சலவைத்தொழிலாளியும் கழுதையும்! (உருவக கதை) பாப்பாமலர்

சலவைத்தொழிலாளியும் கழுதையும்! (உருவக கதை)

ஓர் ஊரில்  சலவைதொழிலாளி ஒருவன் வசித்து வந்தான்.அவனது வேலை அந்த ஊரில் உள்ள அனைவரின் துணிகளை அழுக்குப் போக வெளுத்து தருவதுதான். தினமும் வீடுவிடாக சென்று துணிகளை வாங்கி மூட்டைக் கட்டி தான் வளர்க்கும் கழுதை மேல் ஏற்றி ஆற்றுக்கு கொண்டுசென்று துணிகளை வெளுத்து மாலையில் அவரவர் வீடுகளில் திருப்பித் தருவான். இதற்காக அவனுக்கு வீடுகளில் தினமும் உணவும் வருடம் ஒரு முறை ஒருவீட்டிற்கு ஒரு மரக்கால் நெல்லும் கூலியாக வழங்கப்பட்டு வந்தது.  சலவைத்தொழிலாளியும்   அதைக் கொண்டு மகிழ்ச்சியாக காலத்தை கழித்து வந்தான்.
 சலவைத்தொழிலாளியிடம் இருந்த கழுதைக்கு கொஞ்சம் சோம்பல் அதிகமாகிவிட்டது. இதென்னாடா பொழைப்பு தினமும் மூட்டை சுமப்பது இந்த சலவைக்காரரிடம் வந்து அகப்பட்டுக் கொண்டோமே?காடுகளில் ஜாலியாக சுற்றி திரிந்த நாம் இங்கு அழுக்குத்துணிகளை சுமக்க வேண்டியதாயிற்றே! அழுக்கு துணிகளை சுமக்கவா நான் பிறந்தேன் என்று மனதிற்குள் புலம்பியது.
   மறுநாள் முதல் அந்த கழுதை முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. துணிமூட்டைகளை சுமக்க மறுத்து கீழே தள்ளியது.  சலவைத்தொழிலாளிக்கு கழுதையின் செயல் ஆச்சர்யமாக இருந்தது. இது இவ்வாறு செய்வது ஏன்? ஏதேனும் உடல் நலம் சரியில்லையோ என்று வருந்தி பரிவாக முதுகில் தடவி கொடுத்தான் பின்னர் அதற்கு சிறிதளவு தீணி கொடுத்துவிட்டு தானே மூட்டைகளை சுமந்து சென்றான்.
   அடுத்த நாளும் கழுதை முரண்டு பிடித்து மூட்டைகளை கீழே தள்ளியதோடு அல்லாமல்  சலவைத்தொழிலாளியை உதைத்து தள்ளியது. வேறு யாரேனும் என்றால் கழுதையை பலி போட்டிருப்பார்கள் நம்சலவைத்தொழிலாளி   பாவம் பொறுமைசாலி! கழுதைக்கு ஏதோ உடல் நலம் சரியில்லை அதனால் தான் இவ்வாறெல்லாம் செய்கிறது என்று அதற்கு உணவளித்துவிட்டு வழக்கம் போல் தானே துணிகளை சுமந்து சென்றான்.

 ஒரு வாரம் ஆகியும் கழுதை சரிபட்டுவரவில்லை.முரண்டு பிடித்தது. அதன் மனதில் நாம் ஏன் வேலை செய்ய வேண்டும் அதான் முரண்டு பிடித்தால் உணவு தருகிறானே இதையே கடைபிடிப்போம் என்று தவறாக எண்ணிக்கொண்டு விட்டது. அன்று  சலவைத்தொழிலாளி உணவை அளித்து விட்டு கழுதை மேல் மூட்டையை வைத்ததும்தான்  தாமதம் உடனே கீழே தள்ளிவிட்டு  சலவைத்தொழிலாளியை எட்டி உதைத்தது.
  இதுவரை பொறுமை காத்த  சலவைத்தொழிலாளி ஆத்திரமடைந்தான். சோம்பேறிக் கழுதையே என்னிடமா ஏமாற்றுகிறாய்? வேலை செய்ய சோம்பல் பட்டு என்னையே உதைக்கிறாயா? என்று அருகில் கிடந்த தடியை எடுத்து விளாசு விளாசென்று கழுதையின் முதுகில் விளாசி விட்டான்.
  வலியில் துடித்த கழுதை தன் தவறை எண்ணி வருந்தியது. ஒழுங்காக உழைத்திருந்தால் இந்த அடி கிடைத்திருக்குமா? இந்த அடிபட்ட வலியோடு மூட்டை சுமக்கும் நிலையாயிற்றே என்று அழுதது.
  அன்பு குழந்தைகளே! ஒருவன் பொறுமையாக இருக்கிறான் என்பதற்காக அவனை  மீண்டும் மீண்டும் சீண்டக் கூடாது! அது போலவே உழைக்காமல் உணவருந்தவும் ஆசைப்படக்கூடாது. இதை இக்கதை மூலம் உணர்ந்திருப்பீர்கள் அல்லவா!

பெயரைக் கண்டுபிடி!


சத்ரபதி சிவாஜியின் பிரியமான குரு அவர். ஒரு சமயம் அவர் தமது சீடனோடு வழிப்பயணம் செய்கையில் சீடன் பசி தாங்காமல் அருகில் இருந்த சோளக் கொள்ளையில் சில கதிர்களை பறித்து உண்டுவிட்டான். அதை காவல் காரன் பார்த்து விட்டான். அதோடு சீடனையும் குருவையும் செம்மையாக அடித்தும் விட்டான்.
  விஷயம் சிவாஜியின் காதுக்கு வந்தது. அவர் அந்த காவல்காரணை சிறையில் தள்ள உத்தரவிட்டார். சிவாஜியின் குருவோ அவனை விடுவிக்க சொன்னார். அதற்கு காரணமும் சொன்னார். அது. சீடனின் பசியை போக்காமல் விட்டது என் தவறு அதற்கு நான் தண்டணை பெற்றேன். பிறர் பொருளை கேட்காமல் எடுத்தது சீடனின் தவறு அதற்கு அவன் தண்டணை பெற்றான் இதில் நீ கோபிப்பதில் நியாயம் இல்லை என்று அந்த குரு கூறினார்.
  அந்த குரு யார் உங்களுக்குத் தெரியுமா?
    இராம தாசர்.
 
தங்கள் வருகைக்கு நன்றி ! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிவிடலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

 1. ஐயன்
  செட்டியான்
  பள்ளன்
  கள்ளன்
  வெள்ளாளன்
  கவுண்டன்
  பறையன்
  தேவன்
  என சொல்ல திராணியற்று , சலவை தொழிலாளியை வண்ணான் என அழைக்கும் உங்களின் செயல் தளிரில் திராவகம் ஊற்றுவதாக இருக்கிறது, குழந்தைகளுக்கு என்று எழுதிய நீங்கள் இன்னும் வளராமலே இருப்பது உறுத்தலாக இருக்கிறது .
  தபால் காரர்
  பால் காரர்
  சமையல்காரர்
  காய்கறிகாரர் என நல்லவைகளை சொல்லித்தாருங்கள் .

  ReplyDelete
 2. நண்பர் ராஜ கோபாலணுக்கு தளிரில் தவறுகள் திருத்தப் படும். சலவை செய்பவர்களை கிராமத்தில் அழைப்பதை வைத்தே கதை புணைய நேரிட்டது. இருந்தாலும் யாருடைய மனது புண்பட்டிருந்தாலும் தளிர் தனது வருத்ததை தெரிவித்துகொள்கிறது. தங்கள் அறிவுரைப்படி நல்லதே சொல்லித்தர நானும் விரும்புகிறேன். வலைப்பூ வருகைக்கும் விமரிசனத்திற்கும் follow செய்வதற்கும் நன்றி! அன்புடன் சுரேஷ்பாபு

  ReplyDelete
 3. மதிநிறை சுரேஷ் பாபு
  வணக்கம் , என் கருத்திற்கு மதிப்பளித்தமைக்கு நன்றி

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2