பிஸ்லாவின் ஆட்டத்தில் புஸ்ஸாகிய சென்னை!
பிஸ்லாவின் ஆட்டத்தில் புஸ்ஸாகிய சென்னை!
ஐபிஎல்லின் பைனலில் தோற்று சென்னை ரசிகர்களை
சோகத்தில் ஆழ்த்திவிட்டது சென்னை. தோனியின் அதிர்ஷ்டம் இந்த முறை பைனலில் கை
கொடுக்கவில்லை! கோப்பை வெல்வதில் கே கே. ஆர் அணியினருக்கு இருந்த உறுதியும்
போராட்டமும் கொஞ்சம் கூட சென்னை அணியில் இல்லாது போனது கோப்பையை இழக்க காரணமாக
இருந்தது.
ஐந்தாவதுஐபிஎல் தொடரில் துவக்கத்தில் இருந்தே சரிவுகளை சந்தித்த சென்னை
அதிர்ஷ்ட வாய்ப்பில் ப்ளே ஆப் சுற்றில் நுழைந்து மும்பை டெல்லி அணிகளை அபாரமாக
வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது. இந்த பைனலில் எப்படி ஆட வேண்டும் என்பதை மறந்து
கோப்பை நமக்குத்தான் என்பது போல ரிலாக்ஸாக ஆடி தோற்றது சென்னை. இதற்கு கேப்டன்
தோனியின் கேப்டன்ஷிப்பும் ஒரு முக்கிய காரணம்.
இந்த
மாதிரி போட்டிகளில் டாஸ் ஒரு முக்கியத்துவம் பெறும். அந்த டாஸை வென்ற தோனி
கோப்பையை கை நழுவ விட்டதற்கு காரணம் பவுலர்களை சரியாக பயன்படுத்தாமையே!
பேட்டிங்கும் அவ்வளவு சிறப்பு என்று சொல்ல முடியாது. முரளிவிஜயும் ஹசியும்
சிறப்பான துவக்கம் தந்தாலும் டெல்லி அணிக்கு எதிராக ஆடியது போல அவ்வளவு அதிரடியாக
ஆடவில்லை. டெல்லிக்கு எதிராக 51 பந்துகளில் சதமடித்த விஜய் இதில் 32பந்துகளில் 42
ரன்களை எடுத்தார். ஹசி அரை சதம் அடித்தார். ஆனால் இன்னும் விரைவாக ரன்களை
குவித்திருக்க வேண்டும் எதிரணியில் கடைசி வரை ஆல்ரவுண்டர்கள் இருந்தபோது இந்த
ரன்கள் போதுமானது இல்லை! சென்னை அணியின் பந்துவீச்சும் பலவீனமான ஒன்று. எனவே இன்னும்
அதிக ரன்கள் குவித்திருக்கலாம். பிட்ச் ரன் குவிப்பிற்கு சாதகமாகத்தான் கடைசிவரை
இருந்தது.
முதல் ஆறு
ஓவர்களில் குவித்த அளவிற்கு அடுத்த நான்கு ஓவர்களில் ரன் விகிதம் ஏறவில்லை 4ம் 5ம்
ஆக எடுத்து விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டார்கள். இது தேவையில்லாத ஒன்று
ரெய்னாவின் பேட்டிங் சொல்லிக் கொள்ளும் படி அமைந்தது. துவக்கம் முதல் அதிரடியாக
ஆடினார். இவருக்கு இணையாக ஹசி ஆடவில்லை.ஹசி ஆட்டம் இழந்ததும் தோனி களமிறங்கியதும்
தவறான ஒன்றாக அமைந்துவிட்டது. பிராவோ அல்லது மார்கலை களம் இறக்கி இருக்கலாம்.
இவர்கள் விளாசுவதில் மன்னர்கள். தோனியும் ரன்களை குவித்தாலும் சில பந்துகள் வீணாகி
போனதால் ரன் விகிதம் குறைந்தது. குறிப்பாக சாகிப் ஹசனின் கடைசி ஓவரில் ரன்கள்
மிகவும் மந்தமாகின. இதனால் 200 என்ற இலக்கை எட்ட முடியாமல் போனது.
அடுத்து
பந்து வீச்சு பற்றி பார்ப்போம். கொல்கத்தா அணியின் பிஸ்லா சென்னையின் பந்து வீச்சை
பதம் பார்த்து அடிக்க சென்னை நொறுங்கிப் போனது. பவுலர்கள் யாரும்
தன்னம்பிக்கையுடன் பந்துவீசவில்லை! வைட் நோபால் என்று சொதப்பினர். ஹில்பெனான்ஸ்
ஓவரில் காம்பீர் வீழ்ந்ததுமே கோப்பை நமக்குத் தான் என்பது போல இருந்தது பந்து வீச்சு.
ஆனால்
சென்னையின் கனவை ஒற்றை மனிதராக தகர்த்தார் இளம் மன்வீந்தர் சிங் பிஸ்லா. இவருக்கு
சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. மெக்கலத்திற்கு பதில் இவரை களம் இறக்கி வென்று
காட்டி இருக்கிறது காம்பீர் அணி. காம்பீர் இல்லாத குறையை அவர் போக்கினார். ஆல்பி
மார்கலின் ஓவரில் அவர் தொடர்ந்து நான்கு பவுண்டரிகள் அடித்ததுமே புஸ்ஸாகிப் போனது
சென்னை. அந்த அடியில் இருந்து சுதாரித்துக் கொள்ளாமல் தொடர்ந்து சொதப்பியது.
மார்கலுக்கு பதில் பந்து வீச வந்த அஸ்வினும் பிராவோயும் விட்டு வைக்க
வில்லை பிஸ்லா. அவருக்கு கண்முன் நின்றது பந்து அல்ல கோப்பைதான்! கோப்பை கனவு
நினைவாக பந்துகள் சிக்சருக்கும் பவுண்டரிக்கும் பறந்தன. களைத்துபோனது சென்னையின்
பீல்டிங். ஜகாதியை தாமதமாகவே அழைத்த தோனி ஜடேஜாவை பயன் படுத்தவே இல்லை. பின்னர்
அவருக்கு எதற்கு அணியில் இடம். அவர் பேட்டிங்கும் செய்யவில்லை. பேட்டிங்கிலும்
சாதனையாளர் அல்ல. அவரை அணியில் சேர்த்ததற்கு காரணம் பந்து வீசத்தான் எனில் பந்தை
தராதது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.
ரெய்னாவையும் பந்து வீச சொல்லவில்லை தோனி. இக்கட்டான சமயங்களில் விக்கெட்
கைப்பற்றுவதில் ரெய்னா சமர்த்தர் என்பது தோனிக்கு தெரியாதா என்ன? 14 ஓவர்கள் வரை
விளாசவிட்டு பின்னர் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாக வியூகம் மாற்றினார் தோனி
அதற்குள் அந்த கப்பல் முக்கால் கரை தாண்டி விட்டது. அந்த ஆறு ஓவர்களையும் இவர்களே
மாற்றி மாற்றி வீசினர். விக்கெட்கள் சில விழுந்தாலும் ரன் ரேட் குறையாமல் பார்த்துக்
கொண்டார் காலிஸ். அவர் அவுட்டானதும் தான் சற்று தடுமாற்றம் ஏற்பட்டது.
பத்தொன்பதாவது ஓவரை வீசிய ஹில்பெனான்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினாலும் நோபால்
வீசியதோடு அல்லாமல் கடைசி பந்தில் ஒரு நான்கு ரன்களை விட்டுக் கொடுக்க மேட்ச்
முழுமையாக கொல்கத்தா பக்கம் மாறியது. இப்போதாவது தோனி சுதாரித்து இருக்க வேண்டும்.
ஒரு ஓவரில் ஒன்பது ரன்கள் என்ற நிலையில் தன்னம்பிக்கை இல்லா பிராவோ பந்து வீச
முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டன. ஆனால் அடுத்த
இரண்டு பந்துகள் பவுண்டரிகளாக மாற்றிய மனோஜ் திவாரி கொல்கத்தாவின் கோப்பை கனவை
நனவாக்கிவிட்டார்.
பாவம்
தோனி! பகல் கனா கண்ட திருப்தியோடு நடையை கட்டத் தொடங்கினார். அர்ப்பணிப்புடன் ஆடிய
பிஸ்லாவின் ஆட்டமும் காலிஸின் ஒத்துழைப்பும் காம்பீரின் கேப்டன் ஷிப்பும்
கொல்கத்தாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வெல்டன் கொல்கத்தா.
இந்த
சமயத்தில் ஒன்றை சொல்ல வேண்டும் ஒவ்வொரு பந்துக்கும் தன் அணியினரை உற்சாக
படுத்திவந்த ஷாருக்கானையும் பாராட்ட வேண்டும். இவரது நான்கு ஆண்டு கனவை
நனவாக்கினார் கவுதம் கம்பீர்! கம்பீரின் கம்பீர நடை தொடரட்டும்! அவர் இந்திய அணியை
வழிநடத்தும் நாள் தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.
சிறப்பாக
விளையாடிய ஒரு அணிக்குத்தான் கோப்பை சென்றிருக்கிறது என்பதில் ஐயமில்லை! கோப்பை
வென்ற அணியினருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தலாமே!
Comments
Post a Comment