நான் தரமாட்டேன்! பாப்பா மலர்!

நான் தரமாட்டேன்!

மகேஷ் தன் வீட்டு வாசலில் தனது செல்லப்பூனை விக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். விக்கி எனும் அப்பூனை பழுப்பு சாம்பல், வெள்ளை, கலந்து அழகாக தோற்றமளித்தது. அதன் கண்கள் பட்டாணி சைஸில் வெளிர் நீலத்தில் இருந்தது, உடலெங்கும் ‘புசுபுசு’வென முடி. பஞ்சு போன்ற உடல் கொண்ட அந்த பூனை பார்ப்பவர்களை கவர்ந்திழுத்தது.
     எதிர் வீட்டிலிருந்து ரமேஷ் இதை கவனித்துக் கொண்டு இருந்தான். ரமேஷிற்கும் மகேஷின் வயதுதான். இருவரும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள்.மகேஷ் பூனை வளர்ப்பது போல ரமேஷும் ‘டைகர்’ என்ற நாயை வளர்த்துவந்தான். ஆனாலும் ரமேஷிற்கு மகேஷின் பூனை மீது கொள்ளை ஆசை. மகேஷ் பூனையுடன் விளையாடுவதை ஆதங்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ரமேஷ்.
    சிறிது நேரம் கழித்து மகேஷ் வீட்டிற்கு வந்த ரமேஷ், மகேஷ்! நான் உன் பூனை கூட கொஞ்ச நேரம் விளையாடட்டா? ரொம்ப ஆசையா இருக்குடா என்று கேட்டான். மகேஷும் சம்மதித்தான். ரமேஷ் நீ விளையாடிட்டுரு நான் இப்ப வந்திடுறேன் என்றவன் உள்ளே சென்றான். அவன் உள்ளே சென்றதுதான் தாமதம் ரமேஷ் அந்த பூனையை தூக்கிக் கொண்டு தன் வீட்டினுள் ஓடிச் சென்றான்.
    புதியவனான அவனிடம் பழக அந்த பூனை மிகவும் கஷ்டப்பட்டது. மியாவ்மியாவ் என கத்தி சத்தம் போட்டது. ஆனால் ரமேஷிற்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. அதை தன்னுடைய ரூமில் போட்டு கதவை மூடினான்.
     வீட்டிற்குள் இருந்து வந்த மகேஷ் தன்னுடைய பூனையை காணாது ரமேஷ் வீட்டிற்கு சென்றான். ரமேஷ் ரமேஷ்! என்னுடைய பூனை எங்கேடா? என்றான்.
   அது என்கிட்டதான் இருக்கு! அது எனக்கு வேணும்! நான் தரமாட்டேன் போடா! என்று மகேஷை விரட்டினான் ரமேஷ். டேய் விளையாடிட்டு கொடுக்கிறேன்னுட்டு இப்ப இப்படி சொல்லாதடா? எங்க இருக்கு சொல்லு என்று உள்ளே நுழைய முற்பட்டவனை தடுத்து நிறுத்திய ரமேஷ் உள்ள வராதே இனிமே அந்த பூனை எனக்குத்தான் சொந்தம் என்று விரட்டினான்.
    டேய் என்னை ஏமாத்த பார்க்காதே நான் என் அப்பாவை கூட்டிகிட்டு வரேன் என்று வேகமாக வெளியேறினான் மகேஷ்.
    நடப்பது அனைத்தையும் வாசல் செடிகளுக்கு நீர் விட்டுக் கொண்டிருந்த ரமேஷின் தந்தை கவனித்தார். இது என்ன பிடிவாதம்! அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படும் இவனை திருத்த வேண்டுமே என்று நினைத்த அவர், மகேஷை தடுத்து நிறுத்தி தம்பி! நடந்தது எல்லாத்தையும் நான் பார்த்துகிட்டு தான் இருந்தேன். நீ உங்க அப்பாகிட்ட போக வேணாம் நான் ஒரு ஐடியா சொல்றேன் உன் பூனை உன்கிட்ட தேடிவரும் என்றார். தலையசைத்தான் மகேஷ்.
    ரமேஷின் வீட்டில் அவனுடைய அறையில் பூனை சுற்றி சுற்றி வந்தது. ரமேஷை தொடவே விடவில்லை. அவன் வைத்த பாலையும் அருந்தவில்லை. வீட்டை விட்டு வெளியேற தவியாய் தவித்துக் கொண்டு இருந்தது. அதனிடம் போராடி சலிப்படைந்த ரமேஷ் வெளியே வந்தான்.
    அங்கே அவனது செல்ல நாய் விக்கியை காணவில்லை! அப்பா அப்பா விக்கியை பார்த்தீங்களா என்று கேட்டான் ரமேஷ்! இல்லையே என்றார் அவனது அப்பா.
   அப்போது எதிர்வீட்டில் இருந்து விக்கி குறைக்கும் குரல் கேட்டு உள்ளே நுழைந்தான் ரமேஷ். அப்பா நம்ம விக்கியை மகேஷ் திருடிட்டு போயிட்டான் வாங்க போய் அழைச்சிட்டு வந்துருவோம் என்றான் ரமேஷ்.
    அப்ப நீ அவனோட பூனையை கொண்டு வந்ததுமட்டும் ரைட்டா! மகேஷ் திருடன்னா நீயும் திருடன் தானே!
   அப்பா அப்பா அது வந்து! அந்த பூனையை எனக்கு ரொம்ப பிடிச்சதுப்பா!
  அதுக்காக அவன் பொருளை நீ எடுத்துகிடலாமா? உனக்கு அவனோட பூனை பிடிச்சது அவனுக்கு உன்னோட நாய் பிடிச்சிது எடுத்துகிட்டான். சரிக்கு சரி சரியாப் போச்சு அவன் கிட்ட போய் அவமானப் படாதே என்றார் அவனது அப்பா.
     அப்பா அப்பா என் விக்கிப்பா! அங்க பாருங்க அவன் கஷ்டப்படறதை! பாவம் அழறான்பா!
   இங்கேயும் தான் அந்த பூனை கஷ்டப்படுது! உன் கூட சேரமாட்டேங்குது நீவிட்டியா? போகப் போக பழகிடும்னு சொன்னே அது போல அங்கேயும் பழகிடும் விட்டுடு!
   ரமேஷின் கண்களில் பொலபொலவென கண்ணீர்! தப்புதான்பா! ஏதோ ஆசையில இந்த தப்ப செஞ்சிட்டேன் இப்பவே மகேஷோட பூனையை அவன் கிட்ட கொடுத்திட்டு என்னோட நாயை வாங்கிட்டு வரேன் என்று பூனையை தூக்கிக் கொண்டு ஓடினான் ரமேஷ்.
    பூனையோடு வந்து நின்ற ரமேஷ் சாரிடா! இனிமே இப்படி செய்யமாட்டேன் ப்ளீஸ் என் விக்கியை கொடுத்திருடா என்றான். கண்டிப்பா ரமேஷ்! நீயும் என் பூனையை கொடுத்திடு! இனிமே ரெண்டு பேரும் சேர்ந்து  விளையாடுவோம் என்ற மகேஷ் விக்கியை விடுவித்தான்.
   இரு பிராணிகளும் இடம் மாற அவர்களிடையே அன்பு துளிர்த்தது!

உங்களுக்கு தெரியுமா?

மிக நீண்ட கடற்கரை கொண்ட மாநிலம் குஜராத்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2