எங்கே நடக்கும் இந்த கூத்து?
எங்கே நடக்கும் இந்த கூத்து?
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டியவர்கள் கூட இப்போது ஒரு விஷயத்தில் முகத்தை சுளிக்கிறார்கள் என்றால் அது சமச்சீர் கல்வி விஷயத்தில் தான். தமிழக அரசு இந்த விஷயத்தில் வீண் பிடிவாதம் பிடிப்பதாக ஏற்கனவே கூறியுள்ள நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நடைமுறைப் படுத்த சாத்தியமில்லை என்று அரசு தரப்பு வாதிட்டு வருகிறது. நாளை எதிர் தரப்பு வாதங்கள் கேட்கப்பட்டு வெள்ளி அல்லது திங்களன்று இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப் பற்றி பேசுவது நீதிமன்ற அவமதிப்பாக ஆகிவிடும் என்பதால் வழக்கை விட்டு வெலியில் வருவோம். தமிழக மாணவர்களின் இன்றைய நிலை குறித்து தற்போது சற்று ஆராய்வோம்.
பள்ளிகள் திறந்து ஒன்றரை மாதம் ஆகியும் ஒரு பாடமும் நடத்தப்படாத நிலை. எந்த புத்தகத்தை படிப்பது எந்த புத்தகம் வழங்கப்படும் எதைப் படிக்கலாம் எதை விடுவது எதை படிப்பது என்று மாணவர்களுக்குத்தான் எத்தனை குழப்பங்கள். எந்த ஊரிலாவது அல்லது நாட்டிலாவது பள்ளிகள் திறந்தும் பாடபுத்தகங்கள் இல்லாமல் இத்தனை காலம் குழந்தைகள் அவதிப் பட்டதுண்டா? இருக்காது. எல்லாம் தமிழகத்தில்தான் இந்த கூத்துக்கள் அரங்கேறும்.
இவை அரங்கேறக் காரணம் என்ன? பள்ளிக்குழந்தைகளுக்கான பாடபுத்தகங்கள் தயாரிப்பில் அரசியல் குறுக்கீடு இருப்பதுதான்.முன்பே கூட இந்த குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. கலைஞரின் ஒரு பாடம் முந்தைய அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டது. திமுக அதிமுக இந்த இரண்டு கட்சிகளும்தான் மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வருகின்றன. இவர்களை ஒருவருக்கு ஒருவர் பிடிக்காது என்ற சூழலில் பிஞ்சுகளின் எதிர்காலம் பாதிக்கும் பாடபுத்தக அரசியல் தேவைதானா?
பாடபுத்தகங்கள் தயாரிப்போரும் எழுதுவோரும் சிந்திக்கவேண்டிய விஷயம் இது! ஆட்சிக் கட்டிலில் இருப்போரை மகிழ்விக்க அவர்களின் படைப்புக்களை புத்தகத்தில் சேர்த்து புகழ்பாடி மகிழ்ந்து வருவதை நிறுத்த வேண்டும். அரசும் தங்கள் கட்சியினரை அல்லது கட்சி சார்புடையோரை பாடப்புத்தக தயாரிப்புக் குழுவில் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும். அத்துடன் தங்கள் படைப்புக்கள் வெளியாவதை அது தரமானதாக இருந்தால் கூட தவிர்க்க வேண்டும்
பண்டைய புறநானூறு அகநானூறு திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, கம்பராமாயணம், சிலப்பதிகாரம், போன்ற நூல்களில் இல்லாததையா இந்த மாமேதைகள் புகட்டி விடப் போகிறார்கள். தற்பெருமைக்காகவும் புகழுக்காகவும் தங்கள் படைப்புக்கள் பாடமாவதை பார்த்துக் கொண்டிருக்கும் அல்லது பாடமாவதை ஊக்குவிக்கும் அரசியல் வாதிகள் ஒழியும் வரை இந்த கூத்து இந்த தமிழகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கும்.
எனவே இனியாவது இந்த அரசியல் வாதிகள் பிள்ளைகள் நலன் கருதி (தங்கள் பிள்ளைகள் நலன் கருதி அல்ல)பாடம் எழுதுகிறேன் பேர்வழி என்றில்லாமல் அரசியலில் மட்டும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
இன்னும் என்னன்ன ஆகபோகுதோ...
ReplyDelete