மஹியின் மரணமும் மனதில் எழுந்த கேள்விகளும்!

மஹியின் மரணமும் மனதில் எழுந்த கேள்விகளும்!

 ஹரியானாவைச் சேர்ந்த நாலுவயது சிறுமி மஹி ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்து போனதை நேற்று படித்திருப்பீர்கள். ஏதோ ஒரு செய்தி என்று வழக்கம் போல பணியாற்றிக் கொண்டிருப்பீர்கள். ஆனால் என்னால் அவ்வாறு இருக்க முடியவில்லை! மஹியின் அந்த முகம் இன்னும் என்னுள் ஏதோ ஒரு சொல்லவொனா துயரத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறது. இது மாதிரி வருடம் தோறும் நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த சமயத்தில் மீடியாக்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிடுவதும் மீட்பு குழு வந்து மீட்க போராடுவதும் என்று நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்த சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டுள்ளன. பயன்படுத்தாத ஆழ்துளை கிணறுகளை மூடினால் என்ன? அல்லது அந்த கிணறுகளை குழந்தைகள் நெருங்காவண்ணம் தடுப்பு சுவர் அமைத்தால் என்ன? இதில் முக்கியமான இன்னொரு விஷயம்! குழந்தையை இழந்த தாய் மீட்பு குழுவை குறை கூறுவது! பெற்றவளுக்கு இல்லாத அக்கறை மீட்புக் குழுவிற்கு எப்படி வரும். குழந்தை விளையாடினால் கூடவே இருந்து கண்கானிக்க வேண்டாமா? அதை விடுத்து இவர்கள்சரியில்லை! அவர்கள் சரியில்லை என்று பிறர்மீது குற்றம் சுமத்துவது ஏன்? குழியில் விழுந்த அந்த பிஞ்சு தனது இறுதி மூச்சை எப்படி விட்டிருக்கும் துடியாய் துடித்திருக்குமே? பொது ஜனங்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் இப்படி ஆழ்துளை கிணறுகளை மூடாமல் வைத்திருப்பது ஏன்? இன்னும் எத்தனை குழந்தைகளை பலிவாங்க காத்திருக்கிறது இந்த ஆழ்துளை கிணறுகள்? இதற்கெல்லாம் பதில் காலம்தான் சொல்ல வேண்டும்.

குறில் நெடில் தெரியாத ஆசிரியர்கள்!

   ஒரு காலத்தில் ஆசிரியர்கள் என்றாலே மிகுந்த மரியாதை இருந்தது. அந்த காலத்தில் பத்தாம் வகுப்பு முடித்து டீச்சர் ட்ரெயினிங்க் முடித்தாலே ஆசிரியர் பணி கிடைத்தது. பத்தாவது மட்டுமே படித்திருந்தாலும் ஆசிரியர்கள் திறமையானவர்களாக இருந்தனர். சிறப்பாக போதித்தனர். இப்போது ஒரு செய்தி நேற்று படித்தேன்.எஸ்.எஸ்.ஏ என்று ஒரு திட்டம் அந்த திட்டம் புதிய சமச்சீர் கல்வி வகுப்புகளை எடுப்பதற்கு ஆசிரியர்களுக்கு போதிக்கிறது. அப்படி அதில் பயிற்சி எடுக்க வரும் ஆசிரியர்களுக்கு  குறில்,நெடில் தெரியவில்லையாம்! வெர்ப் நவுன் தெரியவில்லையாம். ஆனால் ஆசிரியர்களாம்! எப்படி போகிறது பாருங்கள் நம்ம நிலைமை! இதற்கெல்லாம் காரணம் புற்றீசல் போல பரவிய ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்தான்! பணம் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற நிலை. கல்வி வியாபாரம் ஆகிய நிலையில் இந்த மாதிரி அழுகல்களை சகித்துக் கொள்ள வேண்டியது தான்!

குப்பைத் தொட்டியில் ரூபாய் நோட்டுகள்!

திருச்சி உறையூர் பகுதியில் ஒரு குப்பைத்தொட்டியில்  இரண்டு பிளாஸ்டிக் கவர்களில் கிழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் கிடந்தனவாம். எந்த புண்ணியவான் கள்ளப் பணத்தை இப்படி கிழித்து வீசினானோ எல்லாம் ஆயிரம் ஐநூறு ரூபாய் நோட்டுகளாம். குப்பை பொறுக்க வந்தவர்கள் பார்த்து போலிஸுக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் வந்து நல்ல பணம்தான் என்று உறுதி செய்துள்ளனர். கிழிக்காமல் போட்டிருந்தாலாவது ஏதாவது ஏழைபாழைகள் திடீர் பணக்காரர்களாகி சிலகாலம் சிறப்பாக வாழ்ந்திருப்பார்கள். இல்லை அவர்களே ஏதாவது அமைப்புகளுக்கோ இல்லாதவர்களுக்கோ ரூபாயை பிரித்துக் கொடுத்து இருக்கலாம். சுமார் மூன்று லட்சம் ரூபாய் கிழிந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. கிழித்தவர்களுக்கு இது சிறிய தொகையாக இருக்கலாம். ஆனால் எத்தனையோ பேருக்கு அதுபெரிய தொகையாகும். சட்டப்படி ரூபாய் நோட்டில் கிறுக்குவதும் கிழிப்பதும் குற்றமாகும். குற்றச் செயல் புரிந்தவர்களை போலீஸ் தேடுகிறதாம். தேடிக் கோண்டே இருக்கட்டும்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2