வென்று காட்டிய தோனி!


வென்று காட்டிய தோனி!

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் நேற்று களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று. வாழ்வா சாவா? என்ற நிலையில் அணியில் பெரிதாக மாற்றம் எதுவும் செய்யாமல் களம் இறங்கினார் கேப்டன் தோனி!.இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வந்தாலும் அதிகம் பேசப்படும் டீமாக சென்னைதான் இருந்து வந்துள்ளது. ட்வீட்டரிலும் சென்னை டீமுக்குத் தான் ஆதரவு அதிகம் இருந்தது. போட்டி தொடங்கியபோது 43 சதவீத ஆதரவு சென்னைக்கு இருந்தது. அது சென்னை விளையாடி முடித்ததும் 69 சதவீதமாக அதிகரித்தது.
   ஆட்டத்தின் முதல் ஓவரில் ரன் எதுவும் இல்லை! இரண்டாவது ஓவரிலும் ரன் இல்லை. பின் முரளிவிஜய், ரெய்னா அடுத்தடுத்து ஆட்டமிழக்க சென்னை ரசிகர்கள் உள்ளம் கலங்கித்தான் போயிருந்தது. ஆனால் சென்னை வீரர்கள் கலங்கவில்லை! இன்று வென்றே தீருவது என்ற தீர்மானத்தில் இருந்தார்கள் போலும். பத்ரிநாத்தும் ஹசியும் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த 9ஓவர்கள் முடிவில் 47 ரன்களுக்கு இரண்டுவிக்கெட் என்ற நிலையில் இருந்தது சென்னை அணி ஒரு 120 அல்லது 130 ரன்கள் எடுத்தால் அதிகம் என்ற நிலையில் இருந்த அணி அதிரடியில் இறங்கியது. பத்ரிநாத் அதிரடி காட்ட ரன் குவிந்தது. மறுமுனையில் ஹசியும் சிக்சர் அடித்து கலக்கினார். இவர்கள் அடுத்தடுத்து வெளியேற கலக்கம் ஏற்பட்டது.
     தோனி இந்த சமயத்தில் கலக்கலாக ஆடினார். தன் மீதான விமரிசனங்களை தவிடு பொடியாக்கிய அவர் இந்த ஐபிஎல்லின் பெரிய சிக்சரை விளாசினார். ஜடேஜா தேவையில்லாமல் அவுட்டாக பிராவோ  தோனிக்கு சிறப்பாக ஒத்துழைப்பு தந்தார். இன்று தோனி ஆடிய ஆட்டம் பலநாட்களுக்கு கண் முன் நிற்கும். இந்த ஆட்டத்தில் எலிக்காப்டர் ஷாட் மூலம் மலிங்கா பந்தில் சிக்ஸ் அடித்தது மறக்க முடியாத ஒன்றாகும். கடைசி ஓவரில் பிராவோ அடித்த சிக்சரும் மறக்க முடியாத ஒன்று.இருபது பந்துகளில் 51 ரன்கள் எடுத்த தோனி அணி 187 ரன்கள் எடுக்க மிக முக்கிய காரணமாக இருந்தார்.
     அடுத்து களம் புகுந்த மும்பை அணியில் ஸ்மித் மட்டுமே சற்று வாண வேடிக்கை காட்டினார். அவர்கள் மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர் பிளே ஓவர்களில் ஜகாதி சிறப்பாக பந்து வீசி விக்கெட் வீழ்த்தி ரன்களை கட்டுப்படுத்தினார். சென்னை அணியின் பீல்டிங்கும் சிறப்பாக அமைந்து இருந்தது. ரெய்னா அருமையான இரு கேட்ச்களை பிடித்தார். மொத்தத்தில் மும்பை அணி திட்டமிடாமல் ஏனோ தானொவென்று விளையாடியது போல தோன்றியது. இதற்கு சச்சினின் ரன் அவுட்டும் ஒருகாரணம். முதல் நான்கு ஓவர்களில் ஸ்மித்தும் அவரும் சிறப்பாகவே செயல்பட்டனர். ஜகாதியின் அந்த ஓவரில் அவர் அடித்த பந்து பாயிண்ட் திசையில் பிடிக்கப்பட்டது. அவர் ஓடியிருந்தால் ஒரு ரன் எளிதாக எடுத்திருக்கலாம். அவர் பந்தை பார்த்துக் கொண்டு இருக்க மறுமுனையில் ஸ்மித் ஓடிவந்து விட அவருக்காக தன் விக்கெட்டை தியாகம் செய்தார் சச்சின். இது மாபெரும் தவறாக அமைந்து விட்டது. அடுத்த ஓவரிலேயே ஸ்மித்தும் அவுட்டாகிவிட்டார். ஸ்மித் ஒரு அதிரடி வீரர்தான். அவர் பங்கிற்கு ஒரு முப்பது ரன்கள் எடுத்து விட்டார். சச்சின் அப்படியில்லை. இவர் தன் விக்கெட்டை விட்டு கொடுக்காமல் இருந்திருந்தால் அடுத்து வந்து ஆடுபவர்களுக்கு ஒரு தைரியம் இருக்கும்.
    சென்னை அணியில் அப்படித்தான் நடந்தது. பத்ரி-ஹசி, மற்றும் தோனி –பிராவோ அழகான கூட்டணி அமைத்தது. விரைவில் விக்கெட் வீழ்ந்த போதும் நிலையாக ஆடி ரன் சேர்த்தது. பின் வரிசையில் தோனி- பிராவோ அதிரடியாக ரன் குவிக்க  வசதியாக இருந்தது. இந்த முறையை மும்பை அணி பின்பற்றவில்லை! அது நமக்கு சாதகமாக அமைந்து விட்டது.
   அனைவரும் அதிரடியாக ரன் குவிக்க நினைத்தார்களே தவிர நிலைத்து ஆடத் தவறி விட்டார்கள். எப்படியோ இந்த போட்டியில் சிறப்பான வியூகம் அமைத்து வென்று காட்டி விட்டார் தோனி. இனி டெல்லியுடன் அடுத்த போட்டியில் இந்த வெற்றி நடை தொடருமானால் மூன்றாவது முறை சாம்பியனாகி சாதிக்கலாம் சென்னை!
   போட்டியில் அம்பாதி ராயுடுவின் கேட்ச்சை பிடித்த விஜய் ஆடிய டேன்ஸ் சுவாரஸ்யமாக இருந்தது. அதே போல் போலார்டு அவுட்டாக பிராவோ அவருக்கு பிளைட் ஏறுமாறு சைகையில் சொன்னது நல்ல காமெடி! ஒரு சுவாரஸ்மான விறுவிறுப்பான போட்டியாக அமைந்தது நேற்றைய போட்டி.
   ஆனாலும் இந்த ரவீந்திர ஜடேஜாவின் மேல் நம்பிக்கை வைக்கிறாரே தோனி அது ஏன் என்று சுத்தமாக புரியவில்லை! பத்து கோடிக்கு வாங்கப்பட்ட அவர் நேற்றும் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை! அவருக்கு பதில் இன்னொரு வீரருக்கு வாய்ப்பு வழங்கினால்தான் என்ன? தோனிதான் சொல்ல வேண்டும்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்குவியுங்கள்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2