காணாமல் போன கிணற்றை கண்டுபிடித்த கரூர் ஆர்.டி.ஓ!

கரூர்: கரூர் அருகே உள்ள வெங்கமேட்டில் காணாமல் போன பொதுக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

தமிழக சினிமாவில் வரும் ஒரு காமெடி காட்சி போல கரூர் அருகே உள்ள வெங்கமேட்டில் பொதுக் கிணற்றை காணவில்லை என்று அந்த ஊர் நல பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களான பாலுசாமி, குமணன் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்ட கலெக்டர் ஷோபனாவிடம் புகார் மனு அளித்தனர்.

புகாரைப் பார்த்த கலெக்டர் ஷோபனா அதிர்ச்சி அடைந்து இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி உடனே நடவடிக்கை எடுக்குமாறு கரூர் ஆர்.டி.ஓ. சாந்திக்கு உத்தரவிட்டார். அதன்படி பொதுக் கிணறு இருந்ததாகக் கூறப்படும் இடத்தை ஆர்.டி.ஓ. சாந்தி ஆய்வு செய்து வருவாய்த் துறை ஆவணங்களை சரிபார்த்தார்.

தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தி அங்கு பொதுக் கிணறு இருந்ததை உறுதி செய்து கொண்டார். கிணறு இருந்த இடத்தில் மண் மற்றும் குப்பைகள் போட்டு சிலர் அதை மறைத்து அதன் மேல் வீடு கட்டி உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து பொதுக் கிணற்றை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம், கிணற்றை திரும்பத் தோண்டி ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து, காணாமல் போன கிணறு கிடைத்தது. மேலும் அந்த கிணற்றை மீண்டும் உருவாக்கி ஆழ்படுத்தி பொது மக்கள் உபயோகத்திற்கு பயன்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை செய்துதர கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார் ஆகியோருக்கு சாந்தி உத்தரவிட்டார்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில்,

கரூர் வெங்கமேடு அருகே உள்ள பொதுக் கிணற்றை சிலர் ஆக்கிரமித்துக் கொண்டனர். அதனால் அந்த கிணற்றை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து புகார் வந்ததும் கரூர் ஆர்.டி.ஓ. வாக இருந்த சாந்தி விசாரணை நடத்தி அந்த இடத்தை ஆக்கமிரமப்பாளர்களிடம் இருந்து மீட்டு பொது மக்களிடம் ஒப்படைத்தார்.

அந்த இடத்தில் ஊர் மக்கள் சார்பாக கிணறு தோண்டிக் கொள்வதாகக் கூறியிருந்தார்கள். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது என்றனர்.

இந்த நிலையில் கரூர் ஆர்.டி.ஓ.வாக பணியாற்றிய சாந்தி மதுரை மாவட்டம், உசிலம்பட்டிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நன்றி தட்ஸ் தமிழ்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2