குணம்! பாப்பா மலர்!
குணம்!
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியிருந்தான் குணசேகர். அவருடைய மனதில் மகனைப் பற்றிய கவலை அரித்துக் கொண்டிருந்தது. அப்படியென்ன கவலி என்கிறீர்களா? இப்பொழுதெல்லாம் அவர் மகன் ராஜா புதிய நண்பர்களோடுதான் சுற்றுகிறானாம். அந்த புதிய நண்பர்களோ ராஜாவின் குணத்திற்கு நேர் மாறானவர்கள். சினிமா, சூதாட்டம் பீடி, சிகரெட் என்று இருப்பவர்கள் வயதிலும் மூத்தவர்கள். எப்படியோ அவர்களுடன் ராஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டுவிட்டது.
அவர்களோடு சேர்ந்து ராஜாவும் மாறிவிட்டால்? பூவோடு சேர்ந்த நார்போல அவர்கள் மாறுகிறார்களோ இல்லையோ இவன் மாறிவிட்டால்? கூடாது இதை தடுத்தே ஆகவேண்டும். ஆனால் எப்படி புரியவைப்பது? யோசிக்கலானார்குணசேகர்.
பள்ளியிலிருந்து திரும்பியிருந்தான் ராஜா. ராஜா.. விளித்தார் குணசேகர்.
என்னப்பா? என்று கேட்டபடி வந்தான் ராஜா.
“நாம ரெண்டுபேரும் வெளியே போய் ரொம்ப நாள் ஆகிப்போச்சு இல்லே வாயேன் அப்படியே பஜார் வரை போய் வருவோம்”.
“சரிப்பா” இருவரும் கிளம்பினர்.
பஜாரில் சரியான கூட்டம். ஒரே தள்ளு முள்ளாய் இருந்தது. வீட்டுக்குத்தேவையான் சில பொருட்களை வாங்கிக் கொண்டு இருவரும் நடந்தனர். ரோட்டோரமாய் நிறைய பலகாரக்கடைகள் முளைத்திருந்தன. அவற்றிலும் கூட்டம் மொய்த்தது.
ராஜா! அதொ அந்த பலகாரக் கடையில போய் ஒரு பஜ்ஜி சாப்பிடலாமா? குணசேகர் கேட்க ராஜா முகம் சுளித்தான்.
“அப்பா! இந்த கடையிலையா? வேண்டாமே?”
“ஏம்ப்பா! இந்த கடைக்கு என்ன? நிறைய பேரு சாப்பிடறாங்க பாரு!”
“ இல்லேப்பா அங்க நிறைய கூட்டம் இருந்தாலும் அது சுகாதாரமில்லாத இடம்பா, எதோ ஜனங்க அறியாமையில இந்த கடையில பலகாரம் வாங்கி சாப்பிடறாங்க! அது அவங்க அறியாமை படிச்ச நாமே இங்க போய் சாப்பிடறது. வியாதியை விலை கொடுத்து வாங்கறதுக்கு சமம் அதனால வேண்டாம்பா!”
அப்ப சுத்தமான இடத்திலதான் பண்டம் வாங்கி சாப்பிடனும்!
“ஆமாம்பா அதுதான் உடம்புக்கு நல்லது சுகாதாரமும் கூட!”
“ஒரு பலகார விஷயத்தில இவ்வளவு பிடிவாதமா இருக்கற நீ பழகற நண்பர்கள் விஷயத்தில கோட்டை விட்டுட்டியே?”
“என்னப்பா சொல்றீங்க?”
“பலகாரம் ஒண்ணுதான் ஆனா அது தயாராகிற இடத்த பொறுத்துதான் அதன் மதிப்பு மாறுபடுது இல்லையா? அசுத்தமான இடத்தில தயாராகிற பண்டத்தை நீ விரும்பாத மாதிரி கெட்ட பசங்களோட பழகற உன்னை யார் விரும்புவாங்க யோசிச்சியா?”
“நீ நல்லவன் தான் இல்லேங்கல! ஆனா உன் கூட பழகறவங்களோட பழக்கவழக்கங்கள் சரியில்லையே நம்ம உறவுக்காரங்க அந்த பசங்களோட உன்னை பார்த்தா என்ன நினைப்பாங்க? நீ கெட்டுப் போகமாட்டேன்னு நான் நம்பலாம் உலகம் நம்புமா?”.
அப்பாவையே கண்கள் பணிக்க பார்த்துக் கொண்டிருந்தான் ராஜா!
“சேரிடம் அறிந்து சேர்னு ஒரு பழமொழியே இருக்கு, உன்னை பத்தி நல்லவனா கெட்டவனான்னு தெரிஞ்சுக்க உன் நண்பர்களைக் கொண்டுதான் தீர்மாணிப்பாங்க!அதனால நல்ல பலகாரங்களை தேர்ந்தெடுப்பது போல நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்”. முடித்தார் குணசேகர்.
“ அப்பா புரிஞ்சிடுச்சுப்பா!” இனி நான் நல்ல நண்பர்களோடுதான் பழகுவேன் என்றான் ராஜா.
மகனை நல்வழிப்படுத்திய மகிழ்வோடு அவனை அணைத்து தட்டிக்கொடுத்தார் குணசேகர்.
அறவுரை!
நான்மணிக்கடிகை!
நாற்ற முரைக்கும் மலருண்மை கூறிய
மாற்ற முரைக்கும் வினைநலந் தூக்கின்
அகம் பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம்
முகம்போல முன்னுரைப்ப தில்
-விளம்பி நாகனார்.
விளக்கம் மலர் இருப்பதனை அதன் மணமே புலப்படுத்தும் ஒருவன் செய்யும் செயலின் தன்மையை அவன் கூறிய சொல்லே தெரிவிக்கும். ஆராய்ந்து பார்த்தால் உள்ளத்தில் உள்ள தீமைகளை அவனது மனமே தெஇரிவிக்கும். ஒருவன் மனதில் உள்ளதை அவனது முகமே காட்டிக் கொடுத்து விடும்.
இதையும் தெரிஞ்சுக்கோங்க!
உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் பைபிள்.
தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தினை பதிவிட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
வணக்கம் அருமையான படைப்பு வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteமென்மேலும் சிறப்புற!..............