காற்று வந்ததும் கரண்டு வந்தது! கலக்கல் கதம்பம்!

கடந்த இரண்டு மூன்று நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் மின் வெட்டு தளர்த்தப்பட்டுள்ளது. என்னடா இது கூடங்குளம் உற்பத்தியை துவங்கி விட்டதா? பன்னாட்டு நிறுவனங்கள் பிளைட் பிடித்து போய்விட்டதா? நாம் தமிழ்நாட்டில்தான் வாழ்கிறோமா என்று பல்வேறு சிந்தனைகள் தோன்றின. மறுநாள் செய்தித் தாள்களை பார்த்தபின் தான் விசயம் புரிந்தது. இந்த மின்வெட்டு தளர்வுக்கு காரணம் வாயுபகவான்! வாயுபகவானேதான்! தமிழக மக்கள் மேல் அவருக்கு என்னே கரிசணை! அவர்மட்டும் இந்த புதுக்கோட்டை இடைத் தேர்தலில் நின்றார் என்றால் கண்டிப்பாக மற்றவர்கள் டெபாசிட் இழப்பார்கள். அந்த அளவிற்கு புண்ணியம் செய்துள்ளார்!நமக்கெல்லாம் கோடை வறுத்தெடுக்காமலிருக்கு வீசு வீசு என காற்றை வீசித் தள்ளிவிட்டார். இன்னமும் வீசிக்கொண்டிருக்கிறார். இதனால் தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் எல்லாம் குஷியாகி மின் உற்பத்தியை துவக்க 1500 மெகாவாட் உற்பத்தி ஆகியுள்ளது. அதனால்தான் ஏதோ போகட்டும் என்று இரவிலும் மாலையிலும் மின்வெட்டை தளர்த்தி உள்ளார்களாம்! வருணபகவான் தான் காப்பாற்றவில்லை! வாயுபகவானாவது காப்பாற்றுகிறாரே! நன்றி கூறுவோம்! வீசட்டும் நன்றாக காற்று! ஒளிரட்டும் கொஞ்ச நாளைக்காவதுதமிழகம்!
     இந்த நேரத்திலாவாது தமிழகம் விழிக்கட்டும் பக்கத்து மாநில அரசுகள் எல்லாம் மின் உற்பத்தியை பெருக்க புதிய வழிமுறைகளை நாடிக் கொண்டிருக்கும் வேளையில் நாமும் விழித்தெழவேண்டாமா? அனல் புனல் அணு இதை தவிர்த்து வேறு வழிகளில் மின்சாரம் தயாரிக்க முனைய வேண்டாமா? ஐயா நத்தம் விஸ்வநாதன் அவர்களே! ஆற்காட்டாரே பரவாயில்லை என்ற அளவிற்கு உள்ளது உங்களது மின் ஆளுமை! விழித்தெழுங்கள்! அம்மா புகழ் பாடுவது இருக்கட்டும். கொஞ்சம் தமிழ்நாட்டு மக்களையும் கவனியுங்கள்! அம்மாவை வெளிச்சம் போட்டு காட்டுவது இருக்கட்டும் தமிழகத்தின் இருட்டை வெளிச்சமாக்குங்கள் அம்மா தானாக ஒளிர்வார்! அண்டை மாநிலங்களுடன் மோதல் போக்கை தவிர்த்து மின் வெட்டை முதலில் சீர் செய்யுங்கள் மிக்சியும் கிரைண்டரும் அப்புறம் தரலாம்! ம்ம்! நான் சொல்வதை கேட்கவா போகிறார்கள்! ஏதோ செவிடன் காதில் என்னால் ஆன அளவிற்கு ஊதியாகிவிட்டது அப்புறம் அவர்கள் பாடு மக்கள் பாடு!

  இந்த மதுரை ஆதினம் ஏதாவது செய்து மீடியாவில் பரபரப்பாக வலம் வருவார்! இப்போது அவர் செய்திருப்பது பெரும் கேலிக் கூத்தாகி இருக்கிறது. அடுத்த மதுரை ஆதினமாக நித்தியானந்தாவை முடிசூட்டி இருக்கிறார் ஆதினம். இந்து அமைப்புக்கள் இதை எதிர்த்து அறைகூவல் விடுக்க கூலாக இதெல்லாம் நான் எதிர்பார்த்ததே என்று அமைதியாக புன்னகை சிந்துகிறார் ஆதினம்.
    லீலைகள் புரிந்த ரஞ்சிதானந்தாவும் சாரி சாரி! நித்யானந்தாவும் இந்த பதவியை ஏற்றுக் கொண்டு ஏதோ முதல்வர் மாதிரி அறிக்கைகளையும் அன்பளிப்புக்களையும் அள்ளி வீசுகிறார்! மதுரை ஆதினத்திற்கு ஒரு கோடி வழங்குவதாகவும் ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு கும்பாபிஷேகம் விரைவில் செய்யப் போவதாகவும் கூறிய அவர் தங்க செங்கோலை பழைய ஆதினத்திற்கு அன்பளிப்பாக அளித்துள்ளார்.
   இவர்கள் அடிக்கும் கூத்திற்கு வரம்பே இல்லையா? எனக்கு முதலில் இந்த ஆதினங்களையே ஆகாது. கோயில் சொத்துக்களில் குடும்பத்தை நடத்தி வருபவர்கள் இவர்கள் என்பேன்! இவர்களிடம் யார் கோயில்களை நிர்வகிக்க கொடுத்தார்கள் என்று எனக்கு புரியவில்லை! கோயில்ன் தர்மகர்த்தா என்பவன் யார்? குடும்பத்தின் தலைவன் கர்த்தா எனப்படுகிறான். அப்படியானால் தர்மகர்த்தா? தர்மங்களை செய்யும் தலைவன் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தானே! அப்படியானால் கோயிலுக்கு தன்னால் முடிந்த தர்மங்களை செய்வதோடு பிறர் செய்யும் தர்மங்களையும் காத்து கோயிலை பராமரித்து பூஜைகள் ஒழுங்குற நடைபெற செய்யவேண்டியவனே தர்மகர்த்தா! ஆனால் என்ன நடக்கிறது? எந்த தர்ம கர்த்தா தன் சொத்துக்களை கோயிலுக்கு எழுதி கொடுக்கிறார்? கோயிலின் சொத்துக்களை அபகரிக்கவே இன்று அந்த பதவி பயன்படுகிறது. அது போலவே ஆதினங்களும் ஆகி வருகின்றன.
    கோயில்களை நிர்வகித்து பராமரிக்கவே ஆதினங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது அவை அந்தந்த ஆதினங்களின் சொத்தாகி அவர்கள் அனுபவிக்க வசதியாகிப் போய்விட்டது. தலையில் மொட்டையும் ருத்திராட்சமும் காவி வேடம் தரித்து கோயில் சொத்துக்களை கொள்ளையடித்து வருகின்றனர் பல ஆதினங்கள்! ஆண்டவன் சன்னதியில் இவர்களுக்கு முதல் மரியாதை! ஆண்டவனிடம் கூட பயப்பட தேவையில்லை! இவர்களை பகைத்து கொண்டு ஊழியர்களால் பணி செய்ய முடியாத நிலை என்று ஆதினங்களின் அராஜகம் அதிகமாகி வரும் வேளையில் இந்த கேலிக் கூத்தை நிகழ்த்தி பக்தர்களின் மனதை நோகடித்து இருக்கிறார் மதுரை ஆதினம்.
   இதற்கு மற்ற 13 ஆதின கர்த்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை வாபஸ் பெறவேண்டும் இல்லையேல் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுக்க தான் சட்ட திட்டங்களின் படியே நித்தியானந்தாவை ஆதினமாக்கியுள்ளதாக கூறி வருகிறார் மதுரை ஆதினம்.
   தன்னை எதிர்க்கும் ஆதினங்களின் முன்னால் தன் பக்தர்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா! அதில் ரஞ்சிதாவும் கலந்து கொள்வாரா என்பது பற்றி அவர் எதுவும் சொல்ல வில்லை!

இந்தியாவின் ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கு ஒரு தேர்தல் அதில் கட்சிகளின் மோதல் என்பது விசித்திரம்தான்! அதாங்க ஜனாதிபதி பதவி! இது ஒரு அலங்காரமான பதவிதான்! மன்மோகன் சிங்கை போல தலையாட்டும் பதவிதான்! இதற்கு வரும் மாதத்தில் தேர்தல் வரும் போல் உள்ளது. இதற்கு தன்னுடைய ஆதரவாளர்களில் ஒருவரை நியமித்து லாபம் சம்பாதிக்க எண்ணுகிறது காங்கிரஸ் கட்சி! பாரதிய ஜனதா கூட்டனியில் ஒற்றுமை இல்லை! அது அப்துல் கலாமை முன்னிறுத்த அதன் மற்றொருகூட்டணியான அகாளிதளம் சமாஜ்வாடி போன்றவைகள் அதை ஆதரிக்க முன் வரவில்லை! ஒருமனதாக தேர்ந்தெடுத்தால் நான் ரெடி என்கிறாராம் கலாம்! இருக்கலாம்தான்! ஆனால் என்னை பொறுத்தவரையில் அவரை பலிகடா ஆக்குவதில் விருப்பமில்லை! இது உயர்ந்த பதவி! கவுரவமான பதவி என்ற காலமெல்லாம் போய் வெறும் ஊர் சுற்றி பார்க்க உதவும் ஒரு பதவி என்று இப்போதைய ஜனாதிபதி அம்மையார் உருவாக்கி வைத்திருக்க அந்த பதவியை மீண்டும் அலங்கரிக்க வேண்டுமா கலாம்! கொஞ்சம் யோசிக்கலாம்தானே!
 



 அடுத்த அதிரடியாக சச்சின் டெண்டுல்கருக்கு 40வது வயது பரிசாக ராஜ்யசபா எம்.பி பதவி தந்து கவுரவிக்கிறது மத்திய அரசு! இதை சச்சின் ஏற்க மாட்டார் என்று பலரும் நினைக்க விருப்பமுடன் ஏற்றுக் கொண்டிருக்கும் சச்சின் நான் விளையாட்டு வீரன் தான்! அரசியல் வாதி அல்ல! இந்த பவுன்சரையும் சமாளிப்பேன்! என்று கூறுகிறார். உண்மையில் பவுன்சர் பந்துகளை அமர்நாத்திற்கு பிறகு யாரும் சரியாக தண்டித்தது இல்லை! சச்சின் இந்த பதவியை ஏற்றுக் கொள்வதில் அவரது சகாக்களுக்கு கூட விருப்பமில்லை! ஆனால் சச்சினுக்கு விருப்பம்தான்! எப்படியோ ஒரு நல்ல விசயம் நடந்து விளையாட்டு துறை முன்னேறினால் சரி!

கட்டாயம் அரையிறுதிக்கு செல்வோம் என்கிறார் சென்னை சொதப்பல் கிங்ஸின் கேப்டன் தோனி! உண்மையில் அவருக்கு இந்திய அணியின் கேப்டனாக இருப்பதை விட இந்த அணியின் கேப்டனாக இருப்பதில் விருப்பம் தான் போல! சென்னை அணியின் செயல்பாடுகளை எடுத்துக் கொண்டால் இதுவரை ஒரு தொடரிலும் சிறப்பாக இருந்தது இல்லை! எல்லாமே வெத்து வேட்டுக்கள் தான்! முதலில் ஹைடனும் பின்னர் மைக் ஹசியும் கை கொடுக்க எப்படியோ தட்டு தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்து அதிர்ஷ்டத்தால் இருமுறை கோப்பை தட்டிவிட்டது சென்னை! இந்த முறை அந்த அதிர்ஷ்டம் கை கொடுக்கும் என நான் நினைக்கவில்லை! இந்த ரவீந்திர ஜடேஜாவிற்கு பத்து கோடி அதிகம்தான்! என்ன செய்வது தோனியின் செல்ல பிள்ளை!அவர் இந்தியா சிமெண்ட் சீனிவாசனுக்கோ தோனி செல்ல பிள்ளை! ரசிகர்கள் நாம் தான் கிடந்து அழுகிறோம்! அவர்கள் தோற்றாலும் ஜெயித்தாலும் பணத்தை சம்பாதிக்கிறார்கள்! அதுவே நாம் வென்றாலும் தோற்றாலும் நேரத்தையும் பணத்தையும் இழந்து கொண்டிருக்கிறோம்! அதனால்தான் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதை தவிர்த்து வருகிறேன்! பாழாப்போன அரசு கேபிளில் அந்த சோனி மேக்ஸ் சரியா தெரியலைங்கிறது வேற விசயம்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2