கோமேதகக் கோட்டை! பாப்பா மலர்!
கோமேதகக் கோட்டை!
பாப்பா மலர்!
(சற்றே பெரிய கதை!
பொறுமையா படியுங்க)
நெடுங்காலத்துக்கு
முன்னாடி வில்லவபுரம் என்ற நாட்டை விஜயேந்திரன் என்ற ராஜா ஆண்டுவந்தாரு. அவருக்கு மகன்கள்
இல்லை. ஓர் அழகிய மகள் மட்டும் உண்டு. அந்த மகளை மகன்களுக்கு ஈடா வளர்க்க முடிவு செஞ்சாரு
ராஜா. அதனாலே ஒரு சிறந்த ஆசிரியரை நியமிச்சு இளவரசிக்கு கல்வியையும் போர்க்கலைகளையும்
போதிக்க ஏற்பாடு செய்ய நினைச்சாரு.
அந்த நாட்டின் எல்லையோரம் இருந்த காட்டுக்குள்ளே
துரோணா என்ற ஓர் ஆசிரியர் ஒரு குருகுலம் அமைச்சு பாடங்களை கத்து தந்துகிட்டு இருந்தாரு.
அவரைக் கூப்பிட்டு அரண்மனைக்கு வந்து இளவரசிக்கு பாடங்களை சொல்லித் தருமாரு ராஜா கேட்டாரு.
ஆனா குரு துரோணா, அரண்மனைக்கு வந்து கத்து தர முடியாது. வேண்டுமானால் இளவரசி வந்து
குருகுலத்தில் தங்கி படிக்கட்டும்னு சொல்லிட்டாரு.
ராஜாவுக்கு என்ன செய்யறதுன்னு புரியலை. அப்ப இளவரசி,
தான் குருகுலத்தில் சென்று பயில்கிறேன்னு சொல்லி குருகுலத்துக்கு கிளம்பிட்டாங்க. ஆனாலும்
ராஜாவுக்கு ஒரு பயம். இளவரசி பிறந்தப்போ அவளோட ஜாதகத்தை கணிச்ச சோதிடர்கள் அவளோட பதினைந்தாவது
வயதிலே ஒரு கண்டம் இருக்குன்னு சொல்லியிருந்தாங்க. அதனாலே குருவோட அனுப்ப அவருக்கு
விருப்பம் இல்லை. இளவரசிக்கு அங்கே ஏதாவது ஆபத்து வந்துட்டா என்ன பண்றதுன்னு அவர் கவலைப்
பட்டாரு.இதை துரோணா கிட்ட சொல்லவும், அவரும்
மன்னா! கவலைப்படாதீங்க! இளவரசிக்கு ஒரு ஆபத்தும் வராமே நான் பார்த்துக்கிறேன்! கல்வி
வீட்டில் இருந்து படிப்பதைவிட குருகுலத்தில் பயில்வதே சிறப்பு! அப்படின்னு சொல்லி சமாதானம்
பண்ணிட்டு இளவரசியை குருகுலத்துக்கு கூட்டிக்கிட்டு போயிட்டாரு.
அப்போ இளவரசிக்கு பன்னிரண்டு வயசு இருக்கும்! ஐந்துவருடம்
படிக்கணும். இளவரசியும் குருகுலத்தில் குருவிடம் பணிவாக நடந்துகொண்டு கல்வியும் போர்ப்
பயிற்சிகளையும் கத்துகிட்டு வந்தாங்க. இளவரசிக்கு பதினைந்தாவது வயசு தொடங்கிடுச்சு.
எல்லோரும் கவனமா இளவரசியை பார்த்துக்கிட்டாங்க.
ஒருநாள் காட்டுல மத்த மாணவர்களோட சேர்ந்து விறகு
சேகரிக்க போனாங்க. நடுக்காட்டில் அவர்கள் விறகுகளையும் சில மூலிகைச்செடிகளையும் பறித்துக்
கொண்டிருக்கும் போது அங்கே ஒரு ராட்சதன் வந்தான்.
அவனுக்கு மூன்று கண்கள். கைகள் எல்லாம் யானையோட
கால்கள் போல அவ்வளோ பெரிசா இருந்துச்சு. அவன் ஒரு அடி எடுத்து வைக்கும்போது அப்படியே
பூமியே அதிருச்சு. இப்ப ஜே.சி.பி இயந்திரம் ஒண்ணு வந்து அப்படியே மரங்களை சாய்க்கிறா
மாதிரி அவன் தன்னோட கைகளாலே இடைப்பட்ட மரங்களை எல்லாம் பிடுங்கி போட்டுக்கிட்டே வரான்.
ராட்சதன் தூர வரப்பவே மாணவர்கள் எல்லாம் பயந்து
நடுங்கி அங்கே இருந்த ஒரு மரப்புதர் மறைவிலே ஒளிஞ்சுகிட்டாங்க. ஆனாலும் அவங்களை ராட்சசன்
பார்த்துட்டான். அப்படியே ஒரே எட்டில் நிறுங்கி ஒரு பையனை பிடிச்சு முழுங்க பார்த்தான்.
அப்போ ராஜகுமாரி, நிறுத்து!ன்னு குரல் கொடுத்தாள்.
ராட்சசன் திரும்பி பார்த்தான். ”பொடிப் பொண்ணே! எனக்கு பசிக்கிறது! இவர்களை சாப்பிடப்
போகிறேன்! ஏன் உன்னையும் தான்!” என்றான்.
”இவர்கள் எல்லாம் என் நண்பர்கள்! அவர்களைவிட்டுவிடு!”ன்னு
சொன்னா ராஜகுமாரி.
”அப்படின்னா என் பசிக்கு என்ன கொடுப்பே?”
”நான் இந்த நாட்டின் ராஜகுமாரி, என்னை பிடிச்சுக்கோ!
இவங்களை விட்டுவிடு! என்னை விடுவிக்க என்னோட அப்பாக்கிட்ட நீ என்ன வேண்டுமோ கேட்டு
வாங்கிக்க” என்று சொன்னாள் ராஜகுமாரி.
“ அப்படியா? உன் அப்பாரு இந்த நாட்டு ராஜாவா?” நல்லதாப்
போச்சு! உன்னை பிடிச்சுக்கிட்டு போறேன்! இவங்களை
விட்டுடறேன்! டேய் பசங்களா! இவளை நான் கோமேதகக் கோட்டையிலே சிறைவைக்க போறேன்! இவ திரும்பவும்
அரண்மணைக்கு வரணும்னா ராஜா எனக்கு தினம் தினம்
வயிறாரா சாப்பாடு போடனும். என்னோட பசி அடங்கின
அப்புறம்தான் இவளை விடுவேன்! போங்க! உங்க ராஜாகிட்டே சொல்லுங்க! அப்படின்னு சொல்லிட்டு
அந்த ராட்சசன் இளவரசியைத் தூக்கிக்கிட்டு பறந்துட்டான்.
மாணவர்கள் எல்லாம் பயந்து ஓடிப்போய் குரு துரோணாகிட்ட
நடந்ததைச் சொன்னாங்க.
துரோணாவுக்கு ரொம்பவும் சங்கடமா போயிருச்சு!
ராஜாவோட பொண்ணை பத்திரமா பாத்துக்கறோமுன்னு சொல்லி கூட்டியாந்தோம்! இப்ப இப்படி ஆயிருச்சே!
இது ராஜாவுக்குத் தெரிஞ்சா கோபப்படுவாரேன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தாரு.
கடல் நடுவுலே இருந்த தீவுலே கோமேதகக் கோட்டை
இருந்தது. கோட்டையைச் சுத்தி கடல். கடலுக்குள்ளே பெரிய பெரிய சுறா மீன்கள் ஆளையே முழுங்கிற
அளவுக்கு இருந்துச்சு. அந்த கோட்டையிலே இளவரசியை அடைச்சு வைச்சுட்டு ராட்சசன் வெளியே வந்தான். நேரே வில்லவபுரம் நோக்கி ஆகாயத்திலேயே
பறந்தான். வில்லவபுரம் வந்த ராட்சசன் அங்கே இருந்த ஒரு பெரிய மலைமேல நின்னுக்கிட்டு
பெரிய பாறைகளை உருட்டிவிட ஆரம்பிச்சான்.
மக்கள் பயந்து போய் ராஜாகிட்ட முறையிட ராஜா அந்த
ராட்சசனை விரட்ட பெரிய பெரிய படை வீரர்களை அனுப்பி வைச்சாரு. அவங்க எல்லோரையும் தூக்கி
ஒரே வாயிலே முழுங்கிட்டான் ராட்சசன். தன்னோட வீரர்கள் அநியாயமா சாகிறதை பொறுக்கமாட்டாத
ராஜா
விஜயேந்திரன் தானே ராட்சசனை எதிர்த்து சண்டை போட கிளம்பினாரு.
வில்லவ புரத்தோட ராஜாவா! வா! உன்னைத்தான் எதிர்பாத்துக்கிட்டு
இருக்கேன்! உன்னோட பொண்ணை என்னோட கோட்டையிலே அடைச்சு வச்சிருக்கேன். எனக்கு பசி அடங்கலை!
நீ என் வயிறு அடங்கிறாமாதிரி சாப்பாடு போடு! அப்போதான் உன் பொண்ணை விடுதலை செய்வேன்..அப்படின்னு
கொக்கரிச்சான் ராட்சசன்.
அப்போதுதான் ராஜாவுக்கு விபரீதம் உறைச்சது. பதினைஞ்சாவது
வயசு கண்டம் இவன் கிட்ட மாட்டிக்கிறதா? குரு துரோணா இவளை பாதுகாக்க தவறிட்டாரேன்னு
கோபமா குருகுலத்துக்கு வந்தான்.
என் பொண்ணை ராட்சசன் தூக்கிட்டு போயிட்டானாமே!
நீங்க அவளை பார்த்துக்கிட்ட லட்சணம் இதுதானா? உங்களை கைது பண்ணி சிறையிலே அடைக்க போறேன்.
என் பொண்ணு உயிரோட திரும்பி வந்தா உங்களுக்கு விடுதலை! இல்லேன்னா உங்க உயிரும் பறிக்கப்படும்னு கத்தினாரு.
அப்ப அந்த குரு குலத்தில் மரத்தில் இருந்த ஒரு
பச்சைக்கிளி பேச ஆரம்பிச்சது. மன்னா! ராட்சசன் உங்கள் மகளை கடத்திட்டு போகனுங்கிறது
விதி! அதுக்கு குரு என்ன பாவம் செஞ்சாரு? அப்படின்னு கிளி கேட்டுது.
கிளி பேசுவதைக் கேட்டு ராஜாவுக்கு இன்னும் ஆத்திரம்
அதிகம் ஆயிருச்சு! அப்ப குரு சிறைக்கு போகணுங்கிறதும் விதி! அதுக்கு நான் ஒண்ணும் செய்ய
முடியாது. நீ இப்படி அதிகமா பேசினா உன்னை கொன்னு போட்டுருவேன்! அதுவும் விதிதான்னு
எரிஞ்சு விழுந்தாரு.
“ மன்னா! உன் மகளை ராட்சசன் கடத்திட்டு போனதாலே
ஆத்திரத்துல அறிவை இழந்து இப்படி பேசறே? குருவை சிறையிலே அடைப்பதாலே உன் மகளை விடுவிக்க
முடியுமா? யோசிச்சு பாரு! அப்படின்னுச்சு கிளி.
மன்னன் யோசித்தான். கிளி சொன்னது, ராஜா! அந்த கோமேதகக்
கோட்டை இருக்கிற இடம் எனக்குத் தெரியும். குருவோட பிள்ளை வித்யாதரன் நல்ல அறிவாளி!
அதோட வீரனும் கூட! அவனுக்கு ஒரு கப்பலை கொடு
நாங்க ரெண்டு பேரும் போய் இளவரசியை மீட்டு வரோம். அது வரைக்கும் அந்த ராட்சசன் கேக்கறதை
எல்லாம் செய்து கொடு! அப்படின்னு சொல்லுச்சு
கிளி.
அப்படியா? ஆனால் வித்யாதரன் எங்கே இருக்கான்? என்று
கேட்டார் ராஜா. அப்போது கிளி அப்படியே சுருண்டு விழ ஆசிரமத்தின் உள்ளே இருந்து வித்யாதரன்
வெளிப்பட்டான்.
வணக்கம் மஹாராஜா! நான் தான் வித்யாதரன். இவ்வளவு
நேரம் கிளியின் உருவில் இருந்தவனும் நான் தான். கூடுவிட்டு கூடுபாயும் வித்தை அது.
என்றான். அவன் மேல் ராஜாவிற்கு ஓர் நம்பிக்கை ஏற்பட்டது. ஓர் கப்பலை ஏற்பாடு செய்து
பல நூறு வீரர்களை வித்யா தரனுடன் அனுப்பினார்.
கப்பல் பயணம் மிக
கடுமையானதாகவே இருந்தது. சிலவாரங்கள் கடந்து கோமேதகக் கோட்டையை அடைந்தது கப்பல். கோட்டையை
நெருங்க கடலில் நீந்திதான் செல்ல வேண்டும். அல்லது ஆகாய மார்கமாக செல்ல வேண்டும். கடலில்
பெரிய சுறாக்கள் இருந்தமையால் வித்யாதரன் ஆகாயமார்கம் செல்ல முடிவெடுத்தான். உடனே கூடுபாயும்
வித்தையின் உதவியால் கிளியாக மாறி பறந்தான். கோட்டையின் உப்பரிகையை அடைந்தான். சாளரம்
வழியாக எட்டிப்பார்த்தான் வித்யாதரன். அங்கே இளவரசி ஓர் அறையில் அடைக்கப்பட்டு
கிடந்தாள். “ இளவரசி! இளவரசி! குரல் கொடுத்துச்சு
கிளி.
“ இளவரசிக்கு ஆச்சர்யமாக இருந்தது இந்த இடத்துக்கு
எப்படி ஒரு கிளி வந்துச்சு! மெல்ல நெருங்கி
பேச்சு கொடுத்தாள். கிளியாக இருந்த வித்யாதரன் சொன்னான் இளவரசி நான் வித்யாதரன் குருவின்
மகன். கிளியாக மாறி வந்து இருக்கேன். நிறைய ராட்சசர்கள் காவல் இருக்கு. கடல்லே சுறாவும்
இருக்கே! எப்படி உங்களை மீட்டுக்கொண்டு போவது ஏதாவது உபாயம் இருக்கா?
இளவரசி சொன்னாள். வித்யாதரரே! இந்த கடல்லே இருக்கிற
சுறாக்கள் எல்லாம் ராட்சசர்கள். இவர்கள் ராத்திரியிலே மட்டும் கடல்லே சுறா வடிவிலே
இருப்பாங்க! பகல் பொழுதில் மாளிகை காவலுக்கு வந்துருவாங்க! இவங்களுக்கு ஒரே பயம் நெருப்பு.
தீயைப் பார்த்தால் பலத்தை இழந்து விடுகிறார்கள். இதை இங்கே சிறைபட்ட சில நாளில் தெரிந்து
கொண்டேன். அந்த பெரிய ராட்சசன் வருகின்ற நேரம் நீங்கள் சென்று விடுங்கள். பகல் பொழுதில்
அவனுக்கு வலிமை குறைவு. அப்போது அவனோடு போரிடுங்கள் வென்றுவிடலாம் னு சொன்னாங்க ராஜகுமாரி.
பறவை வடிவில் அந்த கோட்டையை சுற்றிப் பார்த்த
வித்யாதரன் மீண்டும் கப்பலுக்குத் திரும்பினான். இராப்பொழுதில் அந்த கோமேதகக் கோட்டை
நிலவொளியில் பிரகாசித்துக் கொண்டு இருந்தது. கோட்டைக் காவலுக்கு இருந்த ராட்சதர்கள்
சுறாவடிவம் பெற்று கடலுக்குள் குதிப்பதை கப்பலில் இருந்து தொலைநோக்கி மூலம் பார்க்க
முடிந்தது. வித்யாதரன் இரவு முழுவதும் யோசித்தான். எப்படி ராட்சதனை அழிப்பது என்று
முடிவில் ராட்சதனுக்கு நெருப்புத்தான் பலவீனம் என்பதால் அதைக் கொண்டே அழிக்க முடிவு
செய்தான். மறுநாள் காலை பொழுது புலரும் வேளையில்
ராட்சதர்கள் சுறாவடிவில் இருந்து ராட்சதர்களாக மாறி கோட்டைக்குள் நுழையும் போது
வித்யாதரனின் கப்பல் கோட்டையை சற்று நெருங்கி நின்றது. அதன் முகப்பில் இருந்த பீரங்கி
போன்ற கருவியில் நெருப்பு குண்டு தக தகத்துக் கொண்டு இருந்தது.
வித்யாதரன் ராட்சதனை கூவி அழைத்தான். ஏய், ராட்சதா! நீ நாடுவந்து மக்களை துன்புறுத்த வேண்டாம். உன்
வயிறு நிறைய மன்னர் என் மூலம் உணவு அனுப்பி உள்ளார். பெற்றுக்கொள்! இளவரசியை அனுப்பிவிடு!
அப்படின்னு அறைகூவினான்.
யாருடா இவன்? நம்ம இடத்துக்கே வந்து சத்தம் போடறான்?
அவனை ஒரு கை பார்ப்போம்னு கோட்டையை விட்டு வெளியே வந்த ராட்சதனுக்கு கப்பலும் அதில் கனன்று கொண்டிருந்த நெருப்பும் வயிற்றை
கலக்கியது. அதே சமயம் நூற்றுக் கணக்கான தீ அம்புகள் கோட்டையை காத்துக்கொண்டிருந்த ராட்சதர்கள்
மேல் விழ அவர்கள் அலறி ஓடினார்கள்.
அடேய்! உன்னை அப்படியே விழுங்கி விடுகிறேன் பார்!
என்று கோட்டையில் இருந்து கடலில் குதித்த ராட்சதன் வாயை திறந்து கொண்டு வர கப்பலில்
இருந்து பழுக்க காய்ச்சிய இரும்பு குண்டுகள் நெருப்பை கனன்று கொண்டு கண்ணிமைக்கும்
நேரத்தில் அவனது வாயில் புகுந்தன. ஒன்றன் பின் ஒன்றாய் புகுந்த குண்டுகளால் அவன் அப்படியே
சிதைந்து கடலுக்குள் விழ கடல் அலைகள் பெரிதாக எழுந்து கோட்டையின் சுவரைத் தாக்கின.
கப்பலும் நிலைகொள்ளாது ஆடியது. அதே சமயம் ராட்சதன் இறந்தான். அவனது மாய சக்திகள் மறைந்தது.
படகுகளை அனுப்பி இளவரசியை கப்பலுக்கு அழைத்துவந்த
வித்யாதரன் வில்லவபுரம் நோக்கி புறப்பட்டான். அங்கே அவனுக்கு ஒரு பெரிய வெற்றித் திருவிழாவே
கொண்டாடினார்கள் மக்கள். இளவரசியை ராஜாவிடம் ஒப்படைத்த வித்யாதரன் விடைபெற்றான். அப்புறம்
இளவரசி பல கலைகளை கற்று அந்த நாட்டின் ராணியாக பல்லாண்டு காலம் ஆட்சி புரிந்து வந்தாள்.
வழக்கம் பொல அருமையான ஃபேன்டசி கதை. ரசித்தோம்..தாமதமான பொங்கல் நல் வாழ்த்துகள்.
ReplyDeleteபெரிய கதையாக இருந்தாலும் வழக்கம்போல் தங்கள் பாணியில் அருமையாக இருந்தது. எங்களை குழந்தையாக்கியது.
ReplyDeleteபடித்தேன்
ReplyDeleteரசித்தேன் நண்பரே
நன்றி
அருமை தோழர் தொடர்க
ReplyDeleteநிகில் குறித்து சில செய்திகள்
அருமையான கதை!
ReplyDelete