முதல் ரேங்க்! பாப்பா மலர்!
முதல் ரேங்க்!
எட்டாம் வகுப்பு வகுப்பறையில் மாணவர்கள் கும்பலாக குழுமி அரட்டை அடித்துக்கொண்டு இருந்தனர். வகுப்பாசிரியர் வடிவேலு கையில் பேப்பர்களோடு வகுப்பறைக்குள் நுழையவும் ‘சார் வந்துட்டாருடா!’ என்று அனைவரும் அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர்.
வகுப்பாசிரியர் ‘அட்டெண்ட்ஸ்’ எடுத்து முடித்துவிட்டு ‘மாணவர்களே சமீபத்தில் நீங்கள் அரையாண்டுத்தேர்வு எழுதினீர்கள் அந்த விடைத்தாள்களை திருத்தி முடித்துள்ளேன். காலாண்டுத்தேர்வைப் போலவே இந்தத் தேர்விலும் பிரகாஷ் முதல்ரேங்கில் தேர்ச்சிப் பெற்றுள்ளான். கங்கிராஜுலேசன் பிரகாஷ்!” என்றுவிடைத்தாள்களை அளிக்க ஆரம்பித்தார்.
பிரகாஷிற்கு மிகவும் பெருமையாக இருந்தது. வகுப்பே அவனை பார்க்க மிகவும் பெருமிதமடைந்தான். வகுப்பில் முதல் ரேங்க் பெற்றுவிட்டோம் நம்மை மிஞ்ச யாரும் இல்லை என்ற தவறான எண்ணத்தையும் முதல் ரேங்க் அவன் மனதில் உண்டு பண்ணிவிட்டது.
முன்பெல்லாம் மற்ற மாணவர்கள் பாடத்தில் ஏதாவது சந்தேகம் கேட்டால் தனக்குத் தெரிந்ததை தயங்காமல் சொல்லித் தருவான். முதலிடத்தை பிடித்ததும் இந்த நல்ல பழக்கத்தை அவன் கைவிட்டான். சந்தேகம் கேட்டுஅவனிடம் வந்தால் ‘டேய் இதை சார்தான் சொல்லித்தந்தாரு இல்லே அவர் சொல்லியே புரியலேன்னா நான் சொல்லியா புரியப் போகுது உன் மர மண்டைக்குஇதெல்லாம் ஒத்து வராது. கிளம்பு கிளம்பு’ என்று விரட்டி அடிக்க ஆரம்பித்தான்.
தான் தான் புத்திசாலி மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற எண்ணம் பிரகாஷிடம் மேலோங்கத் தொடங்கியது. எல்லோரையும் விரட்டி அடித்தான். அவனுக்கு நண்பர்களே இல்லாது போகுமளவுக்கு அவனது ஆணவம் வளர்ந்துகொண்டிருந்தது. இது வகுப்பாசிரியரின் காதுக்கும் எட்டியது. இது நல்லதல்லவே! எப்படியாவது அவனை திருத்த வேண்டுமென ஆசிரியர் முடிவெடுத்தார்.
அன்று ஒரு கடினமான கணக்கை ஒருமுறை எடுத்துக்காட்டி விலக்கிவிட்டு அதே போன்ற வேறு ஒரு கணக்கை பிரகாஷிடம் கொடுத்து போடச் சொன்னார் ஆசிரியர். பிரகாஷ் மிக நீண்ட நேரம் எடுத்துக் கொண்ட போதும் கணக்கை போட முடியாமல் தவித்தான். இறுதியில் வகுப்பாசிரியரிடம் சென்று, “சார் இந்த கணக்குப் புரியலே கொஞ்சம் திரும்பவும் சொல்லித் தாங்க சார்!” என்று கேட்டான்.
இதற்கென காத்திருந்த ஆசிரியர். ‘நான் தான் ஒருமுறை போட்டு காட்டினேனே! அப்ப புரியாதது இப்ப சொல்லிக் கொடுத்தா புரிஞ்சிடுமா?ஒரு சின்ன கணக்கை போடத்தெரியல நீயெல்லாம் முதல் ரேங்க்னு சொல்லிகிட்டுத் திரியற! போ! போ! என்று விரட்டினார்.பிரகாஷ் எவ்வளவு கெஞ்சியும் அவர் மிடுக்காக நீயெல்லாம் எதுக்குபடிக்க வரே? சுத்த வேஸ்ட் என்று கடிந்து கொள்ளவும் பிரகாஷிற்கு அழுகை முட்டியது.
‘நாம் தான் பெரிய புத்திசாலி என்று கர்வம் கொண்டு எத்தனை நண்பர்களை விரட்டி அடித்தோம் இன்று அதே நிலை தனக்கும் நேர்ந்துவிட்டதே ! இனி யார் சந்தேகம் கேட்டாலும் சொல்லித்தரவேண்டும்.’ என்று முடிவெடுத்தான் . ஆனாலும் ஆசிரியர் திட்டியது அவன் மனதை வலித்தது. சார் இப்படி பேசமாட்டாரே ஏன் இப்படி? என்று மூலையில் அமர்ந்துஅழுது கொண்டிருந்தான்.
அப்போது, பிரகாஷ்! குரல் கேட்டு நிமிர்ந்தான். ஆசிரியர் புன்முறுவலோடு நின்றிருந்தார். இப்ப தெரியுதா மத்தவங்களோட வலி! உன்னை திருத்ததான் இப்படி கடுமையா நடந்துகிட்டேன். எல்லாம் தெரிஞ்சவங்க யாருமே கிடையாது! நமக்கு தெரிஞ்சத நாலு பேருக்குச் சொல்லித் தரணும். நான் நடத்தனாலும் சில பேருக்கு புரியாது அவங்க உன் கிட்ட கேட்டா நீ விரட்டி அடிச்சி அவங்க மனசு எவ்வளவு புண்பட்டிருக்கும் அதை நீ உணரணும்தான் அப்படி செஞ்சேன். வா கணக்கை சொல்லித் தறேன். என்று அழைத்தார் ஆசிரியர்.
சார் நான் திருந்திட்டேன் இனிமே யார் என்ன கேட்டாலும் எனக்கு தெரிஞ்சதை சொல்லித் தருவேன். யாரையும் தறகுறைவா பேசமாட்டேன் என்றான் பிரகாஷ்.
இப்போ நீ படிப்பில மட்டும் முதல் ரேங்க் இல்ல நடத்தையிலும் முதல் ரேங்க் என்றார் ஆசிரியர் மகிழ்வோடு!
பெயரைக் கண்டுபிடி!
அந்தபாடகர் ஒரு சங்கீத மேதை! புகழ்பெற்ற கர்நாடக சங்கீத வித்வான். மும்பை (பம்பாய்) மாநகரத்தில் அவருடைய கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அப்போது அவர் தமது பாடல்களிலே புண்ணியத்தலங்கள் பலவற்றின் பெயரையெல்லாம் இணைத்து பாடினார்.
உடனே ஒருவர் ‘ஐயா எங்கள் ஊரையும் உங்கள் பாட்டில் வைத்துப் பாடுங்களேன் என்றார். ஆகட்டும் என்று தலையசைத்த பாடகர், உடனே “ஆடு பாம்பே” என்று பாடத் தொடங்கி “விளையாடுபாம்பே” என்று பாடினார். இப்பொழுது ‘பாம்பேயில் ஒரு அழுத்தத்தை கொடுத்து பாடினார்.
ரசிக பெருமக்கள் மெய் மறந்து கரவொலி எழுப்பினர். ரசிகர்களின் பாராட்டை பெற்ற அந்த பாடகரை உங்களுக்குத் தெரியுமா? விடை கடைசியில்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!
செம்பை வைத்யநாத பாகவதர்.
me first rank.....!!!
ReplyDelete