திருந்தாத டீச்சரால் உயிரிழந்த மாணவி!

ஆசிரியர்களே திருந்துங்கள்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் படித்த நாளிதழ் செய்தி இந்த பதிவை எழுத தூண்டியது.நாளிதழில் சிறு பத்தியில் வந்த செய்தி என்றாலும் இது சிந்திக்க வேண்டிய ஒன்று. அதுவும் ஆசிரியர்களை பற்றிய ஒன்று. சென்னையில் ஒரு பள்ளி மாணவி ஆசிரியையின் வற்புறுத்தலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட செய்தி அது. மிகவும் நன்றாக படிக்க கூடிய அந்த மாணவி ஏன் தற்கொலை செய்து கொண்டாள்? ஒரு பக்கம் ஆசிரையை, மறுபக்கம் அம்மா! இருவருக்கும்பதில் சொல்ல முடியாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டது அந்த இளம் பிஞ்சு! அப்படி என்ன நெருக்கடி! எல்லாம் வழக்கமாக ஆசிரியர்கள் பண்ணுவதுதான்!
     அந்த ஆசிரியையின் வீடு அதே ஊரிலேயே அந்த மாணவியின் தெருவில் இருந்துள்ளது. பள்ளிக்கு வந்த மாணவியை தன் வீட்டிற்கு தினமும் மதிய வேளையில் அனுப்பி தனக்கு சாப்பாடு எடுத்துவரச் சொல்லி இருக்கிறார் அந்த ஆசிரியை. மாணவியும் மறுக்காமல் செய்து வந்தாள். ஒரு நாள் இதை மாணவியின் தாய் பார்த்து விவரம் கேட்டிருக்கிறாள். மாணவியும் ஆசிரியை சோறு எடுத்து வரச் சொன்னதாக தன் தாயிடம் தெரிவித்து இருக்கிறாள். உடனே அந்த தாய் இதென்ன வேலை! நாளையில் இருந்து இதை செய்ய முடியாது என்று தெரிவித்து விடு என்று கூறியுள்ளார்.
மாணவியும் தாய் சொன்னதை ஆசிரியையிடம் சொல்ல, அவரோ நீ சாப்பாடு எடுத்து வராவிட்டால் உன்னை வெளியில் நிற்க வைத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஒரு சமயம் அப்படியும் செய்து விட்டார். அத்துடன் தேர்வில் பெயில் ஆக்கிவிடுவேன் என்றும் சொல்லியுள்ளார். வீட்டில் அம்மா செய்யாதே என்கிறார்! ஆசிரியர் செய்யாவிட்டால் பெயில் ஆக்கிவிடுவதாக கூறுகிறார். மனமுடைந்த சிறுமி மரணத்தை தழுவி விட்டாள். இப்போது விசாரணை நடந்து வருகிறது.
    இது எல்லா ஆசிரியர்களும் செய்வது இல்லை என்றாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் இந்த  மாதிரி வேலைகளை மாணவர்களிடம் சுமத்தத்தான் செய்கின்றனர். ஆசிரியர்கள் குருதான்! ஆனால் இன்று குருகுல முறையில் கல்வி கற்பது இல்லையே! மாணவர்களிடம் பணிவிடையை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அன்போடு கேட்டு பெறுவது அதைவிட்டு மிரட்டி சாதிக்க வேண்டுமா?
     படிக்கிற வயதில் டாய்லெட் கழுவ விடுவது! வெளியில் அனுப்பி சிகரெட், டீ போன்றவற்றை வாங்கி வரச் செய்வது சாப்பிட்ட டிபன் பாக்ஸை கழுவச் சொல்வது போன்ற வேலைகளை மாணவர்களிடம் ஏன் செய்யச் சொல்லவேண்டும்? மாணவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே இப்படி நடந்து கொள்ளலாமா?
   இந்த மாதிரியும் அல்லாமல் இன்னும் கேவலமாக சிலர் நடந்து கொள்கின்றனர். அதுதான் பாலியல் தொல்லை கொடுப்பது! இந்த மாதிரி செய்திகளை இப்போது அடிக்கடி செய்தித்தாள்களில் பார்க்கிறோம். இவர் இந்த மாணவியிடம் இப்படி நடந்து கொண்டார். அவர் அப்படி நடந்து கொண்டார் என்று படிக்கவே அசிங்கமாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் எப்படி ஆசிரியர்கள் ஆனார்கள். சில மாதங்களுக்கு முன் பிளஸ் ஒன் மாணவனுடன் ஒரு ஆசிரியை ஓடியதாக ஒரு தகவல் வந்தது. இதெல்லாம் எப்படி?
    ஆசிரியர் தொழில் கண்ணியமானது! மற்றவர்கள் மதிக்கும் படியான ஒரு தொழில்! இந்த தொழிலில் இருப்பவர்களின் இக்கால செயல்கள் அந்த தொழிலையே அசிங்க படுத்துவதாக அமைந்து விடுகிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன? இவர்களைஎல்லாம் எப்படி ஆசிரியர்களாக நியமித்தார்கள். இவர்களுக்கு போதுமான மனவளர் பயிற்சி முறைகள் அளிக்காததுதான் காரணமாக எனக்குத் தோன்றுகிறது.
   கடைசியாக இன்னுமொரு செய்தி இப்போதைய ஆசிரிய பெருமக்களுக்கு குறில் நெடில் கூடத் தெரியவில்லையாம்! வெர்ப் எது நவுன் எது என்றும் புரியவில்லையாம்? இவர்களிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்ன? அது குறித்து அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. காசு வாங்கிக் கொண்டு ஆசிரியர்களை நியமிக்கும் வரையில் இது போன்ற அநாகரிகங்களும் கேவலங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும்.
  ஆசிரியப் பணி புனிதமானது! உங்களைத்தான் மாணவர்கள் பின்பற்றப் போகின்றனர். ஆசிரியர்களே திருந்துங்கள்! புதிய சமுதாயம் சிறப்பாக உருவாக ஒத்துழையுங்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2