ஆவி அழைக்கிறது! பகுதி 13


ஆவி அழைக்கிறது!
                         பகுதி 13
                                   எழுதுபவர் “பிசாசு”

முன்கதை சுருக்கம் |  ஆழ்வார்குறிச்சியில் உள்ள தனது பங்களாவை சீரமைக்க முயலும் தனவேலை பொன்னம்மா எனும் ஆவி துன்புறுத்துகிறது. தனவேல் நம்பூதிரியை நாடுகிறார். அதே சமயம் அவரது மகள் நிதிலா வயல் வெளியில் நடந்து கொண்டிருக்கும்போது அவளை ஒரு கரம் பிடித்து இழுக்கிறது.
 இனி| வயல் வெளியில் நடந்து கொண்டிருந்த தன்னை ஒரு கரம் பின்னாலிருந்து இழுக்கவும் பயந்து “ஆ” என்று அலறிய நிதிலா சுதாரித்துக் கொண்டு இழுத்தது யார் என்று பார்த்தாள். அங்கே ஸ்ரீவத்ஸன் சிரித்தபடி நின்று கொண்டிருந்தான்.நிதிலா முறைத்தாள் அதோடு அடிக்கவும் கை ஓங்கினாள்.
     “ ஐயையோ ! பாவம்னு காப்பாத்துனாக்க உங்க ஊரில எல்லாம் நன்றிக்கு பதிலா அடிக்கத்தான் செய்வீங்களா?”
  “என்னது என்னை நீ காப்பாத்தினியா?”
“பின்னே நீங்க பாட்டுக்கு பராக்கு பாத்துகிட்டு போறதுக்கு இதென்ன உங்க டவுன் ரோடா அங்கேயும் கார் லாரின்னு இடிச்சிட்டு போயிடுவான். இங்கே பாம்பு தேள்னு நிறைய விஷப்பூச்சிங்க உலவும். அதோ முன்னாடிப் பாருங்க என்ன இருக்குதுன்னு!”
   நாகம் ஒன்று படமெடுத்து ஆடவும் அம்மாடி எவ்வளோ பெரிய பாம்பு என்று பின் வாங்கினாள் நிதிலா. பின்னர், ஏன் மிஸ்டர், குரல் கொடுக்கவேண்டியதுதானே? கையை பிடிச்சு இழுக்கணுமா? என்று மீண்டும் சண்டைக்கு தயாரானாள்.
“நான் கூப்பிட்டது உங்க காதுலயே விழலியே ஏதோ யோசனையா இல்ல எங்கேயோ பாத்தபடி இல்லே போயிட்டிருந்தீங்க நாலுதடவை கத்தியும் திரும்பாததாலேதான் கைப் பிடிச்சு தடுத்து நிறுத்தவேண்டியதா போச்சு! எனிவே ஐ,யம் சாரி!” என்றான் ஸ்ரீவத்ஸன்.
  அங்கே அறுவடை செய்து கொண்டிருந்த கும்பலும் ஆமாம்மா! தம்பி ரெண்டு மூணுதரம் குரல் கொடுத்திச்சி நீதான் கவனிக்கலை. இந்த மிஷின் சத்தத்தில கேட்கலையோ என்னமோ? என்று சொல்லவும் நிதிலாவுக்கு வெட்கமாக போனது.
தம்மீது குற்றம் வைத்துக்கொண்டு அவனை அடிக்க பாய்ந்தோமே என்று நாணியபடி, சாரி! நான் தான் கவனிக்காம அவசரப்பட்டுட்டேன் என்றாள்.
    இட்ஸ் ஒக்கே! தப்பு என் மேல கூடத்தான் திடு திப்புன்னு ஒரு பொண்ண புடிச்சு இழுத்தால் முத்தமா கிடைக்கும்? தர்ம அடிதான் கிடைக்கும்!பரவாயில்ல விடுங்க என்று நிலைமையை சகஜமாக்கினான் ஸ்ரீவத்சன்.
  “ ஆமாம் என்ன வயல் வெளிப்பக்கம் கிளம்பிட்டீங்க? அன்னிக்கு அந்த பங்களாவில பேய பாத்தா மாதிரி இங்க ஏதாவது பூதத்த பாக்கறதா உத்தேசமா?” ஸ்ரீவத்சன் கேட்க, “நீங்க இன்னும் நம்பலை இல்ல! நேத்துக் கூட அந்த பேய் அப்பாவை பயமுறுத்தி இருக்கு! அப்பா நம்பூதிரியை பார்க்கப் போய் இருக்கார்.” என்றாள் நிதிலா.
    “நீங்க எதுவேணா சொல்லுங்க இந்த இருபதாம் நூற்றாண்டில் கம்ப்யூட்டர் யுகத்தில போய் பேயி,பிசாசு, ஆவி அது இதுன்னு மட்டும் சொல்லாதீங்க! எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது”
  “நான் கூட நம்பாமத்தான் இருந்தேன் சென்னையில இருந்த வரைக்கும். இங்கே வந்தப்புறம் இங்க நடக்கக் கூடிய ஒவ்வொரு செயலும் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. எங்களோட பங்களாவில பேய் இருக்கோ இல்லையோ கண்டிப்பா ஏதோ ஒரு அமானுஷ்யமான சக்தி இருக்கு அதை நான் நம்பறேன்.”
 “ஒகே! அது உங்க நம்பிக்கை! இருந்துட்டு போகுது பகல் 11 மணி வேளையில தான் பாம்புங்க இந்த வெயில் சூட்டுக்கு வெளியே வரும் நாம் இங்கேய இருந்து அதுங்களை தரிசனம் பண்ணனுமா? அப்படியே பேசிகிட்டே போகலாமே?”
  “நிறைய விஷயம் தெரிஞ்சி வச்சிருக்கீங்க! ஆனா இந்த ஆவி மேட்டர் மட்டும் ஏன் உங்களுக்கு பிடிக்கலியோ தெரியலை?”
  “நான் நாத்திக வாதி இல்லே! ஆனா இந்த மாதிரி கண்மூடித்தனமான பழக்கவழக்கங்களுக்கு மட்டும் நான் எதிரி!”
  “ரொம்ப வித்தியாசமானவர்தான்!”
  இருவரும் சாலையை அடைந்து விட்டிருந்தனர்.ஒகே அப்புறம் பார்க்கலாம் என்று விடை பெற்றாள் நிதிலா.
 நம்பூதிரியின் இல்லம். தனவேல் முதலியார் வியர்த்துக் கொட்டகொட்ட தன்னுடைய முன்கதையை நம்பூதிரியிடம் சொல்ல அவன் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான். முதலியாரை பீதி கொள்ள வைத்தது அவன் சிரிப்பு. கதையை நிறுத்தினார்.பலே ஆளுய்யா நீர்! பெண்பாவம் பொல்லாதது! அதுதான் உன்னை பிடித்து வாட்டுது! அந்த பாவத்தை என்னால கரைக்க முடியும்னு தோணலை! நானும் ஏதாவது சின்ன விஷயமாத்தான் இருக்குமுன்னு நினைச்சேன். மனுசனாய்யா நீ! இப்படி பாவத்தின் மொத்த உருவமா இருக்கறீரே! என்றுகேட்டான் நம்பூதிரி.
   தனவேல் தலைகுனிந்தார். நம்பூதிரி நீதான் என்னை காப்பாத்தனும் என்று அவன் காலில் விழுந்தார். “யோவ்! எழுந்திருய்யா! என்ன மனுசன்யா நீ உன்னை நான் ரட்சித்தால் அந்த காளியே என்னை தண்டிக்கும். உன் முழுக்கதையும் கேட்டு எனக்கு பரிதாபமே வரலை. கோபம் தான் வருது.”
   “நம்பூதிரி நீங்க அப்படி சொல்ல கூடாது. வேற யாருக்குமே தெரியாத இந்த கதையை உங்களுக்கு சொல்லியிருக்கேன்னா நீங்க கட்டாயம் என்னை காப்பாத்துவீங்கன்னுதான்! உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லே என் வாயாலா உண்மையை வரவழைக்கணுமின்னு வரவழைச்சிட்டீங்க நீங்கதான் என்னை காக்கனும்” என்று மீண்டும் நம்பூதிரி காலில் விழுந்தார் தனவேல்.
  அப்போது அங்கு எரிந்து கொண்டிருந்த குத்து விளக்குகள் அணைந்தன. இருள் சூழ ஒரு மல்லிகை வாசம் அறையை சூழ்ந்தது. சற்றைக்கெல்லாம் “ஹா!ஹா!” வென ஒர் பேய் சிரிப்பொலி அறையில் எழுந்தது. சிரிப்பொலி அடங்கியதும் நம்பூதிரி கேட்டான். வந்திருப்பது பொன்னம்மா தானே!
   மீண்டும் சிரித்தது குரல்! “நம்பூதிரி கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே! நான் பொன்னம்மா தான் இந்த விஷயத்தில நீ தலையிடாதே!ஒதுங்கிடு இவன் என்ன கெஞ்சினாலும் மசியாதே! மீறி ஏதாவது செய்தே! ம்ம்! செய்ய மாட்டே!” என்று அறை அதிரும்படி சிரித்த குரல் தேய்ந்து மறைந்தது.
  தனவேல் மட்டுமல்ல நம்பூதிரியும் சற்று மிரண்டுதான் போனான். “ஒய் முதலியார் வாள்! இதில் யான் செய்ய ஒன்றுமில்லை! நடந்ததை பார்த்தீர் தானே! இனி யான் உபாசிக்கும் அந்த மாகாளி உம்மை ரட்சித்தாள் தான் உண்டு.” என்று கைவிரித்தான் நம்பூதிரி.தனவேலின் முகம் வெளுத்தது.
  அன்றைய இரவு தனவேலுக்கு தூக்கம் பிடிக்கவில்லை! இப்படியும் அப்படியுமாக உலாவினார். நிதிலா, தந்தையை அழைத்தாள் ஏம்ப்பா சுத்தி சுத்தி வர்ரீங்க மணி 11ன்னாக போகுது வாங்க படுக்கலாம்? ஆமாம் உங்க நம்பூதிரி என்ன சொன்னான்?
   “இல்லேம்மா! அந்த ஆவியை நினைச்சா பயமா இருக்கு!”
  “அதான் அந்த நம்பூதிரி தந்த ரட்சை இருக்கு இல்ல?”
 “அது இனிமே பயன் படாதும்மா!”
  “ஏன் என்னாச்சுப்பா?”
  “அந்த நம்பூதிரி கை விரிச்சுட்டான்மா!”
நிதிலா திடுக்கிட்டாள். நம்பூதிரி விலகி விட்டானா? ஏன்? அப்பா அந்த ஆவி நம்ம வீட்டு வேலைக்காரின்னு சொன்னீங்க? ஆனா அது ஏன் நம்மளை பழி வாங்கணும்?
  அதை நான் சொல்றேன் மகளே? என்று குரல் கேட்க  யா.. யார் அது?
 நான் தான் மகளே உன் அம்மா ! பயப்படாதே ! கதவை திறந்திகிட்டு வெளியே வா நான் உங்கூட பேசனும் என்றது குரல்.
 நிதிலா சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல நடந்து கதவைத்திறந்தாள். தனவேல் செய்வதறியாது தவிக்க வா! மகளே வா! என வெள்ளையாய ஒர் பெண்ணுருவம் நிதிலாவை அழைத்தது வெளியே!  அழைக்கும்(13)

 
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை பகிர்ந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2