மந்திரபொம்மை! பாப்பாமலர்!

மந்திரபொம்மை!

சோலைவனம் என்ற அழகிய கிராமத்தில் ரவி என்னும் இளைஞன் ஒருவன் வசித்து வந்தான். சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்த அவன் மிகுந்த உழைப்பாளி. அருகில் உள்ள வயல்களில் வேலை செய்து அந்த வருமானத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தான். அதில் சிறிது தொகையை தானமும் செய்து வந்தான்.
  ஊரில் உள்ளோர் நீ என்னப்பா ஒண்டிக் கட்டை அதான் தாராளமா தர்மம் பண்றே எங்களாலே முடியுமா? என்று அவனை குத்திக் காட்டுவர். எனினும் அவன் தன் தர்மங்களை விடவில்லை. அவனது தருமச் செயல்களை கேள்விப்பட்ட துறவி ஒருவர் அவனுக்கு உதவ நினைத்தார்.
   அந்த துறவிக்கு மந்திரவித்தைகள் தெரியும் அவரிடம் ஒரு மந்திர பொம்மையும் இருந்தது. அந்த துறவி சோலைவனம் வந்தடைந்தார்.அங்கிருந்த ஒரு மரத்தடியில் தங்கினார். ஊர் மக்கள் அனைவரும் அவரிடம் சென்று ஆசி பெற்று வந்தனர். ஆனால் ரவி மட்டும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தான். என்னடா இது இவனை பெரிய தர்மவான் என்று கூறுகிறார்கள் ஆனால் அவன் என்னை சிறிதும் மதிக்கவில்லையே? ஊரே திரண்டு வந்து என்னை பார்த்துச் செல்கிறது அவன் வரவில்லையே என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்து கொண்டிருந்தார் துறவி.
    அப்போது அங்கு ரவி வந்தான். துறவியை வணங்கி, துறவியாரே தாங்கள் காலையிலிருந்துஇந்த மரத்தடியில் தங்கியிருப்பதாக அறிகிறேன்.காலை முதல் வேலை செய்து கொண்டிருந்ததால் தங்களை தரிசிக்க வர முடியவில்லை. வேலையை விட்டு விட்டு வர என் மனம் ஒப்பவில்லை.எனவே வேலையை முடித்துக் கொண்டு வந்து தங்களை தரிசித்தேன். தாங்கள் என் வீட்டில் இன்று உணவருந்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டான்.

   துறவி அவனது செயலை பாராட்டி அப்பனே உன் செயல் நியாயமானதுதான்! வேலைதான் முக்கியம்! நான் சாதாரணமானவன் தான்! என்னை எப்போதும் சந்தித்துக் கொள்ளலாம்! உன் கடமையை மெச்சுகிறேன், உன் வீட்டில் உணவருந்துவதில் மகிழ்கிறேன் என்றுஅவனுடன் உணவருந்த புறப்பட்டார்.
  ரவியின் வீட்டில் உணவருந்திய துறவி அப்பனே ரவி! என்னிடம் ஒரு மந்திரபொம்மை உள்ளது. இதனிடம் தினமும் ஒரு முறை வணங்கி கையில் மண்ணாங்கட்டிகளை வைத்துக் கொண்டுமந்திர பொம்மையே மண்ணை பொன்னாக்கு என்று கூறினால் கையில் உள்ள மண்ணாங்கட்டிகளில் மூன்று பொற்காசுகளாக மாறும். இதை உண் உழைப்பிற்கு பரிசாக தருகிறேன் பெற்றுக் கொள் என்று கூறி பொம்மையை தந்து சென்று விட்டார்.
   மறுநாள் ரவி துறவி சொன்னதை பரிட்சித்து பார்க்க முடிவு செய்து கையில் சில மண்ணாங்கட்டிகளை வைத்துக்கொண்டு மந்திரபொம்மையே மண்ணை பொன்னாக்கு என்று வணங்கினான். உடனே அவன் கையில் மூன்று பொற்காசுகள் வந்தன. அவன் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தான்.
அந்த மூன்று பொற்காசுகளை வைத்துக் கொண்டு ஆடம்பரமாக செலவு செய்ய ஆரம்பித்தான். காசு தீர்ந்ததும் மீண்டும் பொம்மையை வணங்கி காசு வரவைத்துக் கொண்டான்.
   அந்த பொம்மையை பாதுகாப்பாக வைப்பதிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தான். மிகவும் பாதுகாப்பான இரும்பு பெட்டி ஒன்றை வாங்கி அதனுள் பொம்மையைப் பூட்டி வைத்தான். அதன் அருகிலேயே இருந்து வந்தான். உழைப்பின் இலக்கணமான அவன் உழைப்பையே மறந்துவிட்டான். யார் வேலைக்கு அழைத்தாலும் வேலைக்கு வர மறுத்துவிட்டான்.
     என்னடா இது! என்ன காரணம் வேலைக்கு வராமலே இவனிடம் எப்படி பணம் நடமாடுகிறது என்று மக்கள் ஏதேதோ கதை கட்ட ஆரம்பித்தனர். வேலை செய்யாமல் தின்று கொழுத்த ரவிக்கு உடல்நலம் பாதித்தது. மிகவும் சிரமப்பட்டான். அதே சமயம் அவன் வேலைக்கு வராமைக்கு காரணம் மந்திர பொம்மைதான் என்பதை அவனது நண்பன் அறிந்து கொண்டான். அந்த பொம்மையை எடுத்து காசு வரவழைப்பதை ஒளிந்திருந்து கண்டு பிடித்த அவன் ரவி நன்கு உறங்கும் சமயம் அவனது மடியில் இருந்து சாவியை எடுத்து பொம்மையை எடுத்துக் கொண்டுஅதே மாதிரி வெறொரு பொம்மையை வைத்துவிட்டான்.
    மறுநாள் காலை ரவி எழுந்து பொம்மையை வணங்கி மந்திர பொம்மை மண்ணை பொன்னாக்கிடு என்று வேண்டினான். ஆனால் மண்ணாங்கட்டிகள் பொன் ஆனால் தானே பலமுறை கூறிப் பார்த்த ரவி சரி இன்று மந்திரம் வேலை செய்யவில்லை! நாளை பார்க்கலாம் என்றிருந்தான். மறுநாளும் மந்திரம் பலிக்க வில்லை! ஒரு வாரம் ஒருமாதம் ஆகியும் மந்திர பொம்மை மந்திரம் வேலை செய்யாது போகவே ரவி மனம் உடைந்தான்.
   உணவுக்கே வழி இல்லாமல் மீண்டும் வேலைக்கு போக ஆரம்பித்தான். உடல் ஒத்துழைக்க மறுத்தது. மிகவும் கடினப்பட்டான். ஆனால் சிலவாரங்களில்  அவனது நோய்விட்டது. பழையபடி உற்சாகமாக வேலை செய்ய ஆரம்பித்தான்.
  அப்போது அவனது நண்பன் மந்திர பொம்மையுடன் வந்தான். நண்பா என்னை மன்னித்துவிடு! உழைக்காமல் உடல் வேதனைப் படும் உன்னை திருத்தவே இந்த பொம்மையை எடுத்து சென்றேன். உழைக்காமல் வரும் பொருள் நிலைக்காது இதை உணர்ந்து கொள் உழைத்து உண்டால் நோயின்றி வாழலாம். இதோ உன் மந்திர பொம்மை  என்று ரவியிடம் மந்திர பொம்மையை கொடுத்தான்.
  ரவியும் ஆம் நண்பா! பொம்மை மூலம் பணம் கிடைக்கவே உழைப்பை மறந்து விட்டு தறிகெட்டுப் போனேன். தக்க சமயத்தில் என்னை திருத்தினாய். இனி இந்த பொம்மை நமக்கு தேவை இல்லை! இதை துறவியிடமே திருப்பி தந்து விடலாம் உழைப்பே உயர்வாகும் இதை உணர்ந்து கொண்டேன் என்றான்.
     அந்த சமயத்தில் அங்கு வந்த துறவி உழைப்பாளியான உன்னை இந்த பொம்மை சோம்பேறியாக்கிவிட்டதே! எனினும் திருந்திய உன்னை பாராட்டுகிறேன் என்று அந்த பொம்மை வாங்கி சென்றுவிட்டார். அது முதல் ரவி உழைத்து சிறப்பாக வாழ்ந்து வந்தான்.

உங்களுக்குத் தெரியுமா?

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் தொடங்கி 140 வருடங்கள் ஆகிறது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்யலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2