பழி!

பழி!

 “  வா! வா! கணேஷ்? இந்த கிராமத்தானை எல்லாம் உனக்கு நினைவு இருக்குதா?”  திடீரென்று கிராமத்திற்கு வந்த தனது நண்பனை வரவேற்றான் சுபாஷ்.

  இருவரும் ஒரே ஊரில் ஒரே பள்ளியில் படித்தவர்கள். கல்லூரி வரையும் அது தொடர்ந்தது. ஆனால் அதன் பின்னர் கணேஷ் நகருக்கு வேலை விஷயமாக சென்றவன் அங்கேயே குடியேறிவிட்டான். அதுதான் அவனுக்கு வசதியும் கூட.

  சுபாஷிற்கு சிறுவயதில் இருந்தே விவசாயத்தின் மேல் ஆர்வம் அதிகம். எனவே அக்ரி படித்து விவசாயத்தில் கவனம் செலுத்த துவங்கினான். அவனது பெற்றோர் வாங்கி வைத்திருந்த நிலம் இருந்தது. இவனாகவும் சில நிலங்களை வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பித்தான். அது ஒன்றும் அவனை கைவிடவில்லை.

   கணேஷ் வருடம் ஒருமுறை கிராமத்து திருவிழாவிற்கு வருபவன். அதுவும் கூட அவன் மும்பைக்கு மாற்றாலாகிப் போனதும் நின்று போனது. எப்போதாவது போனில் பேசிக் கொள்வதோடு சரி. இன்று திடுதிப்பென்று கணேஷ் வரவும் ஆச்சர்யம் ப்ளஸ் ஆனந்தமாக வரவேற்றான் சுபாஷ்.

     ”சின்ன வயசில இருந்து ஒண்ணா பழகினோம்! ஒரே ஊரு ஒரே மண்ணு மறந்துட முடியுமாடா? வேலைப்பளு அதிகமானதால முன்ன மாதிரி போன்ல பேச முடியலை! சென்னைன்னா  வருடம் ஒரு முறை வந்துபோக சவுகர்யமா இருந்துச்சு! மும்பையிலிருந்து எல்லோரையும் கூட்டிட்டு வந்து போகனும் லீவ் ரெண்டு நாளுக்கு மேல கிடையாது அதனாலதான் ரெண்டு வருஷமா வர முடியாம போச்சுடா! “

   “சரிசரி! போய் குளிச்சுட்டு வா!  சாப்பிட்டுகிட்டே  பேசலாம்!”
சுபாஷின் வீடு வயலோரமாய் இயற்கை அழகோடு மரங்கள் சூழ்ந்து அமைந்திருக்க அதை ரசித்தபடி பின்புறம் குளியலறையில் நுழைந்த கணேஷ், “ஆ” பாம்பு! என்று அலற ஓடிவந்தான் சுபாஷ்.

 குளியலறை தொட்டி ஓரம் ஒரு நாகப்பாம்பு படமெடுத்தபடி படுத்துக் கொண்டு இருந்தது. “ புஸ்” என்று அது விரோதிகளை பார்த்து சீற்றம் எடுக்க, சுபாஷ் ஒரு தடி கொண்டு வா! இதை அடிச்சு போட்டுடலாம்! என்றான் கணேஷ்.

  “ சேச்சே! வேண்டாம்டா! அது நல்ல பாம்பு! இன்னிக்கு வெள்ளிக் கிழமை! அதை கொல்ல வேண்டாம்!  கொஞ்ச நேரம் நாம அந்த பக்கம் போனா வெளியே போயிடும். இங்க பக்கத்துல வயலுங்க இருக்கறதாலே தவளைங்க நிறைய இருக்கும். அதை பிடிக்க வந்திருக்கும். வா அந்த பக்கம் போயிருவோம் அது ஓடிரும்!” சுபாஷ் மறுத்தான்.

   “ நல்ல பாம்புன்றதாலேதான் சொல்றேன்! அதுக்கு விஷம் அதிகம்! குளியல் அறையிலே இருக்கு! விட்டு வைச்சா தப்பு! போய் தடி எடுத்து வா!”

“ இது வயலை ஒட்டின வீடு! இங்கே இதெல்லாம் சகஜம்! பாம்பைக் கண்டா நமக்கு பயம்! நம்மைக் கண்டா அதுக்கு பயம்! விட்டுடு!” அது ஓடிப்போயிரும்!” சுபாஷ் சொல்லிக் கொண்டிருக்க

    “டேய்! சொன்னா நீ கேட்க மாட்டே! இரு நானே பாத்துக்கறேன்!”  என்று சுற்றும் முற்றும் தேடிய கணேஷ் ஒரு மூங்கில் கழியை எடுத்து வந்து பாம்பு மீது அடித்தான். அடி பலமாய் படவில்லை! அவனுக்கும் பயம் தானே! சரியாக விழாமல் போகவே பாம்பு படமெடுத்து சீறிய படி எதிரே வர விலகிய கணேஷ் இன்னொரு அடி போடும் முன் நழுவி ஓடிப் போய்விட்டது.


  “கணேஷ்! சொன்னா கேட்டியா? இப்ப பாரு! அடிச்சு விட்டுட்டே! பழிவாங்க அது தேடி வரும்!  தேவையா இது? இனி நீ ஜாக்கிரதையா இருக்கணும் ஊர் போய் சேருகிற வரைக்கும்!”

  “ ஹாஹாஹா! இன்னுமாடா இந்த கட்டுக்கதையெல்லாம் நம்பிக்கிட்டு இருக்கே! இது இருபத்தோரம் நூற்றாண்டு! பாம்பு என்னை போட்டோ எடுத்து வைச்சுக்கிட்டு கஜினி சூர்யா மாதிரி தேடி வந்து கொல்லுமா? அடப் போடா!” கணேஷ் எகத்தாளித்தான்.

   ”எந்த நூற்றாண்டா இருந்தாலும் நம்பிக்கைகள் பொய்க்காதுடா! அடிபட்ட பாம்பு பழிவாங்கும்கிறது நம்பிக்கை!”

   ”அப்ப நான் மும்பை போனா கூட தேடிவந்து கொல்லுமா? நீயா படம் மாதிரி பொம்பளை வேஷம் எல்லாம் போடுமா? உனக்கு ராமநாராயணன் படம் பார்த்து பார்த்து பக்தி அதிகமாயிருச்சு!”

  “ விளையாடாதே! எச்சரிக்கையா இருன்னு சொல்றேன்! அப்புறம் உன் இஷ்டம்!”
     ”என்கிட்ட மாட்டி சாகாம போனது அதனோட அதிர்ஷ்டம், திரும்ப வந்தா அதுக்குத்தான் துரதிருஷ்டம்!”

    “உனக்கு எப்பவும் அசட்டு துணிச்சல் அதிகம்தான்! ஆனா பாம்பு விஷயத்திலே கொஞ்சம் எச்சரிக்கையா இரு!”
    “அடப்போடா!” அவன் சிரித்தான்.

அவனுக்காக வேண்டிக்கொண்டு புற்றுக்கு பால் ஊற்றினேன்! நாகர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து நண்பனை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டேன்!  மூன்று நாள் கடந்துவிட்டது.  கணேஷ் என்னைத் தேடி வந்தான். ”கிளம்பறேண்டா!”

 “என்னடா ஒரு வாரம் கூட ஆகலை! அதுக்குள்ளே!..”
“ ஓலை வந்துருச்சுடா! போயே ஆகனும்! பார்ப்போம்! அடுத்த வருஷம் சந்திப்போம்”  வாடகைப் பேசி வந்த காரில் ஏறி கிளம்பி அரை மணி நேரம் ஆகியிருக்கும் செல்போன் ஒலித்தது.

   “ஹலோ! சுபாஷா!”
  “உங்க ப்ரெண்டுக்கு ஆக்ஸிடெண்ட் உடனே கிளம்பி வாங்க மெயின் ரோடுக்கு!”

  பதறிப் போய் வண்டியில் விரைய சுபாஷ் சென்ற கார் மீது லாரி ஒன்று மோதி நின்று கொண்டிருந்தது. போலீஸ் தலைகள் போக்குவரத்தை சீர்படுத்த நான் அந்த லாரியைப் பார்த்தேன்.

  “ நாகராஜா டிரான்ஸ்போர்ட்” என்றிருந்தது.

டிஸ்கி} இன்று மதியம் மூன்று மணிக்கு வீட்டின் சமையலறையில் நல்ல பாம்பு ஒன்று புகுந்து கிரைண்டரில் பதுங்கியது. அரை மணி நேரப் போரட்டத்திற்கு பிறகு விரட்ட முடியாமல் அடித்து போடும் படி ஆகிவிட்டது. சிறிய பாம்புகளை அடித்து இருந்தாலும் நல்ல பாம்பு சுமார் மூன்று அடி நீளம் உள்ளதை அடித்தது இதுவே முதல் முறை.  விஷப்பிராணி வீட்டுக்குள் வந்தால் விட்டு வைக்க முடியுமா?  அதனால் போட்டு தள்ளிவிட்டேன். இறந்து போன பாம்பு இந்த கதை எழுத கரு தந்து விட்டு போய்விட்டது. எப்படியெல்லாம் கரு பிறக்கிறது பாருங்கள்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. பொருத்தமாக கொண்டு வந்து நம்பிக்கையை வளர்த்து விட்டீர்கள் நண்பரே...

    ReplyDelete
  2. நானும்தான் நேத்து ஒரு பாம்பை அடிச்சேன். எனக்கு பதிவு தேத்தனும்ன்னு தோணலியே!

    ReplyDelete
  3. கதையென சுவாரஷ்யமாக படித்து வந்தால் கடைசியில் திக் திக் திக்க வைத்து விட்டீர்களே! கிரைண்டருக்கும் பாம்பு எப்படி போச்சி என இன்னும் ஒரு பதிவு போடுங்க!

    எத்தனை விஞ்ஞானம் வளர்ந்தாலும் செவ்வாய்க்கே குடி போனாலும் நல்ல பாம்பை அடித்தால் மொத்தமாக அடித்து விடணும். அரைகுறையாக விட்டால் தேடி வந்து கொல்லும் எனும் விடயம் மட்டும் நம்ம மனசிலிருந்து போகவே போகாது.

    ReplyDelete
  4. அவசர உதவிக்கு 101 ல் வனத்துறையையோ ,தீயணைப்பு துறையையோ இனி வரும் காலங்களில் நாடவும்.

    ReplyDelete
  5. சிறு வயதில் மனதில் பதிந்த விஷயங்கள் அவ்வளவு சீக்கிரம் மாற்ற இயலாது. கதை நன்றாக இருந்தது... டிஸ்கி...யோசிக்க வைக்கிறது.

    ReplyDelete
  6. நல்ல கதை.

    அடடா... வீட்டிற்குள் பாம்பு வந்துவிட்டதா...... நெய்வேலியில் இருந்தவரை இப்படி பாம்புகள் வீட்டிற்குள்/தோட்டத்தில் நிறைய வரும். அது பற்றி சில பதிவுகளும் எனது பக்கத்தில் உண்டு! :)

    ReplyDelete
  7. நண்பனுக்கு லாரி ரூபத்தில் வந்த பாம்பு ,உங்களுக்கு கதை ரூபத்தில் வந்தது,உங்களுக்கு நல்ல நேரம்தான்:)

    ReplyDelete
  8. செத்தது பாம்பு... உயிர் பெற்றது கரு... அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நல்ல கற்பனைதான்.

    ReplyDelete
  10. ம்ம்ம்ம், பாம்பாருக்கு நாங்க சுப்புக்குட்டினு பேரு வைச்சிருக்கோம். வித விதமான பாம்புகளுடன் அனுபவங்கள் உண்டு. ராஜஸ்தான், குஜராத் பாம்புகளில் இருந்து சென்னை, அம்பத்தூர் பாம்புகள் வரை! எல்லாத்தையும் நம்ம ரங்க்ஸ் செல்லம் கொஞ்சியே போடா, போடானு கம்பை வைச்சுக் கொண்டு தரையில் தட்டித் தட்டியே வெளியேற்றுவார். நான் கூட இன்னொரு பக்கம் பாதுகாப்பாக, (அந்தப் பக்கம் ஓடி வராமல் இருக்கக் கையில் இன்னொரு கம்புடன்) நிற்பேன். ஒரே ஒரு முறை ராஜஸ்தானில் ரங்க்ஸுக்கு உடம்பு சரியில்லாதப்போ சமையலறைக்குச் சப்பாத்தி சாப்பிட வந்த பாம்பாரை ராணுவ வீரர் ஒருவர் அடிக்க, அதைப்புதைத்துவிட்டு அந்த இடத்தில் தினமும் பால் ஊற்றிக் கோயில் கட்டிக் கும்பிடாத கதை தான்! இதிலே கொம்பேறி மூக்கனார்னு ஒருத்தர் உண்டு! அவர் கொத்தினா அந்த ஆளின் பிணம் எரிக்கப்படும்வரை தான் உயிரை விடாதாம். இதை எல்லாம் திகில் கதைகளாக என் மாமியார் சொல்லுவார். பச்சைப்பாம்பாரோ வாழை மரத்தின் இலை போல சுருட்டிக் கொண்டிருக்கும். இலைனு நினைச்சு வெட்டப்போனால் தலையைத் தூக்கும் பாருங்க! விடு ஓட்டம்! :)

    ReplyDelete
  11. சுருட்டிக் கொண்டு படுத்திருந்த நல்லவரைத் தோட்டத்திற்குத் தண்ணீர் விடும் ஹோஸ்னு நினைச்சுத் தூக்கப் போனதும் உண்டு. கட்டுவிரியனாரை அயர்ன் பாக்ஸின் வயர்னு நினைச்சுத் தொட்டுவிட்டு அலறியதும் உண்டு. ஆனால் அதான் பயந்துடுச்சு, பாவம்! :)

    ReplyDelete
  12. பாம்புனு படிச்சதும் ஓடோடி வந்த என்னை ஏமாற்றவில்லை நீங்கள்! :)

    ReplyDelete
  13. ஆஹா! பாம்புகளுடன் ஆன அனுபவம் நிறைய உண்டு எங்கள் கிராமத்தில் இருந்த வரை. நிறைய பாம்புகள் எல்லா விதமான பாம்புகளுடனும். வீரியன் வகைகள் எட்டடி, கண்ணாடிவிரியன் வரை...பச்சை, கரு நாகம், நாகம், சாரை, தண்ணீர் பாம்பு, மண்ணுள்ளிப் பாம்பு, செவிப்பாம்பு என்ற சின்ன இனம் வரை...எங்களுடன் இரவில் போர்வையில் சுருண்டு படுத்த பாம்பு எட்டடிவிரியன். நல்ல விஷப்பாம்பு அது. இரவு கை போட ஏதோ வழ வழ என்று இருட்டில் தோன்ற லைட் போட்டால் அவ்வளவுதான்...ஆனால் இதுவரை எந்தப் பாம்பையும் அடித்தது கிடையாது. அவர்களுடன் பேசுவதுண்டு. நானும் மகனும். மகன் பாம்புகளைக் கையிலேயே எடுப்பான். அருகில் கெஹ்ல்லவும் பயப்படவும் மாட்டான். பாண்டிச்சேரியில் இருக்கும் போதும் நிறைய.

    கதை நன்றாக இருக்கிறது சுரேஷ். அட உங்கள் வீட்டிலும் பாம்பா...குழந்தைகள் இருப்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும். துளசிச் செடிகள் இலைகளை வீட்டில் போட்டு வைக்கலாம். பினார் சிறியா நங்கை கிடைத்தால் அதை வீட்டைச் சுற்றி வளர்த்துவரலாம். அவை எளிதில் வளர்ந்துவிடும். இந்த இலைகளைக் கசக்கி பாம்புகளின் அருகில் போட்டால் அவை மயங்கிவிடும். விரியன் வகைகள் கடித்தால் பிழைப்பதற்கு இந்த சிறியா நங்கை இலைகளின் சாறு கொடுத்தால் விஷம் ஏறி இருந்தால் நாக்கில் கசப்பு தெரியாது. விஷம் இறங்குவது , நாக்கில் கசப்புத் தெரிய ஆரம்பித்தான் தெரியும். இது இப்போதும் மலைவாழ் மக்கள் செய்துவரும் வைத்தியம். பாம்புக்கடிக்கு உட்பட்டவர்களை இப்படித்தான் பிழைக்க வைக்கின்றார்கள்.

    கீதா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2