இன்று சனி மகா பிரதோஷம்! நத்தம் வாலீஸ்வரர் சிறப்பு தரிசனம்!


இன்று சனி மகா பிரதோஷம்! நத்தம் வாலீஸ்வரர் சிறப்பு தரிசனம்!

கிருஷ்ண பட்ச திரயோதசி சனிக் கிழமைகளில் வரும்பொழுது சிவாலயங்களில் சனி மகா பிரதோஷமாக கொண்டாடப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில் அமுதம் கடையும் போது முதலில் வந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உட்கொண்ட போது உடனிருந்த உமை தொண்டையை பிடித்தார். அதனால் விஷம் உள் இறங்காமல் நெஞ்சுக்குழியோடு நின்று போனது. சிவனும் திருநீலகண்டன் ஆனார்.
      இவ்வாறு சிவன் விஷத்தை உண்ட காலமே பிரதோஷ காலம் என்று அனுசரிக்கப்படுகிறது. சிவன் தேவர்களை காக்க விஷத்தை உண்ட போது  தேவர்கள் அந்த விஷத்தின் வெப்பம் தாளாது இப்படியும் அப்படியுமாக ஓடினார்கள். அதுவே சோமசூக்த பிரதட்சணமாக அனுசரிக்கப்படுகிறது. விஷம் உண்ட இறைவன் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நடனம் ஆடினார். எனவேதான் பிரதோஷ காலத்தில் நந்திக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது. பிரதோஷ வேளையில் மற்ற தெய்வங்களும் சிவாலயத்தில் கூடுவதால் வேறு ஆலயங்களில் வழிபாடு நடத்துதல் உத்தமம் அல்ல.
     செங்குன்றம் அடுத்த பஞ்செட்டி அருகில் இகனைப்பாக்கம் என்று வழங்கிய நத்தம் கிராமத்தில் ஸ்ரீ வாலீஸ்வரர் ஆனந்தவல்லி அம்பிகையுடன் அருள் பாலிக்கிறார். இவரது ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு நடத்துவதால் சுருட்டபள்ளி ஆலயத்தில் பிரதோஷ தரிசனத்தின் மும்மடங்கு பலன் கிடைக்குமென ஆலய ஸ்தல புராணம் கூறுகிறது.
      ஆனந்த வல்லி அம்பிகை தன் பக்தனை தீண்ட வந்த பாம்பை தடுக்கிறார். சீற்றம் கொண்ட பாம்பு அன்னையையே தீண்டி விடுகிறது. அன்னை மூர்ச்சை அடைகிறார். பாம்பு தீண்டிய விஷத்தினை போக்க இங்குள்ள இறைவனை அல்லி மலர்களால் அர்ச்சித்து வழிபடுகிறார். இறைவனும் அம்பிகையின் விஷத்தை ஏற்றுக்கொண்டு அம்பிகைக்கு அருள் பாலிக்கிறார். அம்பிகை ஆனந்தமடைகிறாள்.
   விஷத்தை ஏற்றுக் கொண்ட மூர்த்தம் ஆதலால் சுவாமி கருமையாக காட்சி அளிக்கிறார். சுத்தமான பாலால் அபிஷேகம் செய்யும் போது கருநீலமாக பால் வடியும் காட்சி தெரியும். இவர் ராகு தோஷம் சர்ப்ப தோஷம் போக்கும் கருணா மூர்த்தி! இந்த ஆலயமும் சித்தர் வழிபாட்டினை பெற்றுள்ள ஆலயங்களுள் ஒன்று.
    சிவபெருமான் விஷம் ஏற்றுக் கொண்ட காலமே பிரதோஷம். இங்குள்ள இறைவனும் விஷத்தை ஏற்று அம்பிகையை காத்தவர். எனவே பிரதோஷ காலத்தில் இவ்விறைவனை வழிபட்டு வாழ்வில் வளம் சேர்ப்போமாக!
    ஆலயத்திற்கு செல்லும் வழி!  செங்குன்றம் ரெட் ஹில்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி கும்முடிபூண்டி செல்லும் பேருந்துகளில் ஏறி பன்செட்டி என்னுமிடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே பிரியும் சாலையில் இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் நத்தம் கிராமம் வாலீஸ்வரர்ஆலயம் உள்ளது.
   பஸ்ரூட்: 558, 558பி, 557, 547, 58சி, 58கே, 112, 512, 533.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2