''அப்படிப் பேசு சபாஷு''... விஜயகாந்த்தை வியக்க வைத்த சிறுவன்!

புதுக்கோட்டை: பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நரம்பு புடைக்க உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டிருந்தபோது பத்து வயது சிறுவன் ஒருவன் சரியான கேள்வி, அப்படியே கேளு என்று சத்தமாக பேசி விஜயகாந்த்தைப் பார்த்து பாராட்டியதால் விஜயகாந்த் ஆச்சரியமடைந்து சில நிமிடங்களுக்கு தனது பேச்சை நிறுத்தி விட்டு அந்த சிறுவனையே சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார் விஜயகாந்த். தேமுதிக வேட்பாளர் ஜாகிர் உசேனை ஆதரித்து அவர் நேற்று இரவு அவர் பிரசாரம் செய்தார்.
அப்போது பால் விலை, பஸ் கட்டண உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு குறித்து அவர் மக்களைப் பார்த்து கேள்வி கேட்டபடி பேசினர். அப்போது சரியான கேள்வி, அப்படித்தான் கேட்கணும், அப்படியே கேளு என்று ஒரு குரல் திடீரென கேட்டது. இதைக் கேட்டு அனைவரும் யாரப்பா அது என்று திரும்பித் திரும்பிப் பார்த்தனர்.
அப்போது விஜயகாந்த் வேன் நின்றிருந்த இடத்திற்கு அருகே இருந்த ஒரு ஓட்டு வீட்டின் உச்சியில் ஒரு பத்து வயது சிறுவன் உட்கார்ந்திருந்தான். அவன்தான் அப்படி சத்தமாக பேசியது. இதைப் பார்த்து விஜயகாந்த்தின் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸார், சிறுவனை கீழே இறங்குமாறு கூறினர்.
ஆனால் சிறுவன் இறங்கவில்ல. அப்போது விஜயகாந்த்தும் அந்த சிறுவனைப் பார்த்தார். அதைப் பார்த்த சிறுவன், சரியாத்தான் பேசுறீங்க, சரியாத்தான் கேக்குறீங்க, அப்படியே பேசுங்க என்று படு தில்லாக கூறியதால் விஜயகாந்த் வியப்படைந்து பேச்சை நிறுத்தி விட்டார்.
அப்போது போலீஸார் மீண்டும் சிறுவனை கீழே இறங்குமாறு கூறியபோது, இது என்னோட வீடு, எப்ப இறங்கனும்னு எனக்குத் தெரியும் என்று படு துணிச்சலாக பதிலளித்தான். அத்தோடு நில்லாமல் அதே வேகத்தில் விஜயகாந்த் பக்கம் திரும்பி, நீங்க தொடர்ந்து பேசுங்க என்றும் உத்தரவிடுவது போல கூறவே விஜயகாந்த் சிரித்து விட்டார். பிறகு மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்தார்.
சங்கரன்கோவில் பிரசாரத்திற்குப் போனபோது ஒரு விவசாயி, விஜயகாந்த்துடன் சண்டைக்குப் போனது நினைவிருக்கலாம். ஆனால் புதுக்கோட்டையில் ஒரு சிறுவன் விஜயகாந்த் பேச்சை பலமாக பாராட்டிப் பேசி அனைவரையும் அசர வைத்தது குறிப்பிடத்தக்கது.

டிஸ்கி}  பத்து வயது சிறுவன் தேர்தலில் வாக்களிக்க இயலாது என்றாலும் இன்றைய சிறுவர்கள் நாளைய மனிதர்கள் என்ற வகையிலும் மக்கள் இந்த ஆட்சி மீது கொண்டுள்ள சிறு வெறுப்பு வெளிப்பட்டுள்ளது. இது ஆட்சியாளருக்கான எச்சரிக்கை மணி ஆகும். ஆட்சியில் அமர்ந்து விட்டோம் ஐந்துவருடங்களுக்கு அசைக்க முடியாது என்று தன்னிச்சையாக எதேச்சாதிகார போக்கில் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். மக்கள் நல அரசாக அமைந்தால்தான் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கமெண்ட்களை அள்ளி வீசுங்கள்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2