தந்திரக்கார மனைவி! பாப்பா மலர்.
தந்திரக்கார மனைவி! பாப்பா மலர்.
ஓர் ஊரில் ஒரு விவசாயி வசித்து வந்தான். வயலில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு வந்த அவன் உண்டு முடித்து நிலவொளியில் மனைவியிடம் பேசிக் கொண்டு இருந்தான். அப்போது அவர்களுக்கும் ஓர் சர்ச்சை எழுந்தது.அவர்களில் திறமை மிக்கவர் கணவனா மனைவியா என்பது தான் அது.
அந்த சர்ச்சை முற்றி பெண்கள்தான் தந்திரத்தில் வல்லவர்கள், அவர்கள் நினைத்தால் ஆயிரம் தந்திரங்கள் செய்து ஆண்களை வெற்றிக் கொள்ள முடியும் என்றாள் மனைவி.அத்துடன் இல்லாமல் ஆண்கள் எளிதாக ஏமாந்துவிடுவார்கள். உங்கள் நல்ல காலம் இன்னும் உங்களை நான் தந்திரம் ஏதும் செய்து இதுவரை ஏமாற்றவில்லை என்றாள் அவனது மனைவி.
இதைக்கேட்ட கணவன் மிகுந்த கோபம் கொண்டான். " உங்களுக்கு சமைப்பதை தவிர வேறு என்ன தெரியும்? உங்கள் தந்திரங்களை கண்டு ஏமாற நான் ஒன்றும் முட்டாள் இல்லை. நீ வேண்டுமானால் ஆயிரம் தந்திரங்கள் செய்து என்னை ஏமாற்றிக் காட்டு பார்க்கலாம். அப்போது நான் ஒத்துக்கொள்வேன் பெண்கள் புத்திசாலிகள்" என்று சவால் விடுத்தான் கணவன்.
அன்றைய பொழுது விடியும் நேரத்தில் கணவன் எழுந்திருக்கும் முன் எழுந்த அவனது மனைவி கணவன் அறியாமலேயே கடைக்குச் சென்று ஒரு பெரிய மீனை வாங்கி கணவன் அன்று உழப்போகும் வயலில் புதைத்து வைத்து விட்டு வீட்டிற்கு திரும்பி ஒன்றும் அறியாதவள் போல படுத்துக் கொண்டாள்.
பொழுது விடிந்ததும் விழித்த கணவன் காலைக் கடன்களை முடித்து வயலுக்கு சென்றான். ஏர் பூட்டி உழுதான். அப்போது அவனது மனைவி புதைத்து வைத்த மீன் கலப்பையில் சிக்கி வெளியே வந்தது. நிலத்தில் பெரிய மீன் கிடைத்தது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆகா! எவ்வளவு பெரிய மீன்! இதை இன்று சுவையாக ஆக்கி உண்டு மகிழலாம் என்று அவன் மனம் மகிழ்ச்சியில் திளைத்ததே தவிர நிலத்தில் மீன் எப்படி கிடைக்கும் என்று புத்தி செயல்படவில்லை. அந்த மீனை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.
மனைவியை அழைத்து " நான் நிலத்தில் உழும்போது பெரிய மீன் கிடைத்தது. இதை சமைத்து வை! மதியம் உண்ணலாம்" என்று சொல்லிவிட்டு மீண்டும் வயலுக்குச் சென்று விட்டான். மதிய நேரம் வந்தது. "ஆகா! இன்று மீன்குழம்பு மனைவி சமைத்திருப்பாள்! ஒரு வெட்டு வெட்டலாம்" என்று ஆவலோடு வந்தான் உழவன்.
முகம் கால் கழுவி சாப்பிட உட்கார்ந்தான். உழவனின் மனைவி வழக்கம் போல பழைய சோறும் ஊறுகாயும் வைத்த போது உழவன் கடுப்பானான். "ஏய்! நான் கொண்டுவந்த மீனை சமைக்க வில்லையா? "என்று கத்தினான்.
" மீனா? ஏது? எப்போது கொண்டுவந்தீர்கள்?" என்று அப்பாவியாய் கேட்டாள் மனைவி.
"காலையில் நிலத்தை உழுதபோது பெரிய மீன் கிடைத்ததே! அதை சமைக்கச்சொல்லி உன்னிடம் கொடுத்தேனே? அதை சமைக்காமல் ஏமாற்றுகிறாயா? "என்றான் உழவன்.
" நீங்கள் மீன் எதையும் கொண்டுவரவில்லை! திடீரென்று மீன் குழம்பு கேட்டால் நான் எங்கே போவேன்? " என்று பதில் சொன்னாள் மனைவி.
தன் மனைவி பொய் சொல்லி ஏமாற்றுகிறாள் அல்லது அவள் மட்டும் மீனை சமைத்து சாப்பிட்டு விட்டாள் என்று உழவனுக்கு கோபம் மனைவியை போட்டு உதைத்தான். உழவனின் மனைவி கத்திக் கொண்டே வெளியே வந்து "ஐயோ! இந்த அநியாயத்தை கேட்பார் இல்லையா? " என்று கூச்சல் போட்டு அழவும் கும்பல் கூடிவிட்டது.
அப்போது கூட்டத்தில் ஒருவர் "என்ன நடந்தது எதற்கு உன் மனைவியை போட்டு அடிக்கிறாய்?" என்று கேட்டார்.
நான் இன்று காலையில் நிலத்தை உழுத போது மீன் ஒன்று கிடைத்தது. அதை சமைத்து வைக்க சொன்னேன். அதை சமைத்து இவளே சாப்பிட்டுவிட்டு எனக்கு வெறும் பழைய சோறு போடுகிறாள் என்று சொன்னான் உழவன்.
" ஏய் மடையா! நிலத்தை உழும்போது மீன் கிடைக்குமா? இப்படி முட்டாள் தனமாக பேசாதே! உன் மனைவியிடம் அன்பாக நடந்துகொள் "என்று அறிவுரை கூறினார் அந்த பெரியவர். வந்த எல்லோரும் சென்று விட்டனர். அப்போது அவன் மனைவி சட்டிக்குள் இருந்து ஒரு மீன் துண்டை எடுத்து சாப்பிடத் தொடங்கினாள்.
இதைப்பார்த்த உழவனுக்கு ஆத்திரம்! எல்லோரும் என்னை முட்டாள் என்றார்களே! இவளை கையும் களவுமாக பிடித்துகொடுக்கிறேன் பார்! என்று வெளியே வந்து , "என்னை நம்ப மறுத்தீர்களே! இப்போது வாருங்கள் வீட்டில் என் மனைவி மீன் குழம்பு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். எனக்கு தராமல் அவளே திண்ணவே ஏமாற்றுகிறாள் "என்றான்.
எல்லோரும் அவன் வீட்டிற்குள் நுழைந்தார்கள். இதற்குள் அவனது மனைவி சட்டியை எங்கோ மறைத்து வைத்து விட்டு. அழுது கொண்டே வெளியே வந்து " இவர் என்னை அடித்து என் உடம்பெல்லாம் புண்ணாகிவிட்டது. இவர் மீனே கொண்டுவரவில்லை. இல்லாத மீனை எப்படி சமைப்பது நான் சொல்வதை நம்புங்கள் இவர் இப்படி என்னை கொடுமைப் படுத்தினால் சாவதை தவிர வேறு வழியில்லை! " என்று அழுதாள்.
கணவனோ, "ஐயா மக்களே! இவள் பெரிய கைகாரியாக இருக்கிறாள் , நான் நிலத்திலிருந்து மீன் பிடித்து வந்தது உண்மை! அதை இவள் சமைத்து உண்டதும் உண்மை என் பேச்சை நம்புங்கள்! "என்றான்.
வந்திருந்த எல்லோரும் உழவனை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்! இவனுக்கு பைத்தியம் தான் பிடித்து இருக்கிறது! இல்லை பேய் பிடித்து இருக்க வேண்டும். நிலத்தில் மீன் பிடித்ததாக உளறுவதோடு இல்லாமல் மனைவியை அடித்து நம்மையும் ஏமாற்றுகிறானே! இவனை பிடித்த பேயை விரட்ட வேண்டும் என்று வேப்பிலையை கையில் எடுத்துக் கொண்டு விளாசினார்கள்.
"ஐயோ! அடிக்காதீங்க! நான் சொல்றது நிஜம்! நிலத்தில் தான் பெரிய மீனை பிடித்தேன்! " என்றான் உழவன்.
"விடாதீர்கள் இவன் பைத்தியம் தெளியும் வரை அல்லது பேய் ஓடும் வரை விடக்கூடாது "என்று ஆளாளுக்கு வேப்பிலையிலும் துடைப்பத்திலும் உழவனை அடிக்க ஆரம்பித்தார்கள். "அடேய்! என்னை நம்ப மறுக்கிறீர்களே! அநியாயமாக அடிக்கிறீர்களே!" என்று அலறியபடி ஓடத்துவங்கினான் உழவன்.
" பேய்தான் ஓடுகிறது! இந்த ஊர் எல்லை வரை சென்று விரட்டி விட்டு வருவோம் "என்று அவனை துரத்தினர் மக்கள். "என்னை விடுங்கள்! என்னை விடுங்கள்! இல்லை நான் மீன் பிடிக்க வில்லை! என் மனைவியை அடிக்க மாட்டேன்!" என்று கையெடுத்து வணங்கினான் உழவன்.
இப்போதுதான் பேய் வழிக்கு வந்திருக்கிறது! ஆனாலும் இப்படியே விடக்கூடாது வேப்ப மரத்தில் இன்று முழுவதும் கட்டி வைப்போம். நாளை விடுவிப்போம் என்று அவனை கட்டி வைத்தார்கள்.
மறுநாள் உழவன் தளர்ந்து இருந்தான். அவனை விடுவித்ததும் வீட்டிற்கு வந்தான். வலி தாங்க முடியாமல் "ஐயோ! அம்மா!" என்று முனகியபடியே இருந்த அவனை பார்த்து அவன் மனைவி சொன்னாள். "ஒரே தந்திரம் தான் செய்தேன்! இதையே உங்களால் தாங்க முடியவில்லை! நான் ஆயிரம் தந்திரங்கள் செய்தால் நீங்கள் என்ன ஆவீர்களோ? இப்போதாவது ஒத்துக் கொள்ளுங்கள் பெண்கள் தந்திர சாலிகள் !" என்றாள்.
சமைத்து வைத்த மீன் குழம்பையும் சோறையும் கணவனுக்கு போடவும் செய்தாள். கணவனும் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான். "உண்மையிலேயே நீ ரொம்ப கெட்டிக் காரிதான்! " என்ற கணவன் ஆசையோடு குழம்பு சோறை உண்டு முடித்தான்.
(செவிவழிக் கதை).
(மீள்பதிவு)
இரண்டு மூன்று நாட்களாக வேலைப்பளு அதிகம்! ஒன்றாம் தேதிவரை தொடரும் போல! இணையம் வர முடியவில்லை! வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது இனிய மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அருமை...
ReplyDeleteஎல்லாப் பண்டிகைகளுக்கும் வாழ்த்துக்கள்.
வேலைப்பளூதான் இப்போது இணைய இருப்பைக் குறைத்து விட்டது...
நன்றி.
நல்ல கதை.
ReplyDeleteபண்டிகை கால வாழ்த்துகள்....
பணிச்சுமை தான் இங்கேயும்.....
ஆணை மயக்கும் தந்திரம் வகையில் இதுவும் ஒன்றோ?
ReplyDeleteஅருமையான கதை நண்பரே!
ReplyDeleteபெண்கள் தந்திர சாலிகள் மட்டுமல்ல புத்திசாலிகள்தான். கதை அருமை
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகதை நன்றாக உள்ளது படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
செவி வழி வந்த கதையை செதுக்கி இருக்கிறீர்கள் நண்பரே வெகு அருமை!
ReplyDeleteஒத்துக் கொள்கிறேன் பெண்கள் தந்திரசாலிகள் என்று!
தந்திரத்தை சொல்வது எது? "மீன்" விழிகள்தானே?
ஆதுசரி ஒருவருக்குமே மீன் குழம்பு வாசம் தெரிய வில்லையா?
மனைவியின் கையை முகர்ந்து பார்க்க சொல்லி இருக்கலாம்மே?
அது சரி கணவனுக்கு தந்திரம் தெரியாது அல்லவா?
நட்புடன்,
புதுவை வேலு
வழக்கம்போல அருமை. நேரமிருக்கும்போது எழுதுங்கள்,வாசிக்கிறோம்.
ReplyDeleteஅருமையான கதை! இங்கேயும் இணையம் வரமுடியாத பிரச்னை தான்! இப்போ எல்லோருக்கும் இப்படி இருக்கு போல! நிதானமாக நேரம் இருக்கையில் எழுதுங்க!
ReplyDeleteஹாஹா!
ReplyDeleteபெண்கள் எனில் தந்திர சாலிகள் என ஒட்டு மொத்தமாக் முடித்து விட்டீர்களே?
பல நேரம் பெண்கள் தாம் நேசிப்பவனுக்காக, பிள்ளைகளுக்காக, குடும்பத்துக்காகவென தம்மை முட்டாளாக்கி கொள்வது என்னமோ நிஜம் தான்.
நல்ல கதை.இக்கதை படிக்கும் அனைத்து ஆண்களும் அவங்கவங்க வீட்டுக்காரிகள் ரெம்ப புத்திசாலிகள் என புரிந்து கொள்ளுங்கப்பா!
பிறகப்போகும் புது வருடம் நல வருடமாய் இருக்க வாழ்த்துகள்.
பாவம், இப்படியா நிரூபிக்க வேண்டும்?
ReplyDelete:))))
சுரேஷ் பயணத்தில் இருந்ததால்...தாமதம்.
ReplyDeleteநல்ல கதை....
எல்லா பண்டிகைகளுக்கும் வாழ்த்துகள்! புத்தாண்டு வாழ்த்துகளும்!