ஹாட்ரிக் கோப்பை அள்ளுமா சி.எஸ்.கே! ஓர் அலசல்!

 ஹாட்ரிக் கோப்பை அள்ளுமா சி.எஸ்.கே! ஓர் அலசல்!

சென்னை சூப்பர்கிங்ஸ் ஐபிஎல் போட்டிகளில் துவக்கத்தில் இருந்தே ஒரு அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது. இதுவரை நடந்த 5 ஐபிஎல் தொடர்களில் நான்காவது முறையாக பைனலுக்கு வந்துள்ளது. அதில் இரண்டுமுறை கோப்பை வென்றுள்ளது. ஒருமுறை முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்சிடம் சிறு வித்தியாசத்தில் கோப்பையை இழந்தது. இதனால் தான் ஐபிஎல் அரங்கில் சென்னை அணிக்கு எப்போதுமே ஒரு மரியாதை இருக்கிறது என்று சொன்னேன்.
      இந்த முறை அனைவரின் கணிப்புக்களையும் பொய்யாக்கி அதிர்ஷ்ட வாய்ப்பினால் ப்ளே ஆப் சுற்றினுள் உள்ளே நுழைந்த அணி தன்னை பலம் வாய்ந்த அணியாக காட்டிவருகிறது. இதற்கு முன் மும்பை டெல்லி அணிகளை எதிர்கொண்ட விதத்திற்கும் ப்ளே ஆப்பில்  எதிர்கொண்ட விதத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.
    நாக் அவுட் வாழ்வா சாவா? என்ற நிலையில் சென்னை எப்போதுமே ஜொலிக்கும். அந்த ஜொலிப்பு கடந்த இரண்டு ஆட்டங்களில் பிரமாதமாக இருந்தது. கேப்டன் தோனி மும்பைக்கு எதிராக சூறாவளி ஆட்டம் ஆடி அசத்தி இழந்த பார்மை மீட்டுவிட்டார். டெல்லி அணியையும் இவரது ஆட்டம் மிரட்டிவிட்டது. முரளி விஜய் தொடரின் துவக்கம் முதல் மோசமாக ஆடி அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டு இருந்தவர். டெல்லிக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து மிக அதிவேக சதம் அடித்து அசத்தி தன் திறமையை நிரூபித்துக் காட்டினார்.
    ஆல்ரவுண்டர் பிராவோயும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. இக்கட்டான நேரங்களில் பலமுறை கை கொடுத்த அவர் கடந்த இரண்டு போட்டிகளில் வேகமாக ரன் குவித்தவிதமும் பீல்டிங்கில் கலக்கிய விதமும் கண்முன்னே நிற்கிறது. பவுலிங்கிலும் சிறப்பாக செயல்படும் இவர் சென்னையின் முத்தான வீரர்.
    டுபிளசிக்குப் பதில் களமிறங்கும் சக ஆஸ்திரேலியர் ஹசியும் சிறப்பாகவே ஆடுகிறார். ஆல்பி மோர்கல் ஹில்பெனான்ஸ்,  போன்ற வெளிநாட்டு வீரர்களை குறை சொல்ல முடியாது சிறப்பாகவே செயல்படுகிறார்கள். ஆனால் பத்துகோடி கொடுத்து வாங்கிய ரவீந்திர ஜடேஜாவின் நிலைதான் பரிதாபம். இவருக்கு என்ன நேர்ந்தது என்றே தெரியவில்லை. ராஜஸ்தான் ராயல்சின் கண்டுபிடிப்பான இவர் முதல் இரண்டு தொடர்களில் கலக்கியதை போல இப்போது ஆடுவது இல்லை. பந்து வீச்சும் சரியில்லை. பேட்டிங்கும் சரியில்லை. ஆனால் கேப்டனின் நம்பிக்கையை பெற்றிருப்பதால் அணியில் நீட்டிக்கிறார்.
     இவரைத் தவிர தமிழகத்தின் அஸ்வின்! இவரது ஆட்டம் இந்த தொடரில் புஸ் ஆகிவிட்டது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இவர் மீது இருந்தது. ஆனால் இவரது பந்து வீச்சு எடுபடவில்லை! ரன்குவிப்பும் சுமார் ரகம்தான். இருந்தாலும் இவரும் கேப்டனின் செல்லப்பிள்ளையாக இருப்பதால் அணியில் தொடர்கிறார்.சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர். இவரது ஆட்டமும் இந்த தொடரில் அவ்வளவாக எடுபடவில்லை! சிறந்த ஆட்டக்காரர்கள் இருந்தாலும் ஜொலிக்காமையால்தான் ப்ளே ஆப் சுற்றிற்கு நேரடி தகுதி பெறாமல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை சென்னைக்கு ஏற்பட்டது.
    ஆனால் இப்போது நிலை தலைகீழாக மாறியுள்ளது. மற்ற அணியில் நட்சத்திரங்கள் சென்னைக்கு எதிராக ஜொலிக்க மறக்கின்றனர். சென்னை அணியில் ஜொலிக்காத நட்சத்திரங்கள் ஜொலிக்க ஆரம்பித்து விட்டனர். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற சென்னைக்கு இது மகிழ்ச்சியான விஷயம்தானே! நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது சென்னை அணி.
    எதிரணியை பொறுத்தவரை பலமும் பலவீனமும் நிறைந்த அணியாக காட்சி தருகிறது. கங்குலி தலைமை ஏற்று நடத்திய போதும் சரி! மெக்கல்லம் தலைமை ஏற்றபோதும் சரி தோற்றுக் கொண்டே இருந்த அணியை சென்றமுறை கம்பீர் ப்ளே ஆப் சுற்று வரை முன்னேற்றினார். இந்த முறை அதையும் தாண்டி பைனலுக்கு அழைத்து வந்துள்ளார். இது அவரது தனிப்பட்ட சாதனை என்றே கூறலாம்.
    அணியில் ஆல் ரவுண்டர்கள் காலிஸ். யூசுப் பதான் இருந்தாலும் கேப்டன் கம்பீரின் பேட்டிங் தான் பலம் இதுவரை 588 ரன்கள் குவித்துள்ளார் இவர். இவர் எழுச்சியில்தான் பல போட்டிகளை வென்றுள்ளது கொல்கத்தா.இவரைத் தவிர காலிஸ் மிடில் ஆர்டரில் களமிறங்கும் மனோஜ் திவாரி ஓரளவுக்கு கை கொடுக்கலாம். இந்த முறை தொடக்கத்தில் இருந்தே சொதப்பி வரும் யுசுப் பதான் கடந்த சில போட்டிகளாக எழுச்சி பெற்றுவருவது அணிக்கு ஒரு நற்செய்தி.
     பந்து வீச்சை பொறுத்தவரை திறமையான வேகப்பந்து வீச்சாளார்கள் அணியில் குறைவுதான். ஆல்ரவுண்டர் காலிஸ், சாகிப் ஹல் ஹசன், பாலாஜி போன்றோரையே வேகத்தில் நம்பியுள்ளது அணி. ஆனால் சுழல் மன்னன் சுனில் நரைன் தான் அணியின் துறுப்பு சீட்டாக உள்ளார். சென்ற ஐபிஎல்லில் அஸ்வினின் சுழல் எப்படி சுழன்று எதிரணியை தாக்கியதோ அப்படி தாக்குகிறது சுனிலின் சுழல். இதுவரை நடந்துள்ள போட்டிகளில் 24 விக்கெட் வீழ்த்தி தொடரில் விக்கெட் வீழ்த்தியவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
    பங்கேற்ற 16 சுற்று போட்டிகளில் 10 ல் வென்று ப்ளே ஆப் சுற்றில் டெல்லியை வீழ்த்தி கோப்பை கைப்பற்ற தயாராக உள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். விட்டுக் கொடுக்க மறுத்து மூன்றாவது முறையாக கோப்பைக்கு போராடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இரு அணிகளின் மோதல் இன்றைய விறு விறு ஷோவாக அரங்கேறப்போகிறது.
    இன்றைய இரவுப் பொழுது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு பெரும் விருந்தாக அமைய உள்ளது. கலக்கலான போட்டியை கண்டு களிக்க தயாராவோம்!

(படங்கள் பேஸ்புக்கில் சுட்டது!)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்தலாமே! திரட்டிகளில் வாக்களித்து பிரபல படுத்தலாமே! நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2