சுஜாதாவின் கொலையுதிர்காலம்! அமானுஷ்யமா அறிவியலா?

சுஜாதாவின் கொலையுதிர்காலம்! அமானுஷ்யமா அறிவியலா?


சென்னைப் பெருமழை செய்த ஒரே நல்ல காரியம் பலகாலமாய் வாங்கி வைத்து வாசிக்காது இருந்த பல நூல்களை என்னை வாசிக்க வைத்தது. அடை மழை! மின்சாரம் இல்லை. அகல் விளக்கொளி அல்லது சிம்னி விளக்கொளியில் நூல்களை வாசிப்பது என்பது ஓர் சுகானுபவம்.

  சின்ன வயதில் ஆசானபூதூரில் படிக்கையில் பாடங்களை சிம்னி விளக்கொளியில் படித்து இருக்கிறேன். அதே போல மின்சாரம் இல்லா சமயங்களில் நத்தத்திலும் பாடங்களோ இல்லை கதைப் புத்தகங்களோ படித்து இருக்கிறேன். மழைக்காலத்தில் மழையின் பேரிரைச்சல் தவளைகளின் சத்தம் அந்தகாரமான இருட்டில் ஓர் அறையில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் சிறு விளக்கொளியில் இரவு விழித்து இருந்து கதை படிப்பது அதுவும் சுஜாதாவின் இந்த அமானுஷ்யம் கலந்த நாவலை படிப்பது செம திரில்!

      இந்த நாவல் 90களில் தொலைக்காட்சி தொடராகவும் வந்து இருக்கிறது. பகல்பொழுதில் ஒளிபரப்பானது. பல எபிசோட்கள் மின்சாரம் தடைபட்டு பார்க்க முடியாமல் போனது. இறுதிப்பகுதியும் அப்படித்தான் பார்க்க முடியவில்லை. அது மிகவும் குறையாகவே இருந்தது. சென்ற வருடம் புத்தகக் கண்காட்சியில்  இந்த நாவலை வாங்கத்தூண்டியது அந்த தொலைக்காட்சித் தொடரே!

       லீனா என்ற இளம்பெண் ஏகப்பட்டு சொத்துக்கு சொந்தக்காரி. அவரது கார்டியன் குமாரவியாசன், காதலன் தீபக், இந்த சொத்தை அபகரிக்க வியாசன் முயல்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் தீபக் கணேஷ் வசந்தை லீனாவின் பண்ணை வீட்டிற்கு அனுப்புகிறார்.

   லீனாவிற்கு சேர வேண்டிய சொத்துக்கள் பற்றி உயில் போன்றவற்றை சரிபார்க்க வரும் கணேஷிற்கு லீனா ஓர் கொலை செய்துவிட்டாள். அவள் புத்தி சரியில்லை. அவள் மீது புத்திரவதி என்ற ஆவி இறங்கி கொலைசெய்கிறது  அதுவும் குறிப்பிட்ட தினத்தில் கார்த்திகைமாதம் திரிதியை திதியில் அந்த கொலை நடந்தது. புத்திரவதியின் சாபம் இந்த சொத்தை தாக்கும். என்று குமாரவியாசன் பீதி கிளப்புகிறார்.

  அங்கேயே தங்கும் கணேஷ் வசந்திற்கு அமானுஷ்யமான அனுபவங்கள் கிடைக்கின்றன. இடையில் இன்னும் சில கொலைகளும் விழுகின்றன. குமாரவியாசனும் கூட இறந்து போகிறார். வசந்த் ஒருதலையாக லீனாவை விரும்ப அவளோ தீபக்கோடு திருமணம் செய்து  ஊட்டிக்கு ஹனீமூன் சென்று விடுகிறாள்.

   அமானுஷ்யம் கிடையாது விஞ்ஞானப்பூர்வமாக சில சித்து வேலைகள் செய்து பேய் கொலை செய்வதாக நம்ப வைக்கப்படுகிறது. அப்படி செய்து லீனாவை கொலைகாரி அல்லது பைத்தியக் காரி என்று நம்பச் செய்து சொத்தை அபகரிக்க பார்க்கிறார்கள் என்று கணேஷ் நம்புகிறார். ஆனால் அவருக்கு சில சந்தேகங்கள்.

   அதை தீர்த்துக் கொள்ள புரபசர் ராமபத்திரனை நாடுகிறார். அவர் விஞ்ஞானத்தில் இதற்கெல்லாம் சாத்தியமே இல்லை. குறிப்பாக ஹோலோகிராம் துல்லியமாக செய்ய வாய்ப்பில்லை என்று சாதிக்கிறார். ஆனால் வசந்த் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் விஞ்ஞானத்தில் அது சாத்தியம் என்று நிரூபிக்கிறான்.
    குமார வியாசனின் சகோதரர்தான் ராமபத்திரன் என்று தெரியவர அவர் ஊட்டிக்கு சென்றிருப்பதும் தெரிய வர லீனாவை காப்பாற்ற விரைகின்றனர் கணேஷிம் வசந்தும்.

    ஆனால் ராமபத்திரன் முந்திக் கொள்கிறார். ஊட்டியில் லீனாவை சந்திக்கிறார். அவருடன் போட்டிங் செல்கிறாள் லீனா. ராமபத்திரனிடம் இருந்து லீனா தப்பித்தாளா? 

    விஞ்ஞானம்தான் என்று சில நிரூபணங்கள் மூலம் நியாயப்படுத்தினாலும் அமானுஷ்யத்தையும் ஆசிரியர் மறுக்கவில்லை! அதன் காரணமாகவே முடிவும்  விஞ்ஞானத்தை ஆதரிப்பதாக அமையவில்லை! அதே சமயம் அமானுஷ்யத்தையும் ஏற்கவில்லை! வாசகர்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறார்.

 1980களில் குமுதத்தில் இந்த தொடர் வெளிவந்து இருக்கிறது. பல அறிவியல் சொற்கள் விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் அப்போது வாசகர்களுக்கு புரியாது. தெரியாது. அதையும் மீறி இந்த தொடர் வெற்றிபெற்றது சுஜாதாவின் எழுத்துலக ஆளுமைக்கு ஓர் சான்று.

   ஆனால் எத்தகைய ஒரு நல்ல நாவலையும் எழுத்துப்பிழைகள் படிப்பவனின் சுவாரஸ்யத்தை குறைத்துவிடும் என்பதற்கு இந்த நாவலே எனக்கு சான்று. பாரதிபதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவலில் மூ என்ற எழுத்து வரவேண்டிய இடத்தில் வரவில்லை. நூ என்று வரவேண்டிய இடமெல்லாம் மூ  புகுந்து அட்டகாசம் செய்கிறது. நூறு தப்படி என்று கணேஷ் சொல்வது மூறு தப்படி என்று வருகிறது.

  முதல் பக்கத்தில் தொடரும் எழுத்துப்பிழை இறுதிவரை தொடர்ந்து அலுப்படைய வைக்கிறது. பதிப்பகத்தார் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

மிகவும் சுவாரஸ்யமான சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் நாவலான இதை பாரதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூலின் விலை ரூ 120.00.


வெள்ள பாதிப்பில் பதிப்பகங்கள் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் வாசகர்கள் பதிப்பாளர்களை ஆதரிக்க வேண்டியது மிகவும்  அவசியமானது. நல்ல நூல்களை பதிப்பகம் தொடர்ந்து வெளியிட நூல்களை விலைகொடுத்து வாங்கி ஆதரிக்க வேண்டியது அவசியமாகும்.


 தளிர் வாசகர்களே! உங்களால் இயன்ற அளவில் மாதம்தோறும் நூல்களுக்கென ஒரு தொகையினை சேமித்து புத்தகக் கண்காட்சியின் போது நூல்களை விலைகொடுத்து வாங்கி பதிப்பாளர்களை ஆதரியுங்கள்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. நல்லதொரு விமர்சன அலசல் நண்பரே நூலை வாங்க வேண்டுமென்ற ஆவல் மேலிடுகிறது

  ReplyDelete
 2. சுரேஷ் அருமையான நாவலைக் குறித்த விமர்சனம் நன்று. நாங்களும் இங்கு முடிவைச்சொல்லவில்லை. தொடராக வந்த போதே வாசித்தது. சுஜாதா எழுத்துலக ஆளுமைதான் சந்தேகமே இல்லை. இப்போதும் கூட அவரது எழுத்துகளை வாசிக்கும் போது ச்சே இந்த மனுஷர் இன்னும் வாந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் வரத்தான் செய்கின்றது.

  பதிப்பகத்தாருக்கு ஆதரவளிக்கச் சொன்னது அருமை சுரேஷ். ஆம்! மிகச் சரியே.

  கீதா: எங்கள் பகுதியில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தேங்கவில்லை சுரேஷ். என்ன கரன்ட் இல்லை. மொபைல் இல்லை. தண்ணீர் கீழே இருந்து அடித்து எடுத்துக் கொண்டு வந்தோம். இதெல்லாம் ஒன்றுமே இல்லையே. மக்கள் கஷ்டப்பட்டதைப் பார்த்தால்...

  ReplyDelete
 3. வணக்கம்
  விமர்சனத்தை படித்த போது படிக்க வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது... அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. உங்களது வேண்டுகோளை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடைபிடித்துவருகிறேன். நூல்களை வாங்குகிறேன், படிக்கிறேன். நேரமிருக்கும்போது பகிர்கிறேன். நன்றி.

  ReplyDelete
 5. கொலையுதிர்காலம் படித்திருக்கிறேன் நண்பரே
  நன்றி

  ReplyDelete
 6. எப்படியோ சுஜாதாவின் கொலையுதிர்காலம் விமர்சனம் படிக்க கிடைத்திருக்குதே!விமர்சனம் கதையை படிக்கும் ஆவலை தருகின்றது.நன்று,நன்றி!

  ReplyDelete
 7. கொலையுதிர்காலம் படித்திருக்கிறேன். தங்கள் அலசல் அருமை, தொடருங்கள்.

  ReplyDelete
 8. நான் இந்தப் புத்தகத்தை பைண்ட் செய்தும் வைத்திருக்கிறேன்!

  ReplyDelete
 9. படிச்சிருக்கேன், அதோட தொலைக்காட்சித் தொடரும் பார்த்திருக்கேன்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2