சமச்சீர் கல்வி தமிழக அரசின் வீண்பிடிவாதம்!
சமச்சீர் கல்வி தமிழக அரசின் வீண்பிடிவாதம்!
சமச்சீர்கல்வி என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நல்ல கல்வி திட்டமாகும். அதை கருணாநிதி அரசு உருவாக்கியது என்ற ஒரே காரணத்தால் யாரும் அனுபவிக்கமுடியாத நிலைக்கு கொண்டு வருவது என்பது மூடத்தனமான ஒன்று. அதிமுக அரசு இந்தக் கல்வியை தடை செய்ய சட்ட திருத்தமே கொண்டு வந்திருக்க கூடாது.
பாடதிட்டத்தைஅமல்படுத்திவிட்டு அதில் உள்ள குறைகளை படிப்படியாக நிவர்த்தி செய்ய முயண்றிருக்க வேண்டும் அதை விட்டு தடைசெய்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று பின் ஆராய ஒரு குழு அமைத்து உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இப்போது உயர்நீதி மன்றம் சமச்சீர் கல்வியை அமல் படுத்த ஆணையிட்ட பின்பும் மீண்டும் உச்சநீதிமன்றம் செல்வது வேதாளம் விக்கிரமாதித்தன் கதையைத்தான் நினைவுப்படுத்துகிறது.
முதலில் இதனால் பாதிக்கப்படுவது பள்ளிக்குழந்தைகள்தான் பள்ளி திறந்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் இன்னும் பாடபுத்தகங்கள் வழ்ங்கப்படவில்லை. பாடங்கள் நடத்தப்படவில்லை. நியாயமாக முதல் இடைத்தேர்வு நடத்த வேண்டிய சமயம் இது. இது வரை பாடம் நடத்தாவிடில் இனி இந்த கேஸ் முடிந்து தீர்ப்பாகி எப்பொழுது புத்தகங்கள் வழங்கி எப்போது படித்து முடிப்பார்கள். ஆசிரியர்கள் விரைந்து பாடதிட்டத்தை முடிக்க திணிக்கப்படுவார்கள் இதனால் பணிச்சுமை அதிகரிக்கப்படுவதோடு மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள்.
குறைந்த நாட்களில் நிறைய படிக்க வேண்டிய சுமை மாணவனுக்கு உருவாகி விட்டது. இது இன்னும் நீண்டால் இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கதி அதோ கதிதான்! ஏற்கனவே ஊர் சுற்றும் மாணவர்களுக்கு பாடதிட்டம் தாமதமாவது மகிழ்ச்சியாக இருந்தாலும் கல்வியில் நம்மை பின்னோக்கி செலுத்துவதாகவே அரசின் முடிவு அமைந்துள்ளது.
இந்த பாடதிட்டம் குறையானதாகவே இருந்தாலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று உடனே அமல் படுத்தாமல் மீண்டும் மீண்டும் மேல் முறையீடு செய்வது என்பது பல்லாயிரக் கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் ஒரு குழந்தைத்ததனமான போக்கையே காட்டுகிறது. எதையும் ஆராய்ந்து அறிந்து செயல்படுவதே ஒரு நல்ல அரசனுக்கு அழகு! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட்டுவிட்டு பின்பு தோல்வியாகிவிட்டதே மூக்கு உடைபட்டுவிட்டதே என்று வருந்துவது நல்ல அரசுக்கு அழகல்ல.
நான் ஒரு டியுசன் ஆசிரியனாக இருந்ததால் சென்ற ஆண்டு ஆறாம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடபுத்தகங்களை பார்த்ததுண்டு. மெட்ரிகுலேசன் பள்ளி புத்தகங்களுக்கு இணையான தரமான காகிதத்தில் படங்களோடு அழகாக இருந்தாலும் பாடங்களின் தரம் ஆறாம் வகுப்புக்கு போதுமானதாக இல்லை. இதே பாடங்களை ஆங்கில வழியில் பயிலும் மாணவன் மூன்று அல்லது நான்காம் வகுப்பில் படித்து விடுவான். அந்த அளவில் தான் பாடங்கள் இருந்தன. இத்தனைக்கும் நான் அரசுப்பள்ளியில்தான் படித்தேன். நான் படித்தபோது இருந்த அளவு கூட பாடங்கள் இல்லை பாடச்ச்மையை குறைப்பதாக கூறி சாறில்லாமல் செய்து விட்டிருந்தார்கள்.
ஆனாலும் இதை மாற்றி அமைக்க இதுவல்ல நேரம் முன்னாள் அமைச்சர்கள், அரசியல் வாதிகள் அவர்களது ஆதரவாளர்களின் படைப்புகள் எல்லா ஆட்சிகளிலுமே இடம் பெறுவது வாடிக்கைதான். பிடிக்கவில்லை என்றால் அதை மட்டும் நீக்கிவிட்டு பாடதிட்டத்தை அமல் படுத்திவிட்டு பின்னர் ஒரு குழு அமைத்து புதிய பாடதிட்டம் தயாரித்திருக்கலாமே!
அப்படி செய்திருந்தால் இப்பொழுது கிளம்பிய எதிர்ப்பு கிளம்பியிருக்காது தேன் கூட்டில் கல்லெறிந்துவிட்டு இப்போழுது முழிக்கிறது அரசு. வீண்பிடிவாதத்தை விட்டு உடனே சமச்சீர் கல்வியை அமல் படுத்தி மாணவர்கள் வயிற்றில் பால் வார்க்குமா அரசு!.அது அந்த ஸ்ரீ ரங்க நாதனுக்கே வெளிச்சம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்துசெல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
Comments
Post a Comment