நம்பிக்கை வைத்தால்! பாப்பா மலர்!

நம்பிக்கை வைத்தால்!

தானாக்குளம் என்ற சிற்றூரில் வைரவன் எனும் வியாபாரி ஒருவன் வசித்து வந்தான்.அவனதுவியாபாரத்தில் வைத்ததெல்லாம் பொன்னாக மாறிற்று. சிறுகடை வைத்திருந்தவன் ஒரு கட்டத்தில் பெரிய மளிகைக் கடை வைக்கும் அளவுக்கு உயர்ந்தான். இதனால் அவன் செல்வச் செழிப்போடு மிகவும் வசதியோடு வசித்துவந்தான்.
    யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள் அல்லவா? அவனது வியாபாரத்திலும் அப்படி ஒரு சறுக்கல் வந்தது. யோசியாமல் ஒரு வியாபாரத்தில் அகலக்கால் வைத்தான். அது நட்டத்தில் கொண்டு போய்விட்டது. இதனால் கடையில் சரியாக கொள்முதல் செய்ய முடியாமல் போனது. தேவையான பொருட்கள் கிடைப்பதில் தோய்வு ஏற்பட மக்கள் அவனது கடையை புறக்கணித்தார்கள்.
    இதனால் வைரவன் மிகவும் நொடித்துப் போனான். கவலையும் அடைந்தான்.வியாபாரம் தொடர்ந்து நட்டத்தில் போய் வீட்டையும் விற்றுவிட்டு சிறு குடிசையில் வசிக்கும் நிலைக்கு மாறிவிட்டான் வைரவன். இதனால் நம்பிக்கை இழந்தான் வைரவன்.வியாபாரம் செய்வதை விட்டு விட்டு சதா கவலையுடன் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான்.இவனது நிலையைப்பற்றி அவனது நண்பன் தங்கமணி கேள்விப்பட்டான்.மிகவும் வருந்திய அவன் வைரவனை காணவந்தான்.
    வைரவனின் நிலையைக் கண்டு மிகவும் வருத்தமடைந்த தங்கமணி அவன் நம்பிக்கை இழந்து துணிவின்றி இருப்பது கண்டு ஆறுதல் கூறினான்.நண்பா வருந்தாதே வியாபாரத்தில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். இப்படி முடங்கிக் கிடக்காதே உன்னை காணவே சகிக்கவில்லை! நான் சிறிது பணம் தருகிறேன் நீ மீண்டும் வியாபாரம் தொடங்கு! நீ மீண்டும் நல்ல நிலைக்கு வந்தபின் அந்த பணத்தை திருப்பிக் கொடுத்தால் போதும் என்ன செய்கிறாயா? என்றான்.
  ஆனால் வைரவனோ நண்பா என் வியாபாரம் மீண்டும் நட்டம் அடைந்தால் என்ன செய்வது? என்னுடைய நேரம் சரியில்லாமல் கிடக்கிறதே? அப்படி நட்டமானால் உனக்கும் நான் கடன் காரன் ஆகிவிடுவேனே! அந்த நிலை எனக்கு வேண்டாம்! என்று நம்பிக்கை இழந்தவாறு பேசினான்.
    நண்பனை திருத்த முடிவு செய்த தங்க மணி வைரவா வா காலாற நடந்து வரலாம் என்று அழைத்துச் சென்றான். அப்படி நடந்துவரும் சமயம் ஒரு கரையான் புற்று தங்க மணியின் கண்ணில் பட்டது. இதுதான் நண்பனை திருத்த நல்ல சமயம் என்று நினைத்த அவன் அந்த புற்றை மடமடவென கலைத்தான்.
   நண்பா உனக்கு என்ன ஆயிற்று! ஏன் புற்றை கலைத்தாய்? என்றான் வைரவன். ஒன்றுமில்லை இப்போது பார் வேடிக்கையை என்ற தங்கமணி சிறிது நேரம் அந்த புற்றையே உற்று நோக்க சொன்னான். சில நிமிடங்களில் கலைத்த புற்று மீண்டும் உருவாகிவிட்டிருந்தது.
    நண்பா! சிறிய உயிரினமான இந்த கரையானுக்கு இருக்கும் நம்பிக்கை கூட உனக்கு இல்லையே! கலைத்த புற்றை எவ்வளவு வேகமாய் எழுப்பிவிட்டது பார்த்தாயா? வாழ்க்கை என்றால் நன்மைகள் மட்டும் நடக்காது! நன்மை தீமை இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை! தீமையை கண்டு அஞ்சக்கூடாது! எதிர்த்து போராட வேண்டும். வியாபாரத்தில் நட்டம் ஏற்படுவது சகஜம். இதற்காக வியாபாரத்தையே கைவிட்டு கவலையில் ஆழ்வதா? உன்னை நீ நம்பவேண்டும் நண்பா! இந்த கரையானுக்கு இருக்கும் நம்பிக்கை கூட உன்னிடம் இல்லையா? தொடர்ந்து தோல்விகள் உன்னைநிலை குலையச் செய்துவிட்டன. ஆனாலும் நம்பிக்கை இழக்காதே! வியாபாரத்தை தொடங்கு வெற்றி அடைவாய் என்றான் தங்கமணி.
    வைரவன் தெளிவடைந்தான். நண்பா நீ கூறுவது உண்மைதான்! உயிர்காப்பான் தோழன் என்பது போல உன் அறிவுரை இன்று என்னை காத்தது. தக்க சமயத்தில் என் தன்னம்பிக்கையை தூண்டிவிட்டாய்! நீ பணம் கொடு நாளையே வியாபாரத்தை தொடங்குகிறேன் என்றான் வைரவன்.
   திருந்திய நண்பனைக் கண்டு மகிழ்ந்தான் தங்கமணி!

உங்களுக்குத் தெரியுமா?

வேர் இல்லாத தாவரம் காளான்.

உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடு இந்தியா.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2