மூன்றாம் நதி! புத்தக விமர்சனம்

  மூன்றாம் நதி!


   எழுத்தாளர் வா. மணிகண்டன்  எழுதியிருக்கும் நாவல். பெயர்க் காரணமே சுவாரஸ்யமாக விளக்குகின்றார். கங்கா யமுனா சரஸ்வதி என்றால் மூன்றாவது நதியை பார்க்க முடியாது.கூடுதுறையில் காவிரியும் பவானியும் தெரிகின்றன அமுத நதி தெரிவது இல்லை. ஆனால் மூன்றாவது நதி இணைகையில்தான் இந்த இடங்கள் சிறப்பு பெறுகின்றன. இப்படி கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ நதிகள். அவற்றை ஒத்தவள்தான் இந்த கதையின் நாயகி பவானியும் என்று சொல்கின்றார்.
   எழுத்தாளர் வா. மணிகண்டன் பற்றி இரண்டு வருடங்களாய்த்தான் தெரியும். அவரது நிசப்தம் தளத்தினை தவறாமல் வாசிப்பவன் என்ற வகையில் அவரது எழுத்தாளுமை எனக்கு பரிச்சயமான ஒன்று. தேவையில்லாத வர்ணணை வம்பளப்புக்கள் இல்லாது சுவாரஸ்யமாக பக்கத்து வீட்டு அக்காவிடமோ அல்லது உடன் படிக்கும் நண்பனிடமோ கதை கேட்பது போன்ற ஓர் எழுத்து. படிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. முடித்துவிட்டுதான் ஓய வேண்டும்.
  இவரது முந்தைய நூல்களில் மசால் தோசை 38 ரூபாய் சென்ற வருடம் புத்தக கண்காட்சியின் போது வெளியிட்டார். வாங்கி படித்தேன். அன்றாடம் நம் சமூகத்தின் ஊடே புழங்கும் சாமானியர்களைப் பற்றிய சரித்திரம் அது. மூன்றாம் நதியின் நாயகியும் ஓர் சாமானியப் பெண் தான்.
   கதையை அவள் தான் தொடங்கி வைக்கிறாள். கனத்த இதயத்தோடு கடைசி பக்கத்தை முடித்து வைப்பவளும் அவள்தான். பெங்களூரூ போன்ற மாநகரங்களில் வசிப்போருக்கு குடிநீர்த் தேவை எத்தனை அத்தியாவசியம். அவை எங்கிருந்து எப்படி கிடைக்கிறது. ஒரு பாட்டில் நீருக்குள் புகுந்திருக்கும் நீர் அரசியல் உங்களுக்குத் தெரியுமா?
  இருபது ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் நீரை வாங்கி பாதிக் குடித்துவிட்டு கீழே எறிந்துவிட்ட செல்லக் கூடியவரா நீங்கள்? இந்த கதையை படித்த பின் அப்படி எறிய நீங்கள் யோசிப்பீர்கள். அப்படி யோசிக்கவில்லை என்றால் வருங்காலத்தில் நீங்கள் நிறைய யோசிக்க வேண்டியிருக்கும்.தென் கோடியில் ஈரோடு, கோபி பக்கத்து மக்கள் எப்படி வறண்டு போன நிலங்களால் தங்களது வருவாயை இழந்து பெருநகரமான பெங்களூரூ போன்ற நகர்களுக்கு பிழைக்கச் சென்று வாழ்க்கையை இழக்கிறார்கள் என்பதை காட்சி படுத்தும் விதம் சிறப்பு.
    பெங்களூர் புறநகர் பகுதிகள் அங்கு குவியும் லே-அவுட் வீடுகள், அவற்றின் நீர்த் தேவை. அவற்றிற்காக செய்யப்படும் முயற்சிகள். நீர் வியாபாரம், அதில் மோதல், இரு வியாபாரிகளுக்கான மோதலில் எப்படி நாயகி பாதிக்க படுகின்றாள் இதுதான் கதை.
   நீர் அரசியலில்  நீச்சலிட முடியாமல் தோற்றுப் போகும் மூன்றாம் நதியான பவானிகள் பெங்களூரூவில் மட்டும் அல்ல! வேறு பெருநகரங்களில் கூட இருக்கலாம். வருங்காலத்தில் மூன்றாவது உலகப் போர் என்று ஒன்று நடந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். அப்படி ஓர் நீர்  போரில் தான் பவானி மூன்றாம் நதியாக காணாமல் போகின்றாள்.
எளிமையான எழுத்து நடையில் எல்லோருக்கும் புரியும்படியான பாணியில் கதையை நகர்த்தி செல்கின்றார். விறுவிறுப்பு, சஸ்பென்ஸ், த்ரில்லர் என்று இல்லை. ஆனால் அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்று யோசிக்க வைக்கிறது.
  சிறு குழந்தையாக பெங்களூர் புறநகரில் அடியெடுத்து வைக்கும் நாயகி தன் கிராமத்து சூழலை மறந்து பெங்களூர் அடித்தட்டு மக்கள் சூழலில் வளர்ந்து எத்தனையோ ஏமாற்றங்களை சந்தித்து ஏற்றம் பெறும் சூழலில் வாழ்க்கையைத் தொலைக்கின்றாள். அவள் உழைப்பு எல்லாம் வீணாகிப் போகின்றது நீரூக்கு நடக்கும் போரில். 
104 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ 100.
யாவரும் பதிப்பகம் வெளியீடு
புத்தகம் கிடைக்கும் இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், 6, மஹாவீர் காம்ப்ளக்ஸ்
முனுசாமி சாலை, கே.கே நகர் மேற்கு. சென்னை 78
அலைபேசி:9940466650

எல்லோரும் வாசிக்க வேண்டிய சிறப்பான நாவல். புத்தகத்தின் வடிவமைப்பும் அழகு, தாள்களும் தரமாக அமைந்துள்ளது. 
இதன் மூலம் கிடைக்கும் தொகை நிசப்தம் அறக்கட்டளைக்கு சென்று அறச்செயல்களுக்கு செல்லவிருக்கிறது என்பதும், இந்நாவல் ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலம் திரட்டப் பட்ட ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தொகை ஏழைப் பெண்களின் கல்வி உதவிக்கு பயனளிக்க உள்ளது என்பதும் கூடுதல் தகவல்.

Comments

  1. நன்றி பகிர்வுக்கு. புனிதமான நோக்கத்தைப் பாராட்ட வேண்டும்.

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம்... http://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete
  3. இவரைக் குறித்து அறிந்திருந்தாலும் அதிகம் படிக்கவில்லை. முந்தாநாள் தான் இவர் தந்தையைக் குறித்து எழுதி இருந்த ஓர் பதிவைப் படிக்க நேர்ந்தது. தேர்ந்த எழுத்து. உங்கள் விமரிசனமும் சோடை போகவில்லை.

    ReplyDelete
  4. மணிகண்டன் அவர்கள் அறிமுகம் உண்டு. நேரிலும், தளத்தின் மூலமும். பேச வேண்டும் என்று நினைத்து பின்னர் அப்படியே போனது.

    அவரது தளத்தைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் அங்கு பின்னூட்டம் இடுவதில்லை என்றாலும். அவரது நோக்கம் செயல்கள் எல்லாமே மிகவும் போற்றுதர்குரியது. நல்ல நூல் அறிமுகம்...

    கீதா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2