இளையராஜாவை கொன்றிருப்பேன் : கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு!

நான் மட்டும் இசையமைப்பாளராகி இருந்தால் பொறாமையில் இளையராஜாவை அப்படியே தலையணை அமுக்கி கொன்றிருப்பேன் என்று இளையராஜாவின் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார். இளையராஜா எழுதி இருக்கும் பால் நிலா பாவை, எனக்கு எதுவோ உனக்கும் அதுவே என்ற இரண்டு நூல் வெளியீட்டு விழா மற்றும் அவரது பிறந்தநாள் விழா ஆகிய இரண்டையும் சேர்த்து சென்னை மியூசிக் அகடாமியில் விழா நடந்தது. இதில் பால்நிலா பாவை புத்தகத்தை கமல் வெளியிட இறையன்பு ஐ.ஏ.எஸ்-ம், எனக்கு எதுவோ உனக்கும் அதுவே புத்தகத்தை கவிஞர்.மூ.மேத்தா வெளியிட கவிஞர் முத்துலிங்கம் பெற்றுக்கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சிக்கு எந்த ஒரு ஒத்திகையும் எடுக்காமல் வந்திருக்கேன். இதற்கான ஒத்திகை பல வருடங்களாக, பல மேடைகளிலும், மேடைகள் இல்லாமலும் இந்த இசை ராஜாவை பற்றி நான் பேசாத நாளில்லை. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் ஊரார் அனைவரும் ஊட்டி வளர்த்த பிள்ள‌ை இளையராஜா. பல கெட்டிக்காரர்கள் இருப்பார்கள். ஆனால் ஊர் ஒப்புக்கொள்ள வேண்டுமே, அப்படி ஒப்புக்கொண்ட பிள்ளை தான் ராஜா. அதற்கு காரணம் அவரது எளிமை மட்டும் தான். நானும், இளையராஜாவும் கீழே அமர்ந்திருந்தபோது என்னிடம் சொன்னார், இங்கு நமக்கு தண்ணீர் ஊற்றி குளிர வைத்துக்கொண்டே இருப்பார்கள், ஆனால் நாம்தான் நமக்குள் இருக்கும் நெருப்புகங்கை அணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். அவருக்கு புகழ்ச்சி பிடிக்காது என்பதற்காக அப்படி சொன்னார். கோபமே படாதவர் ராஜா, அப்படியே கோபம் வந்தாலும் அதை தன்னுடைய ஆர்மோனிய பெட்டிக்குள் புகுத்தி, அதை இசையாக வெளியிட்டு விடுவார்.

நான் நிறைய இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அவர்களிடம் எல்லாம் இளையராஜாவை பற்றி பேசாத நாளில்லை. இளையராஜாவுக்கு இன்று நான் ஒரு சம்பளம் வாங்காத பி.ஆர்.ஓ.(மக்கள் தொடர்பாளர்) ஆகத் தான் இருந்து வருகிறேன். 30 வருடத்திற்கு முன்பு உனக்குள் இருக்கும் ஆன்மீகவாதி ஒருநாள் வெளிவருவான் என்று என்னிடம் சொன்னார். ஆனால் இன்று வரை அப்படி ஒருவரும் வந்ததாக தெரியவில்லை. இதுதான் கடவுள், இவர்தான் கடவுள் என்று அனைவரும் உறுதியிட்டு, உறுதிப்பட கூறினால் நானும் அவரை கடவுளாக நினைத்து கும்பிடுவேன். என்னை பொறுத்தவரை நான் தினமும் குட்மார்னிங் சொல்லும் கடவுள் இளையராஜா.

இளையராஜா ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். நானும், அவரும் கிட்டத்தட்ட 100 படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளோம். ஒருபடத்திற்கு 4 பாட்டு என்றால் கூட அவருடன் இணைந்து 400 பாடல்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். மேலும் பாட்டு ரீ-ரெக்கார்டிங் போது கூட அவருடன் குறைந்தது அரைமணி நேரமாவது பேசிக்கொண்டே இருப்பேன். இந்தியில் சில பாட்டுகளின் மெட்டுகள் நன்றாக இருக்குது என்று இளையராஜாவிடம் சொல்லியிருக்கிறேன். அவரும் அதைப்போன்று மெட்டை தன்னுடைய சொந்த மெட்டாக அமைத்து, நாம் எதிர்பார்த்ததைவிட பலமடங்கு பிரம்மாண்டமாக, பிரமாதமாக அமைத்து கொடுத்துவிடுவார்.

இளையராஜாவை எத்தனை நெருக்கமாக பார்த்தாலும் எனக்கு வியப்பு அடங்காத மேதை அவர். நல்ல வேலை நான் அவரிடம் வேலை பார்க்கவி‌ல்லை. ஒருவேளை நானும் இசையமைப்பாளராக இருந்திருந்தால் இளையராஜாவை தலையணையால் அமுக்கி கொன்றிருப்பேன். அந்தளவுக்கு அவர் மீது பொறாமை எனக்கு. மற்றவர்களிடம் வேலை பார்க்கும்போது இதை என்னால் அதிமாக உணரமுடிந்திருக்கிறது. நானும் இசைஞானத்துடன் இருக்க இளையராஜாவும் ஒரு முக்கிய காரணம். அவர் ஒரு குழந்தை நல மருத்துவர் மாதிரி. குழந்தை அழும். ஏன் என்று தெரியாது. ஆனால் அதன் குறிப்பறிந்து மருந்து கொடுப்பவர்தான் மருத்துவர். நானும் பல முறை அழுதிருக்கிறேன். எனக்கு ஏற்ற மருந்தை கொடுத்திருக்கிறார் இளையராஜா. எங்களுடைய நட்பு இன்னும் நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்று பேசினார்.

ஏற்புரை வழங்கிய இளையராஜா பேசும்போது, எனக்கு பிறந்தநாள் கொண்டாட பிடிக்காது. இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் கொண்டாடும்போது நான் என்னுடைய தாயை நினைத்து கொள்வேன். நான் முதன்முதலாக சென்னைக்கு கிளம்பிவந்தபோது, என் தாய் அவரிடமிருந்த ரூ.400 அப்படியே என்னிடம் கொடுத்துவிட்டார். நானும் அவருக்கு ஒரு ரூ.200 கூட கொடுக்கவில்லை. அவரும் தன்னுடைய செலவுக்காக ஒரு ரூ.50 கூட எடுத்து கொள்ளவில்லை. அப்படிப்பட்ட உயர்ந்த உள்ள படைத்தவள் என் அன்னை. அதனால் ஒவ்வொரு ஆண்டும் என் பிறந்தநாளை கொண்டாடும் போது என் தாயை நினைத்து கொள்வேன். தாய் கையால் சாப்பிடும் தயிர்சாதத்திற்கும், பாஸ்ட்புட்டில் போய் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். அதுபோலத்தான் சொந்தமாக இசையமைப்பவர்களுக்கும், பிறரது இசையை காப்பி அடிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம். இசை என்பது மிக எளிமையான விஷயம். அதை ஏன் இவ்வளவு கடினமாக்கி சிக்கலாக்குகிறார்கள் எனத் தெரியவில்லை. இப்போதுள்ள இசை அப்படி ஆகிவிட்டது. மேலும் புகழ் என்பது எவ்வளவு பெரிய போதை என்று எனக்கு தெரியும். அதனால்தான் அதைவிட்டு கொஞ்சம் விலகியே இருக்கிறேன் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கவிஞர்கள் மூ.மேத்தா, முத்துலிங்கம், இறையன்பு ஐ.ஏ.எஸ், நடிகை தேவையானி, நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு இளையராஜாவை வாழ்த்தி பேசினார்கள். 

நன்றி} தினமலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2