நெல்லையில் நித்தி நடத்திய யாகம்! கலக்கல் கதம்பம்!

நெல்லையில் நித்தி நடத்திய யாகம்!

தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து விடுபடவும் போலீஸ் நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நித்தியானந்தா தனது சீடர்கள் மூலம்  ரகசிய யாகம், வழிபாடு செய்து வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. சிதம்பரம் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழாவில் இந்த ரகசிய யாகத்தை உச்சிகால பூஜைக்கு முன்பாக சிவாச்சார்யார்களை கொண்டு நித்தியின் சீடர்கள் செய்ததாக வதந்தி பரவி வருகிறது. இதற்காக பட்டு வஸ்திரங்களும் நிறைய பூக்களும் தருவிக்கப்பட்டதாகவும் பூஜைக்கான நைவேத்தியங்கள் வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிர்வாக அதிகாரியோ பட்டு வஸ்திரங்கள்  சார்த்த மும்பை பெரிய தொழில் அதிபர் பெயரில் அனுமதி வாங்கப்பட்டது. நித்தியானந்தாவுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது என்கிறார். இது குறித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
     இங்கே என் கேள்வி} நித்தியானந்தா ஒரு திருட்டு ஆசாமி என்று எல்லோரும் சொல்லி வரும் வேளையில் இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் கோவில் அர்ச்சகர்கள் செய்தது நியாயமா? ஒரு திருடனுக்கு இந்தமாதிரி இவர்கள் உதவுவார்களா? பணம் கிடைக்கிறது என்பதற்காக இந்த மாதிரி செயல்களில் இறங்கலாமா? கோவில் நிர்வாகத்திற்கு இது தெரியாமலா இருக்கும்?  ஆயிரம் யாகம் செய்தாலும் அவனது விதியை வெல்ல முடியுமா? தெய்வம் நின்று கொல்லும் பெண்பாவம் சும்மா விடாது நித்தியானந்தா!
  கொசுறு செய்தி!
         கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நெல்லை வந்த நித்தியானந்தா நெல்லையப்பரை  தரிசித்து விட்டு பிரகாரவலம் வந்த போது குபேர லிங்கத்தை தரிசித்துவிட்டு இங்குதான் சான்னித்தியம் இருக்கிறது. அங்கு நெல்லையப்பரை இல்லை என்று கூறியுள்ளார். இதனால் நெல்லையப்பர் நித்தியானந்தா மேல் கோபமாக இருப்பதாகவும் ஒரு கேரளா ஜோசியர் இதைக் கண்டறிந்து நெல்லையப்பரை குளிர்விக்க பிராயசித்தம் செய்யும்படி அறிவுறுத்தியதாகவும் அதனால் யாகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

டிஸ்கி} சாமியாருக்கே ஒரு சாமியார் அறிவுரை தேவைப்படுது! நித்தி கதவை திற காற்று வரும் என்றார்! இவர் வீட்டு கதவை திறந்து வைத்ததால்  கோர்ட்டு கேசு எல்லாம் வந்து விட்டது!  வாழ்க போலி சாமியார்களும் அவரை நம்பும் கூட்டங்களும்! 

 வெல்கம்பேக் டூ யுவராஜ்!

உலக கோப்பை நாயகன் யுவி! வெற்றிகரமாய் புற்று நோயை வென்று காட்டியிருக்கிறார். இந்திய அணியின் வெற்றிகரமான ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங் திடீரென நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். வெளிநாடு சென்று இரண்டு மாதங்கள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் வெற்றி கரமாக நோயை வென்று தனது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். நோயிலிருந்து மீண்ட அவர் இப்போதுதான் வலைப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்து உள்ளார். விரைவில் இந்திய அணிக்காக ஆட வரலாம். இதற்கிடையில் அவர் தனது சகா விராத் கோஹ்லியுடன் இணைந்து இந்தி சினிமா ஒன்றிற்கு சென்று வந்துள்ளார்.
இது குறித்து யுவராஜ் சிங் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
இப்போது தான் கேங்ஸ் ஆப் வேஸிபர் என்ற இந்தி சினிமாவை பார்த்துவிட்டு வந்தோம். என்னுடன் வந்த விராத் கோஹ்லியும், பிரவீண் குமாரும், சினிமா காட்சிகளை ரசித்து பார்த்தனர்.
சினிமாவில் வரும் நடிகர் மனோஜ் பஜ்பாய் சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் அவருக்கு சினிமாவில் மீண்டும் ஒரு சிறப்பான இடத்தை பெற்று தர உதவும். அதேபோல நானும் இந்திய அணிக்கு மீண்டும் விரைவில் திரும்புவேன் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூரில் பயிற்சியின் இடையே பேசிய யுவராஜ் சிங், தற்போது உடல்நிலை தேறி வரும் நான், இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பையில் கலந்து கொள்ள இலக்கு நிர்ணயித்து உள்ளேன் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் யுவராஜ்!

அடுத்த படம் இயக்க ரெடி ஐஸ்வர்யா!

கொலவெறி புகழ் ஐஸ்வர்யா அடுத்த படத்தை இயக்க  கைவசம் இரண்டு கதைகள் இருப்பதாக தெரிவித்து உள்ளார். அவரது மூனு படம் சிறந்த இயக்குனர் விருதை பெற்று தந்தாலும் வியாபார ரீதியாக பெரிய  ஹிட் அடிக்கவில்லை இருந்த போதிலும் அடுத்த படம் இயக்க ஆர்வமாக உள்ளார் ஐஸ்வர்யா! அதில் ஒன்று குழந்தைகள் படமாம்.
இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், "அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளேன். இரண்டு கதைகள் எழுதி உள்ளேன். ஒன்று பெரிய நடிகர்களை வைத்து எடுக்கபோகிற படத்துக்கானது. இன்னொன்று குழந்தைகளுக்கானது.
இதில் எந்த படத்தை முதலில் எடுப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் நடிகர்களிடம் பேசி வருகிறோம். இந்தப் படத்தை நானே தயாரிக்கப் போகிறேன்," என்றார்.

டென்னிஸ் பிரச்சனைகள்!

   இந்திய டென்னிஸ் அணிகள் இரண்டை ஒலிம்பிக்கிற்கு அனுப்ப வாய்ப்பு இருந்தும் மகேஷ் பூபதியை பயசுடன் விளையாடுமாறு சொன்னதில் ஆரம்பித்தது பிரச்சனை. பயசின் முகத்தை பார்க்கவே பிடிக்க வில்லை என பூபதி வார்த்தைகளில் விஷம் கக்கினார். ஜீனியர்களுடன் விளையாட முடியாது என்று பயஸ் கூற போபன்னா தன் பங்கிற்கு பயசுடன் விளையாட முடியாது என்று களத்தில் குதிக்க ஏக ரகளை. கடைசியில் இந்திய டென்னிஸ் சங்கம் பூபதிக்கு பணிந்து போனது. இரண்டு அணிகளை தேர்வு செய்து பூபதி- போபன்னா, பயஸ்- விஷ்ணு வர்த்தன் என அனுப்பிவிட்டு பயசுடன் சமாதானம் பேசியது. இதில் பலிகடா ஆனது பப்ளி சானியாதான்! இவரை கலப்பு இரட்டையரில் பயசுடன் ஆடுமாறு கூறிவிட்டது டென்னிஸ் சங்கம். பயசும் இந்த உடன் பாட்டிற்கு ஒத்துக் கொண்ட நிலையில் இந்திய டென்னிஸ் சங்கம் ஆணாதிக்க மனப்பான்மையில் நடந்து கொள்கிறது என்று பேட்டி கொடுத்து தன் பங்கிற்கு பீதி கிளப்பியுள்ளார் சானியா!
  இவர்கள் இப்படி அடித்துக் கொள்வதை பார்த்தால் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கி வருவார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
நாடு முக்கியம் தம்பிகளா! 

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கமெண்ட்களை தாராளமா சொல்லிட்டு போங்க பதில் மொய் கட்டாயம் உண்டு! அப்புறம் உங்க இஷ்டம்!
எனது அடுத்த பதிவு  இஷ்டப்பட்டு பாராட்டுங்க! விரைவில்!

 

 

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2