நரி சொன்ன தீர்ப்பு! பாப்பா மலர்!

நரி சொன்ன தீர்ப்பு! பாப்பா மலர்!

 ரொம்ப காலத்துக்கு முன்னாடி அழகாபுரி என்ற நாட்டை அழகேசன் என்ற ராஜா ஆண்டு வந்தாரு. அந்த சமயத்திலே நாட்டிலே மழையே இல்லை! எங்க பார்த்தாலும் வறட்சி! பசுமையே இல்லை! ஆடுமாடுகள் மேய ஒரு தழைக்கூட கிடைக்கலை. மக்கள் கூட்டம் கூட்டமா வேற ஊர்களுக்கு இடம்பெயர்ந்து போனாங்க
  அழகாபுரி ராஜா ஒரு கால்நடை பண்ணையே வைச்சிருந்தாரு. அதுல நிறைய ஆடுகளும் மாடுகளும் இருந்துச்சு. அந்த பண்ணையிலே கால்நடைகளுக்கு தீவணம் போட முடியாம தவிச்சாரு. அதனாலே அந்த பண்ணையில் இருந்த கால்நடையை எல்லாம் பக்கத்து நாடான மருங்கா புரி நாட்டுக்கு மேய அனுப்பினாரு. அந்த மாடுகளை மேய்க்க ஒரு ஆளையும் அனுப்பினாரு.
     அந்த ஆளும் மருங்காபுரி ஏரிக்கரையோரமா அந்த மாடுகளை மேய்ச்சிட்டு இருந்தாரு. அந்த ஏரிக்கரை ஓரமா ஒரு கிழவியோடு குடிசை இருந்தது. அந்த கிழவி பிரமாதமா சமைக்கும். இந்த மாடுமேய்க்கிற ஆளு மாடுகளை மேய்ச்சிட்டு வெறும் சோத்தை அந்த கிழவி சமைக்கிற சமயத்திலே குழம்பு வாசனையை பிடிச்சிட்டே சாப்பிடுவான்.
  ஒரு நாள் அந்த கிழவி இவன் வெறும் சோத்தை சாப்பிடறதை பார்த்து, ஏன் தம்பி வெறும் சோத்தை சாப்பிடறே? ஒரு குழம்பு, இல்லே கறி ஆக்கி சாப்பிட மாட்டியா?ன்னு கேட்டுச்சு.
   எனக்கு அதுக்கெல்லாம் வசதியில்லே பாட்டி! எங்க ஊருல பஞ்சம்! ராஜா இந்த ஊருல மாடு மேய்க்க என்னை அனுப்பினாரு. கஷ்டத்திலே இருக்கிற அவர் கொஞ்சம் அரிசியை மட்டும்தான் கொடுத்து அனுப்பினாரு. வேற பணம் இல்லை! அதனாலே சோறு வடிச்சு சாப்பிடறேன். அதான் நீ மணக்க மணக்க கொழம்பு வைக்கிறியே அத வாசனை பிடிச்சுகிட்டே சாப்பிடறேன்! அது போதும்! என்றான்.
      அப்ப என் கொழம்பு வாசனை பிடிச்சுத்தான் உன் சோத்தை சாப்பிடறியா?
    அட ஆமாம் பாட்டி!  அந்த மணமே என் சாப்பாட்டை ருசியாக்கிடுதுன்னு இவனும் கள்ளமில்லாம சொன்னான்.
   அந்த பாட்டி பொல்லாத பாட்டி, அது மனசுக்குள்ளே ஒரு திட்டம் போட்டுகிடிச்சு! 
  ஒரு ஆறுமாசம் கழிஞ்சது. அழகாபுரியிலே மழை பெய்ஞ்சு பஞ்சமெல்லாம் தீர்ந்தது. உடனே ராஜா மாடுகளை ஓட்டிக்கிட்டு அழகாபுரிக்கு வரச்சொன்னாரு. இவனும் மாடுகளை ஓட்டிக்கிட்டு கிளம்பறப்ப அந்த பாட்டி வந்து தடுத்தது.
   என் கொழம்பு வாசனையை பிடிச்சுதான் ஆறு மாசமா நீ சோறு சாப்பிட்டே! அதுக்கு பணம் எதுவும் தரலை! அதனாலே பாதி மாடுங்களை எனக்கு கொடுத்திட்டு மீதியை ஓட்டிக்கிட்டு போ! அப்படின்னு அராஜகம் பண்ணுச்சு கிழவி.
   கொழம்பு வாசனை காத்துல வந்தது! அதை பிடிச்சுட்டு சோறு தின்னது உண்மைதான்! ஆனா அதுக்கு பாதி மாடுங்களா? இவன் கேட்க
  என் கொழம்போட மணம் அப்படி? அதை ஏன் பிடிச்சே! மரியாதையா மாடுகளை ஒப்படை! இல்லேன்னா ராஜாகிட்டே போகலாம்னு கிழவி கூப்பிட்டுச்சு.
     மருங்காபுரி ராஜா விசித்திரமான இந்த வழக்குக்கு எப்படி தீர்ப்பு சொல்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தார். அப்ப அந்த நாட்டுலே ஒரு நரி  நல்ல அறிவாளியா இருந்துச்சு. அது தான் இந்த வழக்குக்கு தீர்ப்பு சொல்லனும் அந்த நரியாரை கூப்பிட்டு வாங்கன்னு ராஜா சொல்லி அனுப்பிச்சாரு.
      ராஜா சொன்ன தகவலை நரிகிட்டே சொல்லி நரியை வரசொன்னாங்க. நரியும் நாளை காலையிலே வந்து தீர்ப்பு சொல்றேன்னு சொல்லுச்சு.

    மறுநாள் காலையிலே நரி சீக்கிரம் வராம நேரம் கழிச்சு வந்துச்சு. ஏன் இவ்வளவு லேட்டுன்னு ராஜா கேட்டாரு.
   பக்கத்து ஊருல கடல் தீப்பிடிச்சு எரிஞ்சிருச்சு! அத வைக்கோல் போட்டு அணைச்சிட்டு வரேன்னு நரி சொல்லுச்சு.
     அதைக்கேட்டு எல்லோரும் சிரிக்க நரி சொல்லுச்சு கொழம்பு வாசனைக்கு கூலி கேட்டு வழக்கு வந்திருக்கப்ப இதை ஏன் நம்ப மாட்டேங்கறீங்க! அப்படின்னு சொல்லிச்சு.
   சரி சரி! நீ சொல்றதை ஒத்துக்கறோம்! இந்த வழக்குல உன் தீர்ப்பு என்ன? அப்படின்னு ராஜா கேட்டாரு.
    அழகாபுரி – மருங்காபுரி இடையிலே பெரிய ஏரி இருக்கு இல்லே! அந்த ஏரிக்கரை மேலே மாடுங்களை ஓட்டிக்கிட்டு போவட்டும். கிழவி ஏரி தண்ணியிலே வர நிழலை ஓட்டிக்கிட்டு போவட்டும் இதுதான் என் தீர்ப்புன்னு நரி சொல்லுச்சு.
     மருங்காபுரி ஏரிக்கரைமேல மாடுகளை மாட்டுக்காரன் ஓட்டி போக கீழே நிழலை பார்த்துகிட்டே வந்தாங்க பாட்டி. ஏரிக்கரை முடிவு வந்ததும் மாடுங்க அழகா புரி எல்லைக்கு வந்துருச்சு. நிழல் மறைஞ்சு போயிருச்சு. பாட்டி ஏமாந்து போயிட்டாங்க.
   என் மாடுங்க! என் மாடுங்க!ன்னு புலம்பனாங்க! கொழம்பு வாசனைக்கு நிழல் மாடுங்கதான் கிடைக்கும்! அதிகமா ஆசைப்படாதே! உனக்கு சிறை தண்டனை கொடுக்காம விடறேன்  போய் பிழைச்சுக்கோ! அப்படின்னு சொல்லுச்சு நரி.
   பாட்டியும் தன் தவறை உணர்ந்துட்டாங்க! ஜனங்களும் ராஜாவும் நரியோட அபார அறிவை பாராட்டினாங்க.
(செவிவழிக்கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. நரியின் அறிவு வியக்க வைத்தது. நன்றி.

  ReplyDelete
 2. நல்லதோர் நீதிக்கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 3. கதையில் நல்ல சுவாரஸ்யம் இருந்தது வாழ்த்துகள் நண்பரே...

  ReplyDelete
 4. நல்ல தீர்ப்பு நரி கொடுத்த தீர்ப்பு. அருமையான கதை பகிர்வுக்கு நன்றி சுரேஷ் சகோ :)

  ReplyDelete
 5. சிறுவர்களுக்கான சுவாரசியக் கதை அருமை

  ReplyDelete
 6. நாளைக்கு பள்ளி பிள்ளைகளுக்கு கதை சொல்ல தேடிக்கொண்டிருந்தேன் இதோ கிடைத்துவிட்டது ... மிக்க நன்றி

  ReplyDelete
 7. கேட்டிருக்கேன் என்றாலும் மீண்டும் ரசித்தேன்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!