விருதுநகர் நகராட்சிக்கு 'டிடி' மூலம் லஞ்சம் அனுப்பி 'ஷாக்' கொடுத்த ஆடிட்டர்!
விருதுநகர்: பிறப்பு சான்றிதழ் தருவதில் பெரும் அலட்சியமும், தாமதமும்
செய்த விருதுநகர் நகராட்சிக்கு ஆடிட்டர் ஒருவர் சரியான பாடம்
கற்பித்துள்ளார். 100 ரூபாயை, டிடி மூலம் அனுப்பி இது லஞ்சப் பணம், இதைப்
பெற்றுக் கொண்டு பிறப்புச் சான்றிதழை அளிக்கவும் என அவர் போட்ட போட்டால்
விருதுநகர் மாவட்ட நிர்வாகமே ஆடிப் போய் விட்டது. பிறப்புச் சான்றிதழை
எடுத்துக் கொண்டு ஆடிட்டர் வீட்டுக்கு அரக்கப் பறக்க ஓடிப் போய், மன்னிப்பு
கேட்காத குறையாக சான்றிதழை கொடுத்து விட்டு வந்துள்ளனர்.
இங்கென்றுதான்
என்றில்லை, எங்கெங்கு பார்த்தாலும் லஞ்சம், லஞ்சம், லஞ்சம்தான். மின்சார
வாரியத்திற்குப் போனாலும் லஞ்சம், நகராட்சி அலுவலகத்திற்குப் போனாலும்
லஞ்சம். காசு வைக்காமல் ஒரு வேலையும் நடப்பதில்லை, இதுதான் தமிழக மக்களின்
கண்ணீர்ப் புலம்பலாக உள்ளது. இந்த நிலையில் விருதுநகரைச் சேர்ந்த ஆடிட்டர்
ஒருவர், பிறப்புச் சான்றிதழ் தருவதில் பெரும் அலட்சியமும், தாமதமும் செய்து
வந்த விருதுநகர் நகராட்சிக்கு சரியான பாடம் கற்றுக் கொடுத்துள்ளார்.
விருதுநகரைச்
சேர்ந்தவர் பழனிச்சாமி. ஆடிட்டர். இவரது மகனுக்கு பன்னாட்டு நிறுவனம்
ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. பணியில் சேருவற்கு பிறப்புச் சான்றிதழ்
தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து விருதுநகர் நகராட்சியில் அதற்குரிய ரூ. 55
கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்தார். பிறப்புச் சான்றிதழ் கோரி
விண்ணப்பித்தால் ஒரு வாரத்தில் தரப்பட வேண்டும். ஆனால் 15 நாளாகியும்
சான்றிதழ் கிடைத்தபாடில்லை.
இந்த நிலையில்தான் நகரின் மையப்
பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் வைத்த தட்டி ஒன்றைப் பார்த்தார்
பழனிச்சாமி. அதாவது விருதுநகர் நகராட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுவதை
நக்கல் செய்து வைக்கப்பட்டிருந்த அந்த போர்டில், ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு
லஞ்சம் தர வேண்டும் என்பதை லிஸ்ட் போட்டு வைத்திருந்தனர்.
இதைப்
பார்த்த பழனிச்சாமிக்கு ஒரு நூதன ஐடியா தோன்றியது. உடனே வங்கிக்குப் போன
அவர், காங்கிரஸ் விளம்பர போர்டில் கூறப்பட்டிருந்தது போல ரூ. 100க்கு
டிமாண்ட் டிராப்ட் எடுத்தார். அதை இது லஞ்சப் பணம், பெற்றுக் கொண்டு
பிறப்புச் சான்றிதழை விநியோகிக்கவும் என்று ஒரு குறிப்பு எழுதி கவருக்குள்
வைத்து நகராட்சி ஆணையருக்கு அனுப்பினார். மாவட்ட ஆட்சித் தலைவர்
பாலாஜிக்கும் ஒரு நகலை அனுப்பி வைத்தார்.
அவ்வளவுதான் நகராட்சியில்
தீப்பற்றிக் கொண்டது. அனைவரும் அலறி அடித்து அதிர்ச்சியாகி விட்டனர்.
நகராட்சி ஆணையர் சேர்மக்கனி உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக்
கூப்பிட்டு கடுமையாக டோஸ் விட்டார். உடனே பிறப்புச் சான்றிதழை எடுத்துக்
கொண்டு பழனிச்சாமி வீட்டுக்கு நேரடியாகப் போய் கொடுத்து விட்டு வருமாறு
உத்தரவிட்டார். இதையடுத்து நகராட்சி சுகாதார அதிகாரி பாஸ்கரன், நகராட்சித்
தலைவர் சாந்தி ஆகியோர் பழனிச்சாமியை நேரில் சந்தித்து அவரை சமாதானப்படுத்தி
பிறப்புச் சான்றிதழைக் கையில் கொடுத்து விட்டு வந்தனர்.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கும் சேர்மக்கனி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர்
மாவட்ட ஆட்சித் தலைவர் பாலாஜி ஏற்கனவே பொதுமக்கள் புகாரின் பேரில்
உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார். அடுத்த சகாயம் என்றும்
பாராட்டப்பட்டு வருகிறார். இந்த விவகாரத்தில் அவர் என்ன மாதிரியான
நடவடிக்கை எடுக்கப் போகிறாரோ என்று தற்போது விருதுநகர் நகராட்சி
ஊழியர்களும், அதிகாரிகளும் பீதியில் உள்ளனராம்.
டிஸ்கி} மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நாட்டில் லஞ்சத்தை பெருமளவில் ஒழிக்கமுடியும். நமக்கேன் வம்பு!நம் காரியம் ஆனால் போதும் என்ற மனப்பான்மை லஞ்சத்தை ஊக்குவிக்கிறது. இந்த ஆடிட்டர் போல துணிச்சலுடன் செயல் பட்டால் லஞ்சம் காணாமல் போகும்! வெல்டன் ஆடிட்டர் பழனிச்சாமி! ஹேட்ஸ் ஆப் யூ!
தகவல் உதவி} தட்ஸ் தமிழ்
எங்கள் விருதுநகர் என்றதும் படித்தேன் மிக்க மகிழ்ச்சி .நகரை விட்டு வந்து 6maatham ஆகபோது .பகிர்வுக்கு நன்றி இன்றுதாம் உங்கள் தளம் வந்தேன்.அன்புடன் கருப்பசாமி .
ReplyDelete