ஆணவம் அழிந்தது! பாப்பா மலர்!

ஆணவம் அழிந்தது!  பாப்பா மலர்!


முன்னொரு காலத்திலே அஸ்தினாபுரத்தை பாண்டவர்களில் ஒருவரான தர்ம மஹாராஜா  ஆண்டுவந்தார். அவருடைய ஆட்சியில் நாடு செழிப்பாக இருந்தது. மக்களுக்கு எந்த குறைவும் இல்லை. இப்ப கோயில்களில் அன்ன தானம் போடறா மாதிரி அப்ப தர்ம மஹாராஜா தன்னோட அரண்மணையில் தினமும் அன்னதானம் செய்துகிட்டு வந்தாரு. அந்த தானத்தை பெற ஆயிரக்கணக்கான பேர் தினமும் குவிஞ்சிருவாங்க. ஆனாலும் நாள் தவறாம அவர்களுக்கு அன்னதானம் போட்டுக்கிட்டிருந்தாரு தர்ம மஹாராஜா.
    இப்படி நாளுக்கு நாள் அன்னதானம் வாங்கி சாப்பிடறவங்க அதிகரிக்கவும் தர்ம மஹாராஜாவிற்கு ஒரு பெரிய அகம்பாவம் ஏற்பட்டுவிட்டது. தன்னால் தினமும் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு உணவு வழங்கப் படுகிறது. தானே பெரிய தர்மவான். என்று எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தார்.
   ஒரு நாள் தருமரின் அரண்மணைக்கு கிருஷ்ணர் வந்தார். வாருங்கள்! வாருங்கள் ஸ்ரீ கிருஷ்ண மஹா பிரபு. தங்கள் வருகையால் என் அரண்மனை பாக்கியம் அடைந்தது. என்று வரவேற்றார் தருமர்.
   “ தருமா! அரண்மனையில் ஏதேனும் விஷேஷமா?”
   “ ஏன் கேட்கறீர்கள் பிரபு?”
  “ இல்லை இவ்வளவு கூட்டமாய் இருக்கிறது! விருந்து உபசாரங்கள் நடைபெறுகிறதே! என்ன விஷயம்?”
   தருமர் இதைக்கேட்டதும் செருக்குடன் புன்னகைத்துக் கொண்டார். ”தருமரின் அரண்மனையில் தினம்தோறும் விருந்துதான்! தினம் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அன்னதானம் போடுகிறேன்!” கர்வத்துடன் பதில் சொன்னார் தருமர்.
   “ தருமா! அன்னதானம் மஹா புண்ணியம்! இதை ஒரு நாள் கூட நீ தவற விடாமல் செய்து வருகிறாய் அல்லவா?”
  ”கண்டிப்பாக சுவாமி! என் அரண்மனையில் ஒரு நாள் கூட அன்னதானம் தவறினதில்லை!”
       “ நல்ல காரியம் செய்கிறாய்! இதற்கு நிறைய செலவாகுமே?”
  “ அதனாலென்ன? நாட்டில் வரி வருகிறது! வருவாய் கிடைக்கிறது! என் ஆட்சியில் எவரும் பசியோடு இருக்க கூடாது”! அகம்பாவமாய் சொன்னார் தர்மர்.
        ”உண்மை! உண்மை! உன்னால் யாரும் பசியோடிருந்தால் பொறுத்துக் கொள்ள முடியாதுதான்!  முன்னொரு சமயம் கூட தூர்வாச முனிவரின் பசியை போக்க வழியில்லையே என்று தவித்தவன் இல்லையா நீ!  உன்னைப் போன்ற தர்மவான்களை சிலர் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே! அவர்களுக்கு உன்னை அறிமுகம் செய்து வைக்க வேண்டும். இப்போது நீ என்னுடன் கொஞ்சம் வர முடியுமா?”
  “ கண்டிப்பாக சுவாமி! கட்டாயம் வருகின்றேன்!”
கிருஷ்ணர் தருமரை பாதாள லோகம் அழைத்துச் சென்றார். எங்கும் மாட மாளிகைகள் ஜொலித்தன. வீதிகள் தோறும் செல்வச் செழிப்பில் செழித்தன. அப்படியே நடந்து வருகையில், தருமருக்கு தாகம் மேலிட்டது.
    “கிருஷ்ணப் பெருமானே! எனக்கு தாகமாய் இருக்கிறது!”
   “அதோ! அந்த வீட்டில் சென்று நீர் அருந்துவோம்!”
இருவரும் அருகில் இருந்த ஓர் வீட்டிற்கு சென்று தாகத்திற்கு நீர் கேட்கின்றனர். அந்த பெண்மணி ஒரு பெரிய தங்கச் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தருகின்றாள்.
   தருமரின் கண்கள் வியப்பால் விரிகின்றன. குடிக்க நீர் தரும் சொம்பு கூட தங்கமா? அவ்வளவு செல்வ செழிப்புடனா இந்த நாட்டு மக்கள் இருக்கின்றனர்? வியந்து போனார் அவர்.
     நீரருந்தி காலிச் சொம்பை அப்பெண்மணியிடம் கொடுக்க, அந்த பெண்மணி வாங்க மறுத்தாள்.
    “ மன்னிக்க வேண்டும் ஐயா! எங்கள் பூமியில் தானமாய் தந்த பொருளை திரும்ப வாங்குவதில்லை!”
      “ நாங்கள் எதை தானம் பெற்றோம்?”
“தண்ணீர் கேட்டீர்கள் அல்லவா? அதை எதில் தருவது? அதிதிகளுக்கு உயர்ந்த பொருளில் கொடுப்பதே வழக்கம்! தங்கச் சொம்பில் தண்ணீர் தந்தேன். சொம்புடன் நீர் தானம் அளித்துவிட்டேன். சொம்பு உங்களுக்குத்தான்! திருப்பி வாங்குவது குற்றமாகும்” என்றாள் அந்த பெண்மணி

     தண்ணீரைக் கூட தங்கச் சொம்பில் தானமாக தருகின்றார்களா? தருமரின் கண்கள் வியப்பால் விரிந்தன.
  அங்கிருந்து மஹாபலி சக்ரவர்த்தியின் அரண்மணைக்குச் சென்றனர். தருமரை வாசலில் நிறுத்தி  தான் மட்டும் உள்ளே சென்றார் கிருஷ்ணர்.
   கிருஷ்ணரை வரவேற்று நன்கு உபசரித்து மகிழ்ந்தார் மஹாபலிச் சக்ரவர்த்தி. அப்போது கிருஷ்ணர், மஹாபலி! என்னுடன் பாண்டவ சக்ரவர்த்தி தர்மர் வந்துள்ளார். அவரை வாசலில் நிறுத்தி விட்டு நான் மட்டும் உள்ளே வந்துவிட்டேன் அவனை அழைத்து வர வேண்டும் என்றார்.
   “ அந்த மஹா பாவியை ஏன் அழைத்து வந்தீர்கள்?”
  “ என்ன சொல்லுகிறாய் மஹாபலி! எல்லோரும் அவரை தர்மவான் என்று சொல்கிறார்கள் நீ மஹா பாவி என்கிறாயே!”
   பின்னே எப்படி சொல்வது பிரபுவே! அவனது நாட்டில் தினமும் பல்லாயிரக்கணக்கானோருக்கு உண்ண உணவில்லாமல் அவனது அரண்மனையில் தானம் பெற்று வாழ்கின்றார்கள். தனது குடிமக்களை இப்படி ஒரு வேளை உணவிற்கு பிச்சை எடுக்கும்படி செய்து அரசாள்பவன் எப்படி மன்னன் ஆவான்?  நானோ நாளும் அதிதி பூஜை செய்வதற்கு ஆள் கிடைக்காமல் சிரமப் படுகின்றேன்! கொள்வோர் யாருமில்லாது கொடுக்க வழியில்லாது தவிக்கிறேன்!
      வெளித் திண்ணையில் அமர்ந்து இந்த சொற்களை கேட்டுக் கொண்டிருந்த தர்மரின் அகந்தை அழிந்தது.
   கிருஷ்ணர் விடைபெற்று தருமரிடம் வந்தார்.  “ பிரபோ! என் ஆணவம் அழிந்தது. தானம் செய்கிறேன்! என்று செருக்கோடு இருந்தேன். உண்மையில் யாரும் தானம் பெற  அவசியம் இல்லாத வகையில் ஆள்வதுதான் அரசாட்சி என்று  இன்று உணர்ந்து கொண்டேன். இனி அவ்வாறே அரசாள முயல்வேன் என்றார்.
   கிருஷ்ணர் மந்தகாசமாய் புன்னகைத்தார்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அருமையான கதை பகிர்வு.
    நன்றி.

    தானம் பெற அவசியம் இல்லாத வகையில் ஆள்வதுதான் அரசாட்சி //

    அது போன்ற அரசாட்சியை நினைத்துப் பார்க்கவே நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. நல்லதொரு பாடத்தை தந்தது கதை.

    ReplyDelete
  3. வாராவாரம் ஒரு கதை கொடுத்து உதவிவிடுகிரீர்கள் ... நன்றி ... http://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete
  4. அருமையான கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  5. ம்ம்ம்ம்ம் இலவசத்தை நினைவூட்டும் கதை! :(

    ReplyDelete
  6. அருமையான கதை பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2