விஜயகாந்தை சீண்டும் தினமலர்!
இன்றைய தினமலரில் விஜயகாந்தை கிண்டலடித்து ஒரு வாசகம்
இடம் பெற்று இருந்தது எனக்கு நெருடலாக தென்பட்டது. பத்திரிக்கைகள் பிரபலமடைய
என்னவெல்லாம் செய்கின்றன. இதே போன்ற ஒரு கருத்து தினமலர் மாதிரியான ஏடுகளில்
வருவது அவ்விதழின் வாசகர்களை முகம் சுளிக்கவே செய்யும் என்பதை தினமலர் உணராதது
வருத்தம் அளிக்கிறது. இத்தனைக்கும் நான் தினமலரின் 25 ஆண்டுகால வாசகன். அன்றைய
தினமலருக்கும் இன்றைய தினமலருக்கும் எவ்வளவோ மாற்றங்கள்! மாற்றங்கள் வரவேற்க
கூடியவைதான்! ஆனால் நியாயமான போராட்டங்களுக்கு கைகொடுக்கவேண்டிய தினமலர் தனி மனித
ஆராதனை தூஷிப்புக்களில் இறங்கி விட்டது வேதனையான செயல்!
அப்படி என்னதான்
செய்து விட்டது தினமலர்? இன்றைய தினமலரில் தலைவர்களின் பேச்சு பேட்டி அறிக்கையில்
விஜயகாந்தின் கார்டூனோடு அவரது அறிக்கை இடம் பெற்றுள்ளது.அந்த அறிக்கை, ஆண்கள்
குடிக்க ‘டாஸ்மாக்’ கடைகளை திறந்துவிட்டு, வீடுகளில் பெண்களுக்கு இலவசப் பொருட்களை
வழங்குகின்றனர். வேருக்கு விஷமும் இலைக்கு தண்ணீரும் ஊற்றுகின்றனர். என்ற
அறிக்கையினை வெளியிட்டு கீழே ஆண்கள் மது குடிப்பதை விஷத்திற்கு இணையாக ஒப்பிடும்,
‘தெளிந்த நிலையில்’ உள்ள தே,மு,தி,க
தலைவர் விஜயகாந்த் பேச்சு என்று நக்கல் அடித்திருக்கிறது தினமலர். விஜயகாந்த் பற்றிய செய்தி லிங்க் கீழே http://www.dinamalar.com/splpart_detail.asp?id=96
இதன்
மூலம் தினமலர் சொல்ல வருவது என்ன? விஜயகாந்த் இதுவரை குழம்பிக்கிடந்து இப்போதுதான்
தெளிந்து உள்ளாரா? இல்லை அவர் எப்போதும் போதையில் மிதந்து கொண்டிருப்பார் என்று
சொல்லாமல் சொல்கிறதா? இதே தினமலர்தான் விஜயகாந்தை தூக்கிவைத்து கொண்டாடியது ஆட்சி
மாற்றத்திற்கு முன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அவர்கூட்டணியை விட்டு முறிந்ததும்
அவரை பற்றி தொடர்ந்து இழிவான செய்திகளை வெளியிட்டு வருவதை அதன் வாசகர்கள்
அறிவார்கள்.
விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இருக்கும் வரை நல்ல பிள்ளை! இப்போது கெட்டப்
பிள்ளையா? இன்றைக்கு அரசியலில் திமுக அதிமுகவிற்கு மாற்றாக அவரை பெரும்பாலோர்
கருதுகின்றனர். ஆனால் இந்த இரு பெரும் முதலைகளுடன் மோதும் அளவிற்கு அவருக்கு
தற்சமயம் வலு இல்லை. அதனால் இந்த கட்சிகளில் ஏதாவது ஒன்றின் முதுகில் ஏறி கட்சியை
வளர்க்க நினைத்தார். இதில் தவறு ஏதும் இருப்பதாக தோன்றவில்லை! எல்லோராலும்
எம்.ஜி.ஆர் போல கட்சிதுவக்கியதுமே ஆட்சியை பிடிக்க முடியுமா?
தமிழகத்தில் ராமதாஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும் குறைந்தளவு வாக்குகள்
உள்ள கட்சிகள் தங்கள் நிலையை இந்த இருபெரும் கட்சிகளுடன் கூட்டணி வைத்தே
வளர்த்துக் கொண்டன.
பா.ம.க கூட
எட்டாத எதிர் கட்சி அந்தஸ்தை தே.மு.தி.க பெற்றிருப்பது என்னதான் அதிமுக
கூட்டணியால் வந்த வெற்றி என்றாலும், அதற்கென்று ஒரு செல்வாக்கு இருப்பதையும்
மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் அதன் பக்கம் இருக்கிறார்கள் என்பதையும்
காட்டுகிறது.
அதற்காக
விஜயகாந்த் சட்டசபையில் நடந்து கொண்ட முறை சரியென சொல்லவில்லை! ஆனால் கூட்டணி
முறிவிற்கு பின் ஒரு எதிர்கட்சியாக தன் பணிகளை செவ்வனே செய்து வருகிறது
தே.மு.தி.க. அரசுக்கு எதிராக ஆர்பாட்டங்கள். தொகுதிகளில் குறைதீர்ப்பு கூட்டங்கள்
என்று நடத்தி தன்னை ஒரு பொறுப்பான எதிர்கட்சியாக காட்டிவருகிறது.
இப்போதைய
அரசு திமுகவை கண்டு பயப்பட வில்லை! திமுக தான் பயந்து தேர்தலில் போட்டியிடாமல்
ஒதுங்கி விட்டது. திராணியிருக்கிறதா என்று கேட்ட சவாலை ஏற்று தோற்றாலும்
போட்டியிட்டு சில ஆயிரம் வாக்காளர்கள் எனக்கு உண்டு என்று நிரூபித்த தே.மு.தி.க
இப்போது புதுக் கோட்டையிலும் களம் இறங்குகிறது. இதன் மூலம் ஆளுங்கட்சிக்கு சவால்
விட்டுள்ளது.
இப்படி ஒரு
பொறுப்புமிக்க எதிர்கட்சி தலைவரை இகழும் விதமாக இப்படி நக்கல் செய்வது தினமலருக்கு
தேவையா? கட்சி தலைவர்கள் எல்லோரும் யோக்கியமானவர்கள்தானா? அவர்கள் அந்தரங்கத்தை
எல்லாம் தினமலர் தோண்டுமா? சசியை ஜே
சேர்த்துக் கொண்டதை எல்லாம் ஆராயாமல் கண்ட மேனிக்கு விஜயகாந்தை கேலி செய்வது
தினமலருக்கு அழகல்ல!
கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் இப்போது கிண்டலடிக்கும் தினமலர் ஒரு
காலத்தில் புகழ் பாடியது. அதே போலவே ஜேவையும் ஒருகாலத்தில் இகழ்ந்து பின் துதி
பாடியது. அதே போல் விஜயகாந்தையும் புகழும் நாள் விரைவில் வரும் என்றே
எதிர்பார்க்கிறேன்!
தலைவர்களை
வேண்டுமென்றே இந்த மாதிரி நக்கலடிக்கும் செயல்களை தவிர்த்து நடுநிலையோடு செய்திகளை
வெளியிட தினமலர் முன் வரவேண்டும் அப்போது தான் அதன் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்
என்பது என் போன்ற அதன் வாசகர்களின் கருத்து. மாறுமா தினமலர்? காத்திருப்போம்!
Comments
Post a Comment