சாஸ்திரம் சம்பிரதாயம் பேசிக்கிட்டு! இங்கே யாரு பார்க்க போறாங்க! யார் கேக்கப் போறாங்க! தொறந்து எடுத்துட்டுப் போவியா?”
”வேண்டாம் முத்து! அது பாவம்! போகட்டும் நாளைக்கே எடுத்துக்கறேன்!” பரமேஸ்வரன் கிளம்பி விட்டார்.

மறுநாள் காலை! வழக்கம்போல ஆறு மணிக்கு நடை திறந்த பரமேஸ்வர குருக்களுக்கு ஆச்சர்யம் . அவர் நேற்று மறந்து வைத்துப் போன பால் தூக்கு காலியாக இருந்த்து. ஒரு சொட்டுப் பால் கூட இல்லை. அரைலிட்டர் பால் இருந்திருக்கும். மொத்தமும் காலியாக இருந்தது
.
விஷயம் மருதமுத்து மூலம் ஊரெல்லாம் பரவியது. பிள்ளையார் பால்குடிக்கிறார் என்று பரவ யாரும் எட்டிப் பார்க்காத கோயிலில் கூட்டம் நிரம்பியது. தினமும் அரைலிட்டர் பால் சாயரட்சை பூஜையில் வைத்து நடை அடைக்கப்படும். மறுநாள் பால் பாத்திரம் காலியாக இருக்கும். ஊரே அதிசயப்பட்டது. லோக்கல் சேனல்கள் பத்திரிகைகளில் செய்தி பரவ வெளியூரில் இருந்தும் கூட்டம் கூடியது.
யாருமே கண்டுகொள்ளாத கோயிலில் இப்போது கூட்டம் குழுமியது. திருப்பணி செய்ய வேண்டும்.குடமுழுக்குச் செய்ய வேண்டும் என்று ஊரே திரண்டு பேசியது.
அன்றும் வழக்கம் போல பரமேஸ்வர குருக்கள் பால் வைத்துவிட்டு நடை அடைத்துச் செல்ல எங்கிருந்தோ இருந்து உள்ளே நுழைந்த பூனை ஒன்று சத்தமில்லாமல் பால் முழுவதையும் குடித்து முடித்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளையார் சிரித்துக் கொண்டார்.

”இதுதான் கலியுகம்.! எப்படியோ என்னால் உன் பசி தீர்கிறது! உன்னால் எனக்கு விடிவு பிறக்கிறது! யாரும் எட்டிப்பார்க்காத இந்த கோயில் இன்று கூட்டம் நிரம்பி வழிகிறது. குருக்களின் வயிறும் நிறைகிறது! நல்லது நடந்தா சரி!” என்று குறுநகை புரிய தீப ஒளியில் பிள்ளையாரின் முகம் பிரகாசித்தது.

(முகநூலில் சங்கப் பலகை என்றொரு குழுவில் வாராவாரம் ஒரு தலைப்பு தந்து எழுதச் சொல்வார்கள். சென்ற வாரம் கொடுத்த தலைப்பில் எழுதியது.)

Comments

  1. அருமையா எழுதியிருக்கீங்க சுரேஷ். வாசிக்கும் போதே நினைத்துக் கொண்டேன், ஏதாவது தான் காரணம் ஆனால் எப்படியோ கோயிலும் முக்கியத்துவம் பெறுகிறது. குருக்களுக்கும் நல்லது நடக்கிறது. அதுவும் முக்கியம் அல்லவா. இதுவும் பிள்ளையாரின் விளையாடலாக இருக்கலாம்!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் சுரேஷ்!

      கீதா

      Delete
  2. நல்லது நடந்தால் சரி தான்!

    நல்லதொரு சிறுகதை. வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2