ரியாலிட்டி ஷோக்களும்! ரீல் விடும் டீவீக்களும்!

ரியாலிட்டி ஷோக்களும்! ரீல் விடும் டீவீக்களும்!

ஒரு காலத்தில் தமிழ் தொலைக்காட்சிகள் ரியாலிட்டி ஷோக்கள் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் இருந்தது.அரைத்தமாவையே அரைத்துக் கொண்டு மெகாத் தொடர்கள் என்ற பெயரில் குடும்பத் தலைவிகளை அழவைத்துக் கொண்டு இருந்த நிலையில் விஜய் டீவி ஸ்டார் குருப் வசம் கை மாறியது. அந்த சமயத்தில்தான் முதல் ரியாலிட்டி ஷோவாக ஜோடி நம்பர் 1 உருவானது.இந்த ஷோவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே சூப்பர் சிங்கர் ஜூனியர் சூப்பர் சிங்கர், என்று ரியாலிட்டி ஷோக்களை துவங்கியது விஜய் டீவி!
       விஜய் டீவியை பார்த்து சன்னும் மற்ற சேனல்களும் ரியாலிட்டி ஷோக்களை துவக்க ஆரம்பித்தன. சன்னில் அசத்த போவது யாரு? விஜயின் கலக்க போவது யாரு? வின் அப்பட்டமான காப்பியாக அமைந்தது. சன்னுக்கு போட்டியாக கலைஞர் டீவி உதயமானதும் மானாட மயிலாட ஆரம்பித்தது. இதுவும் ஜோடி நம்பர் 1ன் பாதிப்பில் விளைந்த ஒன்றுதான்!
    இந்த ஷோக்களை சுவாரஸ்யமாக்க டீவிக்கள் செய்யும் விசமங்கள்தான் ஷோக்களை பரபரப்பாக மாற்றுகிறது. உண்மையில் இந்த ஷோக்களால் மக்களுக்கு ஒரு லாபமும் இல்லை! ஆனாலும் வியாபார நோக்கில் அதிக டீ.ஆர். பி ரேட் அள்ள எதையாவது செய்து ஷோக்களை பிரபல படுத்த முயற்சிக்கின்றன ஒவ்வொரு சேனல்களும். இதில் முதலில் நடந்த கூத்து எல்லோரும் அறிந்ததே! விஜய் டீவியில் சிம்புவிற்கும் பிரித்வி ராஜிற்கும் ஒரு சண்டையை உருவாக்கி தீப்பற்றி கொள்ள வைத்தார்கள். அதனால் அந்த சீசன் களை கட்டியது. சூப்பர் சிங்கரிலும் நன்றாக பாடுபவர்களை ஏதாவது காரணம் காட்டி ஒதுக்கிய சைலஜாவை எதிர்த்து ஒருவர் குரல் கொடுக்க வைத்தார்கள் எனவே அந்த ஷோ களை கட்டியது.

    அந்த பாணியில் மானாட மயிலாடவும் வெற்றி நடை போடுகிறது. இதில் கலாமாஸ்டர் வாடா போடா என்று அழைத்து ப்ளெஸ் பண்ணுவதும் பாராட்டுவதும் சகிக்கமுடியவில்லை! நடனத்தை பற்றி என்ன தெரியும் என்று குஷ்புவையும் நமீதாவையும் ஜட்ஜாக்கி வைத்திருக்கிறார்கள் என்றும்  புரியவில்லை! அவர்கள் ஆடுபவர்களை ஓகோ எனப் புகழ்வதும் கட்டி அணைப்பதும் பிளையிங் கிஸ் கொடுப்பதும் ஒரே கண்றாவி!விஜய் டீவியில் தற்போது நீயா நானாவில் பவர்ஸ்டாரை கூப்பிட்டுவைத்து கலாய்க்க அந்த டீவியின் டீபிஆர் எகிறியது.
    இதையெல்லாம் மிஞ்சி விடுகிறது நிர்மலா பெரியசாமி நடத்தும் ஜீ டீவி ரியாலிட்டி ஷோ! சொல்வதெல்லாம் உண்மை என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது குடும்பத்தில் நடக்கும் சண்டைகளை தீர்க்கும் மத்தியஸ்தராக இவர் இருக்கிறார். குறைகளை கேட்பதிலும் நியாயங்களை சொல்வதிலும் சரி அந்த கம்பீரம் ஓக்கே தான்! ஆனால் நாலு சுவற்றுக்குள் முடிய வேண்டிய விசயங்களை இப்படி பப்ளிக் செய்து ஆகவேண்டிய காரணம் என்ன என்பது தான் புரியவில்லை!
     இந்த ஷோவில் வரும் எல்லா ஆண்களும் கொடுமைக் காரன்களாக குடிகாரர்களாக இருப்பதுதான் மகா கொடுமை! கணவனுடன் சேர மறுக்கும் மனைவி! தகப்பனுடன் பேச மறுக்கும் மகள்! ஓடி வந்த காதல் ஜோடிகள்! என சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது! ஆனால் இதிலும் உண்மை இல்லை என்று கடந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியை பார்த்த போது தான் தெரிந்தது. ஒரு காதல் ஜோடிகளை வைத்துக் கொண்டு அவர்கள் பெற்றோர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே போலீஸ் உள்ளே நுழைய அதையும் படம் பிடித்து பரபரப்பாக்கியது தொலைக் காட்சி!
    போலீஸ் எப்படி ரியாலிட்டி ஷோ நடக்கும் சமயம் உள்ளே நுழையும்? ஷோ நடப்பது முன் கூட்டியே தெரிந்திருக்குமா? தெரிந்து இருந்தாலும் ஷோவின் இடையில் உள்ளே நுழையவேண்டிய அவசியம் என்ன யோசித்துப் பாருங்கள்!
    இது அத்தனையும் டி ஆர். பி எனப்படும் அதிக பார்வையாளர்களை கவர்வதற்காக செய்யப்படும் தந்திரங்கள்! இப்படி பரபரப்பாக்கி அந்த நிகழ்ச்சிகளை பார்க்காத சிலரையும் பார்க்கத் தூண்டும் தூண்டில்கள்! நாம் தான் ஏமாளிகள்! ஏமாந்து கொண்டு அவன் நன்றாக ஆடுவான் பாவம் தோற்றுவிட்டான்! இவ நல்லா பாடுவாளே ஏன் இன்னிக்கு இப்படி பண்ணிட்டாள்? என்று நம் மண்ண்டையை காச்சிக் கொள்கிறோம்.

   இத்தனை ஷோக்களில் ராஜ் டீவி நடத்தும் ஒரு ஷோ கொஞ்சம் பார்க்க கூடியதாக இருக்கிறது தமிழுக்கு கொஞ்சம் சேவை செய்வதாகவும் இருக்கிறது. புதியதோர் கவிஞன் செய்வோம் எனும் அந்தநிகழ்ச்சி புதிய பாடலாசிரியர்களை தேடும் நிகழ்ச்சி. முதல் சில சுற்றுக்களை விசாலி கண்ணதாசன் நடத்தினார். அவர் சிரித்து சிரித்தே போட்டியாளர்களை தேர்வு செய்து விட்டார். பின்னர் கபிலன், அறிவுமதி ஆகியோர் உடன் வந்து சிலரை நீக்கினார்கள் இப்போது விசாலிக்கு பதில் ரோகிணி வந்துள்ளார். அவர்களுடன் அறிவுமதியும் கபிலனும் இணைந்து வெற்றியாளர்களை தேடுகிறார்கள். நிறைய கவிஞர்கள்! பலர் கிராமங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களின் கவித்திறமை வியக்க வைக்கிறது. பலர் பாமரர்களாக உள்ளனர். ஆனாலும் பாடல்களை எழுதி பாராட்டு பெறுகின்றனர். இடை இடையே அறிவுமதியும் கபிலனும் தங்கள் அனுபவங்களை பகிர்வது இன்னும் சிறப்பாக உள்ளது. பார்க்க தூண்டும் ஒரு நிகழ்ச்சி! இதுவாவது மக்களை ஏமாற்றாமல் இருக்கட்டும்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2